ஆதங்கம் நியாயமானது!

வாக்குப்பதிவு நாளுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு மாத கால இடைவெளி இருப்பதால் அரசு நிர்வாகம் எந்தப் பணியையும் செய்ய முடியாமல் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஜூன் மாதத்தில் தொடங்க இருக்கும் தென்மேற்குப் பருவமழை காலத்தின்போது வேளாண்மைப் பணிகள் முறையாக நடைபெறுவதற்குச் செய்ய வேண்டிய பராமரிப்பு ஆய்வுப் பணிகளைக்கூட அதிகாரிகள் மேற்கொள்ள முடியாமல் தேர்தல் ஆணையத்தின் ஆணை தடுக்கிறது என்றும் முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியிருக்கிறார். இந்தப் பிரச்னையில் முதல்வரின் ஆதங்கம் நியாயமானது என்பது மட்டுமல்ல, ஜனநாயகம் முறையாக நடைபெற வேண்டும் என்று விழையும் அனைவரின் சிந்தனைக்குரியதும்கூட.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட உடனேயே, “காத்திருப்பு தேவையில்லை’ என்கிற தலைப்பில் “தினமணி’ ஒரு தலையங்கம் தீட்டியிருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த சில கருத்துகளை வாசகர்களின் பார்வைக்கு மீண்டும் பதிவு செய்கிறோம்.

“”ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு தேதியில், ஒரே நாளில் அல்லது பல கட்டங்களில் வாக்குப் பதிவை நடத்த முடியும் என்றால், வாக்கு எண்ணிக்கையை மட்டும் ஏன் ஒரே நாளில் நடத்த வேண்டும்? அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப வாக்கு எண்ணிக்கைத் தேதியை நிர்ணயிப்பதில் என்ன தவறு? இதில் நடைமுறைச் சிக்கல் என்ன?

மக்களவைத் தேர்தல் நடத்தப்படும்போது, தேர்தல் முடிவுகள் ஒரே நேரத்தில் வெளியாகும் வகையில், வாக்கு எண்ணிக்கையை ஒரே நாளில் நடத்துவதுதான் சரியானது. ஏனென்றால், ஒரு மாநிலத்தில் ஒரு தேசியக் கட்சிக்குக் கிடைக்கும் அதிகமான வெற்றி அல்லது அதுபற்றி தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மற்றொரு மாநிலத்திலும் வாக்காளர்களிடையே உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி, வெற்றிபெறும் கட்சிக்கே தங்கள் வாக்கு என்ற மனநிலையை உருவாக்கும் என்பதால் இதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் அந்தந்த மாநிலத்தோடு மட்டுமே தொடர்புடையவை.

இதுபோன்று 30 நாள் இடைவெளி தருவதால் தேவையில்லாத பிரச்னைகளுக்குத் தேர்தல் ஆணையம் வழி வகுக்கிறது. தேர்தல் ஆணையம் இந்தப் பிரச்னையில் மறுபரிசீலனை மேற்கொண்டு தவறைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அடம்பிடிக்காமல் நடைமுறைச் சிந்தனையுடன் ஆணையம் செயல்பட்டால் நல்லது” என்று அந்தத் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் அரசு நிர்வாகம் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகிறது. அப்படி இல்லாமல் போனால், தேர்தல் நடைமுறைகளை ஆளும் கட்சிக்குச் சாதகமாக ஆட்சியாளர்கள் வளைத்துக் கொள்வார்கள் என்பதும், பெரிய அளவில் தேர்தல் தில்லுமுல்லுகள், பண விநியோகம் நடைபெறும் என்பதுதான் அதற்குக் காரணம். தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக் கட்சி, சுயேச்சை என்கிற வேறுபாடு இல்லாமல் சமபலத்துடன் தேர்தலில் பங்குபெற இது தேவைப்படுகிறது என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

அதேநேரத்தில், தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் வாக்கு எண்ணிக்கையை ஒரு மாத காலத்துக்குத் தள்ளிப்போட்டு, அதிகாரம் இல்லாத காபந்து அரசிடம் நிர்வாகத்தை ஒப்படைப்பது பிரச்னைகளுக்கு வழிகோலுவதாக அமைந்துவிடும். திடீரென்று சுனாமி போன்ற இயற்கைச் சீற்றமோ, ஒரு பேரழிவோ ஏற்பட்டது என்றால், அதை நிர்வாகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதா, முதல்வர் மௌனம் காப்பதா, இல்லை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அதிகாரிகள் செயல்படுவதா? அப்படியொரு விபரீதம் ஏற்பட்டுவிடவில்லை, ஏற்படவும் வேண்டாம். ஆனால், நாம் தொலைநோக்குப் பார்வையுடன் இந்தப் பிரச்னையை அணுகாமல் இருக்க முடியாதே?

இன்றைய முதல்வர் கருணாநிதி சந்திக்கும் இந்த விசித்திரமான சூழ்நிலை நாளைக்கு முதல்வராக வரக்கூடிய எவருக்குமே ஏற்படலாம். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற பிரச்னை இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளைக்கு ஏற்படலாம்.

தேர்தலுக்கு மூன்று மாதத்துக்கு முன்பு, ஆட்சியில் இருக்கும் அரசு பதவி விலகி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவது இதற்கு மாற்றாக இருக்கும் என்று ஒரு யோசனை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது, மக்களவையில் சில உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது. மாநில அரசுகள் கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியின்கீழ் தேர்தல் நடந்தால், அது மத்திய ஆளும் கட்சிக்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அந்த யோசனை கைவிடப்பட்டது. மேலும், மக்களவைத் தேர்தல்களின்போது என்ன செய்வது என்கிற கேள்வியும் எழுகிறது.

முதல்வர் எழுப்பியிருக்கும் நியாயமான கேள்விக்குத் தேர்தல் ஆணையம் மட்டுமல்ல, இந்திய அரசும் வழிகாண வேண்டிய கட்டாயம் உள்ளது. எல்லா அரசியல் கட்சிகளையும், மாநிலங்களையும் பாதிக்கும் பிரச்னை இது என்பதால், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் என்கிற முறையில் முதல்வர் கருணாநிதி இந்தப் பிரச்னையை விவாதிக்க முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், சமூக ஆர்வலர்கள் என்று அனைவரையும் அழைத்து ஒரு கருத்தரங்கை நடத்தினால்கூட நல்லது.

மக்களாட்சி, காலத்துக்கு ஏற்றாற்போல மாற்றிக் கொள்ளும், மாறிக் கொள்ளும் வாய்ப்பை நமக்கு அளிக்கிறது. முதல்வர் எழுப்பி இருக்கும் கேள்வி விவாதிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல, ஒரு நல்ல முடிவு காணப்பட வேண்டிய ஒன்றும்கூட!

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s