ஸ்பெக்ட்ரம் ஊழல் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியதா?

சட்டசபை தேர்தலில், ஸ்பெக்ட்ரம் ஊழல் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை, தேர்தல் முடிவுகளில் இருந்து அறியலாம். ஆனாலும், எதிர்பார்த்த அளவுக்கு இந்த ஊழல் விவகாரம், பெரியளவில் எதிர்க்கட்சியினரின் பிரசாரத்தில் பேசப்படாதது பெரிய குறையாக விளங்குகிறது.

நாடு சுதந்திரமடைந்ததற்கு பின், நடந்த ஊழல்களில் மிகப்பெரிய இழப்பு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது ஸ்பெக்ட்ரம் ஊழல். இந்த ஊழல் மூலம் நாட்டிற்கு, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை, பார்லிமென்டில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டது.மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க.,வுக்கு, இந்த ஊழல் மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்தது. மத்திய அரசுக்கு ஆதரவு என்ற அஸ்திரத்தை கையில் எடுத்து, இப்பிரச்னையை தி.மு.க., அரசியல் ரீதியாக சமாளித்தது.

தமிழக சட்டசபை தேர்தலில் இந்த ஊழல் விவகாரம், எதிர்க்கட்சியினரின் பிரசாரத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,- தே.மு.தி.க., – கம்யூ., கட்சிகள் பிரசாரத்தில் இந்த ஊழலை குறிப்பிட்டாலும், மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துமளவுக்கு எடுத்துச் சொல்லவில்லை என்ற குறையுண்டு.

தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா பேசிய போது, “ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய கருணாநிதிக்கு, மக்கள் என்ன தண்டனை தரப்போகின்றனர் என்பதை நாடு எதிர்பார்க்கிறது’ என குறிப்பிட்டார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தின் போது, “தி.மு.க.,வின் கொள்கையே டில்லி சிறையில் உள்ளது. அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலரான முன்னாள் மத்தியமைச்சர் ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி, சிறையில் உள்ளார்’ என்றார்.
பா.ஜ., தலைவர் அத்வானி, திண்டுக்கலில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசியபோது, “ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். என் அரசியல் வரலாற்றில், நேரு முதல் மன்மோகன் சிங் வரையிலான பிரதமர்களை பார்த்து விட்டேன். இந்த ஊழல் போல எந்த ஊழலையும் கண்டதில்லை’ என்றார்.

பா.ஜ., முன்னாள் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தனது தமிழக பிரசாரத்தின் போது, “ஸ்பெக்ட்ரம் ஊழல் சட்டசபை தேர்தலில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை, தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்’ என்றார்.

மார்க்சிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் போன்றோர் இந்த ஊழல் குறித்து பிரசாரம் செய்தது, மக்களிடம் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.

தேர்தல் பிரசாரத்தில் பெரியளவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் இழப்பு குறித்து, “அக்கு வேறு ஆணி வேறாக’ அலசி யாரும் பேசவில்லை. தேர்தலுக்கு முன்பு இது குறித்து பேசிய வைகோ களத்தில் இல்லை. ஆளுங்கட்சி தரப்பில், இப்படியொரு ஊழல் பிரச்னை இல்லை என்பது போல், தி.மு.க., தலைவர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட யாரும், தங்களது பிரசாரத்தில் எந்த பதிலும் அளிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஸ்பெக்ட்ரம் என்ற வார்த்தையை தி.மு.க., தலைவர் தனது தேர்தல் பிரசாரத்தில் உச்சரிக்கவே இல்லை.

இப்பிரச்னை தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்விகளுக்கு பதிலளித்து, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேசியபோது, “ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து எந்த கட்சியுமே தேர்தலில் பேசவில்லை. நாங்கள் தி.மு.க., அரசு சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறோம். எதிர் அணியினர் கருணாநிதியையும், குடும்பத்தினரையும் திட்டி ஓட்டு கேட்கின்றனர்’ என்றார்.

அதே நேரத்தில், இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. புதிதாக ஓட்டுப் போட்ட, இளம் வாக்காளர்கள் மத்தியில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. அதோடு, “ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை’ என்று நினைக்கும் மேல்தட்டு வர்க்கத்தினரும், இந்த தேர்தலில் வரிசையில் நின்று ஓட்டளித்துள்ளனர்.ஓட்டுப்பதிவுக்கு முன்பாக, டில்லியில் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரதமும், தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டம், ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என்ற எண்ணத்தை பரவலாக ஏற்படுத்தியதும், தமிழகத்தில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கக் காரணம் என்ற கருத்தும் உள்ளது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s