தேர்தல் முடிவை தீர்மானிக்கும் நதிநீர் பிரச்னை

தமிழக தேர்தலில் எதிரொலித்து வரும், விலைவாசி உயர்வு, ஊழல், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகள் தவிர, சத்தமில்லாத யுத்தமாக, தண்ணீர் பிரச்னையும் விஸ்வரூபமெடுத்துள்ளது. சாயக்கழிவுகளால் ஆறுகள் விஷமாவதும், நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத குடிநீர் திட்டங்களும், மணல் கொள்ளை போன்ற நிலத்தடி நீருக்கு வேட்டு வைக்கும் விவகாரங்களும், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்க உள்ளன.

திருப்பூரில் முறையான அனுமதி பெறாமல் இயங்கிவந்த சாயப்பட்டறைகள், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூடப்பட்டுவிட்டன. பின்னலாடை தொழிலுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பின்னடைவு, தொழிலாளர்களின் போராட்டமாக, அதிருப்தியாக வெடித்துள்ளது. மற்றொரு புறத்தில், நிலத்தடி நீரை பாதுகாக்க, விவசாயத்துக்கு உயிர்நீர் கிடைக்க, இந்த நடவடிக்கை தொடர வேண்டுமென விவசாயிகள் தரப்பில் குரல் எழுந்துள்ளது. இதில், எந்தத் தரப்பை திருப்திபடுத்தினாலும், எதிர்த் தரப்பின் ஓட்டு சிதறிவிடும் என்பதால், இந்த நீண்டகால பிரச்னைக்கு, நீண்டகாலமாகவே தீர்வு காணாமல், காலம் கடத்தி வந்தன கழகங்கள். இதனால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒய்யாரமாய் நடைபயின்ற நொய்யல் ஆறு, சாயக்கழிவுகளால் முடமாக்கப்பட்டு, தனது ஜீவனை இழந்துவிட்டது. பாசனத்திற்காக கட்டப்பட்ட ஒரத்துப்பாளையம் அணை, சாயப்பட்டறை கழிவுகள் சங்கமிக்கும் கழிவறையாக மாறியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம், குமாரபாளையத்தில் புதிதாக முளைத்துள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு, சுத்திகரிப்பு செய்யப்படாமல் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால், காவிரிநீர், விஷமாக மாறும் அபாயம் ஏற்படுள்ளது. இப்பிரச்னை, தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் நிலை உள்ளது. கொங்கு மண்டலத்தில் இந்தப் பிரச்னை என்றால், டெல்டா மாவட்டங்களில் உள்ள காவிரி பிரச்னை, கட்சிகளின் கழுத்தை நெரிக்கிறது. நெல்லுக்கு நடுவே மீன்கள் துள்ளி விளையாடிய காவிரிப்படுகை, இன்று வானம் பார்த்த பூமியாக காய்ந்து கிடக்கிறது. வருண பகவானும், கர்நாடக அரசும் மனது வைத்தால் தான், கடைமடை பகுதியில் காவிரி பாயும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு அடுத்தடுத்து தடுப்பணைகளைக் கட்டியது. அதைத் தடுக்க முயற்சிக்காமல், “மழைக்காலத்தில் கூட அதில் தண்ணீர் வராது’ என, தமிழக அமைச்சரே அலட்சியம் காட்டியதன் விளைவு, பாலாற்றுப் படுகை இன்று பாலைவனமாகிவிட்டது.

தென் மாவட்ட விவசாயிகளின் ஜீவாதாரமாக இருப்பது முல்லைப் பெரியாறு. கேரள அரசின் முரண்டைச் சமாளிக்கும் சாமர்த்தியம் இல்லாததால், சுப்ரீம் கோர்ட்டே உத்தரவிட்டும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்த தமிழகத்தால் முடியவில்லை. இதனால், தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள் வேறு தொழிலுக்கு மாற வேண்டிய நிலை வந்துவிட்டது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிலத்தடி நீரில் புளோரைடின் அளவு அதிகம். இந்த குடிநீரை பருகும் மக்களுக்கு எலும்பு, தோல், நரம்பு சம்பந்தமான நோய்கள், பல்லில் கறை படிதல் தொடர்ந்து வந்தது. இவ்விரு மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், காமராஜர் ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்டது. இன்னும் அப்பகுதியின் தேர்தல் பிரச்னையாகத் தொடர்கிறது. “ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை’ என்பதைப் போல, யார் ஆட்சிக்கு வந்தாலும் காவிரி, பாலாறு, அமராவதி, பவானி என, எந்த ஆறாக இருந்தாலும், விதிவிலக்கில்லாமல் மணல் கொள்ளை நடந்து வருகிறது.

விதிமுறைகளை மீறி எடுக்கப்படும் மணலால், நிலத்தடி நீரின் அளவு அதள பாதாளத்திற்கு போய்விடுகிறது. ஆற்றுப்படுகைகளை ஒட்டியுள்ள வளம் கொழித்த கிராமங்கள் கூட, பட்டணங்களைப் போல குடிநீருக்காக குடத்தை தூக்கி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. வெகுண்டெழுந்த கிராம மக்களால், ஆங்காங்கே மணல் லாரிகளை மடக்கும் காட்சி, அன்றாட நிகழ்வாகிவிட்டது. திரும்பிய இடமெல்லாம் இதே நிலை தொடர்ந்தால், தண்ணீரின்றி தவிக்கும் இந்த தேசம். அதைத் தடுக்க முயல்பவர்களுக்கு ஆதரவாகவே, ஓட்டுச்சீட்டுகள் பேசும்!

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s