site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

ஓட்டு இயந்திரங்கள் அறை முன் ‘துணை ராணுவம்’…

Posted by sambala87(சூரியன்) on April 18, 2011

“”அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன், துணை ராணுவப் படையினர் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,” என்று பிரவீன்குமார் தெரிவித்தார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:இந்த தேர்தலில் நான் இங்கு இருந்தேன். அவ்வளவு தான். மற்ற யார் இருந்தாலும் இதைத் தான் செய்திருப்பர். ஒட்டுமொத்த குழுவின் உழைப்பால் தேர்தல் அமைதியாக நடந்துள்ளது. அனைத்து கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள், தாசில்தார்கள், பறக்கும்படையினர் ஆகியோரது ஒத்துழைப்பு இல்லாமல் இது நடந்திருக்காது.இறுதியில், இந்த தேர்தலில் வாக்காளர்கள் தான் கதாநாயகன்கள். காரணம், அவர்கள் பயமின்றி வந்து ஓட்டுப் போட்டதால் தான், அதிகளவு சதவீதம் பதிவாகி உள்ளது.
ஓட்டுச்சாவடிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட அனைத்து மின்னணு இயந்திரங்களும், அந்தந்த ஓட்டு எண்ணும் மையங்களில் உள்ள, “ஸ்ட்ராங் ரூமில்’ வைக்கப்பட்டுள்ளன. ஓட்டுஎண்ணிக்கை மையங்கள் பாதுகாப்பாக உள்ளன.
ஒவ்வொரு மையத்தின் உள்வட்டத்தில், அதாவது இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி, துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் இருப்பர். அதற்கு அடுத்த சுற்றில், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் காவல் காப்பர். அதன்பின், உள்ளூர் போலீசார் இருப்பர். அந்தந்த தொகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவப் படையினர் நேற்று, ஓட்டு எண்ணிக்கை மையங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மொத்தம் வந்த 240 கம்பெனி துணை ராணுவப் படையினரில், 27 கம்பெனிகள் மட்டும், ஓட்டு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படுவர். மற்ற கம்பெனிகளில் சில, தங்களது இருப்பிடத்துக்கு திரும்புகின்றன. மற்றவை, மேற்குவங்க தேர்தல் பாதுகாப்புக்கு அனுப்பப்படுகின்றன.பெரிய மாவட்டங்களில் உள்ள ஓட்டு எண்ணிக்கை மையங்களில் ஒரு கம்பெனி துணை ராணுவமும், சிறிய மாவட்டங்களில் பாதி கம்பெனி துணை ராணுவமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும். இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் வெளியே துணை ராணுவப் படையினர் இருப்பர். அதன் கதவை நோக்கி, கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். அவை லேப்-டாப்பில் இணைக்கப்பட்டிருக்கும். எந்த நேரம் வேண்டுமானாலும் அதில் பதிவாகி உள்ளதை காணலாம்.

மேலும், ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு வருவோர் பற்றிய விவரங்கள் பதிவு செய்ய, “லாக் புக்’ அங்கு வைக்கப்படும். மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி., பார்வையாளர் போன்ற யார் வந்தாலும், அந்த புத்தகத்தில் கையெழுத்திட வேண்டும். வேட்பாளர்கள் ஒரு ஏஜன்ட்டை அங்கு வைத்திருக்கலாம். சுழற்சி முறையில் அதை மாற்றிக் கொள்ளலாம்.ஓட்டு எண்ணும் மையங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க, மின்வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரிகளது தொலைபேசி எண்களும் வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. எனவே, எங்காவது ஏதாவது பிரச்னை பற்றி அறிந்தால், உடனே தகவல் தெரிவிக்கலாம்.

தொகுதி தேர்தல் அதிகாரி, தினமும் காலையும், மாலையும் ஓட்டு எண்ணிக்கை மையத்தை பார்வையிட வேண்டும். மாவட்ட கலெக்டர் தலைமையிடத்தில் இருந்தால் தினமும் ஒரு முறையும், இல்லாவிட்டால் வாரத்துக்கு மூன்று முறையும் பார்வையிட வேண்டும். இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை, இரண்டு பூட்டுக்கள் கொண்டு பூட்டப்பட்டுள்ளன. இதன் சாவி தொகுதி தேர்தல் அதிகாரியிடமும், மற்றொன்று பார்வையாளரிடமும் இருக்கும்.
கடலூர் மாவட்டத்தில் நடக்கவுள்ள மறுதேர்தலை பார்வையிட, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேந்திரன் அங்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.தேர்தல் பணியில் ஈடுபடாத ஊழியர்களை இடம்மாற்றம் செய்வதற்கு எவ்வித தடையும் இல்லை. எனினும், பதவி உயர்வு அளிக்கக் கூடாது. எந்த தொகுதியிலும் தேர்தலை ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. எனினும், ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்தார்.

ரஜினி யாருக்கு ஓட்டு போட்டார்?””நடிகர் ரஜினிகாந்த் ஓட்டு போட்டது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன,” என்று பிரவீன்குமார் தெரிவித்தார்.

இதுபற்றி தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது:நடிகர் ரஜினிகாந்த் ஓட்டுப் போடும் போது, அதன் ரகசியத்தை காக்காமல் யாருக்கு ஓட்டுப் போட்டார் என்பது தெரிந்ததாக கூறப்பட்டது. இதுபற்றி, அந்த ஓட்டுச்சாவடியில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகள், ஆய்வு செய்யப்பட்டன. மேலும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான வீடியோ தொகுப்புகளும் ஆராயப்பட்டன.இதில் எதிலும், அவர் யாருக்கு ஓட்டு போட்டார் என்பது தெரியவில்லை. எனினும், அந்த காட்சிகள் மற்றும் ஆவணங்கள் தேர்தல் கமிஷனின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதிகளவு கூட்டம் வந்ததால், அதை தேர்தல் அதிகாரியால் தடுக்க முடியாமல் போயிருக்கலாம்.
இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்தார்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: