எந்தக் கட்சி வென்றாலும், தோற்றாலும், தோல்வி என்னவோ மக்களுக்குத் தான்!

தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளான முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு பிரச்னை, பாலாறு பிரச்னை, சேது சமுத்திரம் கால்வாய் அமைப்பது, கச்சத் தீவில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமையை மீட்பது, மத்தியப் பட்டியலில் உள்ள கல்வியை, மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது, மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது, தமிழை ஆட்சி மொழியாக்குவது உள்ளிட்ட பிரச்னைகள், நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இழுபறியாகவே இருந்து வருகின்றன. ஆனால், “இவற்றை நிறைவேற்றுவோம்’ என, பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் வாக்குறுதி அளிப்பதை மட்டும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த தேர்தலிலும், “ஆட்சிக்கு வந்தால் நதி நீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்ப்போம்’ என, கருணாநிதியும், ஜெயலலிதாவும் வாக்குறுதி அளித்துள்ளனர். உண்மையில், இவை தீர்க்க முடியாத பிரச்னைகளா? அல்லது, “தீர்க்காமல்’ இருந்தால் தான், அதை வைத்து, ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு வாங்க முடியும் என அரசியல் தலைவர்கள் கருதுகிறார்களா? என்பதும், ஒவ்வொரு குடிமகனுக்கும் தீராத சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில், பிரச்னைக்குரிய மாநிலங்களில் ஆண்ட கட்சி மற்றும் ஆளுகின்ற கட்சி, ஒவ்வொரு கால கட்டத்தில், மத்தியிலும் ஆட்சிக் கட்டிலில் இருந்திருக்கிறது. அல்லது, மத்திய ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சி, சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஆளுகின்ற கட்சியாகவும் இருக்கிறது. பிரச்னைகளை தீர்ப்பதற்கு பல சாதகமான அம்சங்கள் இருந்தாலும், தீர்ப்பதில் தான் யாருக்குமே அக்கறையில்லை. ஏதாவது சாக்குபோக்கு கூறி, பிரச்னைகளை தள்ளி வைப்பதிலும், இழுபறி நிலையிலேயே வைத்திருப்பதிலும் தான் குறியாக இருக்கின்றனர். இதன் விளைவு, இன்று வரை மேற்கூறிய பிரச்னைகள் முடிந்தபாடில்லை.

தி.மு.க., அமைச்சர்கள், தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்து வருகின்றனர். இங்கேயும், தி.மு.க., அரசு ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆனால், மத்திய அரசை சரியான வகையில் பயன்படுத்திக் கொண்டு, காரியம் சாதிக்க தவறியது ஏன் என்ற கேள்வி, தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் எழாமல் இல்லை. ஆனால், இப்பிரச்னைகள் தொடர்பாக, வழக்கம்போல் கூட்டணிக் கட்சியான காங்கிரசிடம், “வேண்டுகோள்’ வைக்க மட்டும் கருணாநிதி தவறவில்லை. தி.மு.க., தேர்தல் அறிக்கையை வெளியிட்டு கருணாநிதி பேசும்போது, “கடந்த தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளில், ஒரு சிலவற்றைத் தவிர, மற்றதை நிறைவேற்றி உள்ளோம். அந்த, ஒரு சில வாக்குறுதிகள், நிறைவேற்ற முடியாதது அல்ல. அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. எனவே, இன்னும் தீர்வு ஏற்படாமல் உள்ளன’ என்று கூறிவிட்டு, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

சென்னையில், சோனியா பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில், வழக்கம்போல் முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி, மீனவர் பிரச்னை போன்றவற்றை கோடிட்டு காட்டி, “நிறைவேற்ற வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். மேலும், “மாநிலங்களுக்கு இடையே உள்ள நதி நீர் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படுத்த வேண்டும். இல்லையேல், தற்போது நிலவும் அமைதி கெட்டு விடும். இதை, அறிவுரையாகக் கூறவில்லை; எச்சரிக்கையாகக் கூறுகிறேன்’ என்றார்.
முதல்வருக்கு அடுத்து பேசிய சோனியா, மீனவர் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து மட்டும் ஒருசில கருத்துக்களை தெரிவித்தவர், முதல்வரின் மற்ற கோரிக்கைகளை சுத்தமாக கண்டுகொள்ளவில்லை என்பது தான் சோகம். எனவே, முதல்வரின், “வழக்கமான’ அணுகுமுறை, தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்னைகளை தீர்ப்பதற்கு உதவாது என்றும், எதற்கெடுத்தாலும், மத்திய அரசின் மீது பொறுப்பை சுமத்திவிட்டு, விலகியே இருப்பது சரியல்ல என்றும், பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தி.மு.க.,வுக்கு, மத்திய அரசின் செயல்பாடுகளில் கூட்டுப்பொறுப்பு உள்ளது. பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படுத்துவதில், கால தாமதம் ஏற்பட்டால், அதிலும் தங்களுக்கு பொறுப்பு இருக்கிறது என்பதை, தி.மு.க., உணர வேண்டும் என, அரசியல் பார்வையாளர்கள் கோடிட்டு காட்டுகின்றனர்.

தோற்றால், “டோன்’ மாறும்? நதி நீர் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை ஏன் தீர்க்கவில்லை என கேள்வி எழுப்பினால்,”ஒரு கூட்டணியில் உள்ள கட்சிகள், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி நடத்தினால், பிரச்னைகளை தீர்க்க முடியும்’ என்று பதிலளிப்பதை, ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஐந்து ஆண்டுகள் தி.மு.க., ஆட்சியில் இருந்தும், கூட்டணிக் கட்சியான காங்., ஏழு ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்து வரும் நிலையிலும்,முக்கிய பிரச்னைகளுக்கு தி.மு.க., அரசு தீர்வு காணவில்லை. இந்நிலையில், தற்போது நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க., அணி தோற்றால், இதையே காரணமாக கூறி தப்பித்துவிடுவர். “தி.மு.க., அணிக்கு வாய்ப்பு அளித்திருந்தால், கூட்டணிக் கட்சியான காங்கிரசை வலியுறுத்தி, பிரச்னைகளை தீர்த்திருப்போம். அதற்கு வாய்ப்பு அளிக்கவில்லையே’ என, கருணாநிதி கருத்து தெரிவிக்கலாம். வெற்றி பெற்றால், தற்போதுள்ள “நிலைமை’ தொடரலாம். அ.தி.மு.க., அணி வெற்றி பெற்றால், “பிரச்னைகளை தீர்க்க நாங்கள் ஆர்வமாக இருந்தாலும், மத்தியில் உள்ள அரசு, இணக்கமான அரசாக இல்லையே’ என்று ஜெ.,விடம் இருந்து பதில் வரலாம். இறுதியில், எந்தக் கட்சி வென்றாலும், தோற்றாலும், தோல்வி என்னவோ மக்களுக்குத் தான்!

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s