வில்லிவாக்கம் தொகுதி : இவர் புதுசு… அவர் பழசு…

வில்லிவாக்கம் தொகுதிக்கு மட்டும் ஒரு வாய் இருந்தால் அது பேசும் வசனம், “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்பதாகத்தான் இருக்கும்.

2006 பேரவைத் தேர்தல் வரை 9 லட்சத்து 41 ஆயிரத்து 112 வாக்காளர்களுடன் ஆசியாவிலேயே மிகப் பெரிய தொகுதியாக விளங்கிய வில்லிவாக்கம் தொகுதியின் இன்றைய வாக்காளர் எண்ணிக்கை வெறும் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 968.

ஒரு யானை அல்ல; பல யானைகளைக் கட்டித் தீனி போடுவதுபோல தேர்தல் செலவுகள் செய்ய வேண்டும்; கால்கடுக்க பல ஊர்களைச் சுற்ற வேண்டும்; எல்லாத் தொகுதிகளிலும் முடிவு அறிவிக்கப்பட்டிருக்க, இந்தத் தொகுதியில் மட்டும் இரண்டு நாள்களைக் கடந்தும் வாக்கு எண்ணிக்கை தொடரும் என்கிற பழைய கம்பீரம் எதுவும் தற்போது வில்லிவாக்கம் தொகுதிக்கு இல்லை.

தொகுதி மறுசீரமைப்பில் வில்லிவாக்கம் தொகுதியிலிருந்துதான் விருகம்பாக்கம், அம்பத்தூர், கொளத்தூர், திரு.வி.க. நகர், மாதவரம் உள்ளிட்ட தொகுதிகள் பிரிக்கப்பட்டன. இதில் தொழிற்சாலைகள் நிரம்பிய அம்பத்தூர் பகுதி வேறு தொகுதியாகப் பிரிந்துபோனதால் தொழிலாளர்கள் நிரம்பிய தொகுதி என்கிற பெருமையையும் வில்லிவாக்கம் இழந்துள்ளது.

தற்போது ஐ.சி.எப்., வில்லிவாக்கம், ராஜமங்கலம், திருமங்கலம், சிட்கோ நகர் உள்ளிட்ட பகுதிகளே தொகுதிக்குள் வருகின்றன. இதில், அரசு மற்றும் தனியார் அலுவலங்களில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றக்கூடியவர்கள், சிறு மற்றும் பெரும் கடை வைத்திருப்பவர்கள்தான் நிரம்ப உள்ளனர். சாதி அடிப்படையில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் வன்னியர்களும் அதிகளவில் இருக்கிறார்கள். அதற்கடுத்த நிலையில் மலையாளிகள், ஆதி ஆந்திரர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

இந்தத் தொகுதியில் இதுவரை எட்டு முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் திமுக மூன்று முறையும், திமுக ஆதரவுடன் தமாகா ஒரு முறையும், மார்க்சிஸ்ட் கட்சி இரண்டு முறையும், அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை கடந்த 8 தேர்தல்களையும்விட இந்தத் தேர்தலிலேயே அனல் பறக்கும் கடும்போட்டி நிலவுகிறது என்று தொகுதியில் உள்ள மூத்த வாக்காளர்கள் கூறுகிறார்கள். மொத்தம் 13 பேர் தேர்தல் களத்தில் நின்றாலும் திமுக சார்பில் போட்டியிடும் க.அன்பழகனுக்கும் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜே.சி.டி.பிரபாகருக்கும் இடையேதான் கடும் போட்டி.

திமுக சார்பில் போட்டியிடும் க.அன்பழகன் 1977-ம் ஆண்டு முதல் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். 1957-ம் ஆண்டு எழும்பூர் தொகுதியில் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குச் சென்ற அவர் இதுவரை 11 முறை பேரவைத் தேர்தலைச் சந்தித்துள்ளார். இதில் 9 முறை வெற்றி, 2 முறை தோல்வியையும் தழுவியுள்ளார். 1962-67-ல் மேலவை உறுப்பினராகவும், 1967-71-ல் மக்களவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். கல்வி அமைச்சராகவே பல ஆண்டுகள் இருந்து வந்த அன்பழகன் 2006-தேர்தலில் திமுக வெற்றிபெற்றதிலிருந்து நிதியமைச்சராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். 1996-ம் தேர்தல் முதல் 3 முறை துறைமுகம் தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றிபெற்று வந்தார். 96-ல் வெற்றி பெற்றபோது எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 30,256 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த வித்தியாசம் 2001-ல் நீடிக்கவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட தா.பாண்டியனை விட 336 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று தப்பிப் பிழைக்க முடிந்தது.

2006-ம் ஆண்டு தேர்தலிலும், துறைமுகம் தொகுதியிலேயே போட்டியிட்ட அன்பழகன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் சீமா பஷீரை 410 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்கடிக்க முடிந்தது. இப்படிக் குறைந்த வித்தியாசத்திலேயே வெற்றிபெறுவது எல்லா நேரத்திலும் முடியாது என்பதைக் கணக்கிட்டுத்தான் நிதியமைச்சர் தொடர்ந்து மூன்று முறையாக திமுக வெற்றிபெற்று வரும் வில்லிவாக்கத்தில் நிற்கிறார் எனச் சொல்லப்படுகிறது.

அன்பழகன் இந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பது தேர்தல் தேதிகள் எல்லாம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே முடிவு செய்யப்பட்டிருந்ததால், இந்தப் பகுதியில் உள்ள திமுகவினர் ஒவ்வொரு வீடாக அப்போதே சென்று கலர் டிவி உள்பட திமுக அரசின் இலவசங்கள் கிடைக்கச் செய்துள்ளனர். இதன் காரணமாகவும் 70 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அரசியல் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர் அன்பழகன் போட்டியிடுவதாலும் எப்படியும் வெற்றிபெற்றுவிடலாம் என்று திமுகவினர் எளிதாகக் கணக்கிட்டார்கள். ஆனால் அதிமுகவால் வேட்பாளராக ஜே.சி.டி.பிரபாகர் நிறுத்தப்பட்டபோது திமுகவினர் அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள்.

1980-ல் வில்லிவாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த பிரபாகர் இந்தப் பகுதிக்கு நன்கு தெரிந்தவராக இருப்பதுடன் நினைத்துப் பார்க்கிற வகையில் பல்வேறு நல்ல பணிகளை ஆற்றிருப்பதாகத் திமுகவினரே

கூறுகின்றனர்.

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக சோடியம் விளக்குகள் பிரபாகர் எம்.எல்.ஏ.வாக இருந்துபோதுதான் அமைக்கப்பட்டிருக்கிறது. தண்ணீர் பஞ்சத்தால் பெரும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது 1500-க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகளை அமைத்துக் கொடுத்துள்ளார். வில்லிவாக்கம் பகுதியில் அம்பேத்கர் சிலை வைக்க முடியாத பிரச்னை ஏற்பட்டபோது அவர் முன் நின்று அமைத்துக் கொடுத்துள்ளார். கோன்மேடு என்ற இடத்துக்கு ராஜமங்கலம் என்று பெயர் மாற்றியமைக்க காரணமாக இருந்துள்ளார் என்று அவரது சாதனைப் பட்டியல் நீள்வதுடன் எளிமையாக ஒவ்வொரு வீடாக அவர் ஏறி இறங்கி பிரசாரம் செய்வதால் திமுகவினர் சற்று கலக்கத்துடனே உள்ளனர்.

இந்தக் கலக்கத்தின் காரணமாகவே கூடுதலாக ஒரு நாள் ஒதுக்கி முதல்வர் கருணாநிதி பிரசாரம் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது. முதலில் அயனாவரம் பொதுக்கூட்டத்துடன் மட்டும் வில்லிவாக்கம் தொகுதி பிரசாரத்தை முடிப்பது என்று கருணாநிதியின் திட்டம் இருந்தது. பின்னர் திடீரென 8ம் தேதி(வெள்ளிக்கிழமை) கூடுதலாக ஒரு நாள் ஒதுக்கி வீதி வீதியாக கருணாநிதி பிரசாரம் செய்தார்.

2006-தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஐ.என்.டி.யூ.சி வேட்பாளர் ஜி.காளன் 2,48,734 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஆனால் அப்போது தேமுதிக தனித்து நின்றது. அதன் வேட்பாளர் வேல்முருகன் பெற்ற வாக்குகள் 51, 892. இப்போது அதிமுக அணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக பெற்ற வாக்குகளையும் சேர்த்துக் கணக்கிட்டால் 3,00, 626 வாக்குகள் வருகின்றன. இந்தக் கூட்டுத்தொகையோடு வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் ப.ரங்கநாதன் பெற்ற வாக்குகளைப் பார்த்தால் 2,78, 850 வாக்குகளே வருகின்றன. அதைப்போல 2009-மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் வில்லிவாக்கம் தொகுதியில் மட்டும் பெற்ற வாக்குகள் 47,733. தோல்வியுற்ற அதிமுக வேட்பாளர் முகமது அலி ஜின்னா பெற்ற வாக்குகள் 40,220. தேமுதிக வேட்பாளர் ராமகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 8210. இந்தக் கூட்டுத்தொகையின் அடிப்படையிலும் அதிமுகவே முன்னிலை வகிக்கிறது.

எதிர்க்கட்சியினரால்கூட விமர்சனம் செய்ய முடியாத மூத்த திராவிடக் கட்சித் தலைவர் க. அன்பழகன். அதற்காக அவரைத் தொகுதி மக்கள் வெற்றிபெறச் செய்வார்கள் என்கிற நம்பிக்கை திமுகவினருக்கு. என்னதான் மோசமான அலை அடித்தாலும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலாவது வெற்றியை அடைந்துவிடலாம் என்கிற நம்பிக்கை அவருக்கு. வாழ்க்கையே நம்பிக்கையின் அடிப்படையில்தானே அமைந்திருக்கிறது.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s