ஹசாரே உண்ணாவிரதம்: மக்களை திசை திருப்பவும் அரசு முயற்சி!

லோக்பால் சட்டத்தில் திருத்தங்கள் வேண்டுமென்று வலியுறுத்தி, காந்திய தொண்டர் அன்னா ஹசாரே துவங்கிய சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு அபாரமாக பெருகிறது. டில்லியில், ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. அவரது போராட்டத்தை கொச்சைப்படுத்தவும், தவறான தகவல்களை கூறி மக்களை திசை திருப்பவும் அரசு முயல்வதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக லோக்பால் சட்டம் இயற்றும் நடவடிக்கையில், மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கான வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி, ஊழல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை மாற்ற வேண்டுமென்றும், இந்த வரைவு மசோதா தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சரவை குழுவில், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பிரதிநிதித்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தி, பிரபல சமூக சேவகரும், காந்திய தொண்டருமான அன்னா ஹசாரே உண்ணாவிரதம் துவக்கியுள்ளார்.

டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் உண்ணாவிரதம் இருக்கும் ஹசாரேவுக்கு ஆதரவாக, ஆயிரக்கணக்கான மக்களும் திரண்டுள்ளனர். 2வது நாளான நேற்று உண்ணாவிரத மேடை அருகே பலரும் குவிந்தனர். ஹசாரேயின் உண்ணாவிரத போராட்ட ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சுவாமி அக்னிவேஷ் நேற்று பேட்டியளித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

லோக்பால் சட்ட வரைவு மசோதாவை தயாரிக்கும் குழுவுக்கு வீரப்ப மொய்லி தலைமை தாங்குகிறார். அதில் உறுப்பினர்களாக சரத் பவார், கபில் சிபல் போன்றவர்களும் உள்ளனர். இவர்களை வைத்து கொண்டு, ஊழலை எப்படி தடுக்க முடியும். நீதித்துறை வல்லுனர்களான சாந்தி பூஷண், கிருஷ்ணய்யர் போன்றவர்களையும் இக்குழுவில் சேர்க்க வேண்டும் என்றே கோருகிறோம். ஆனால், நாங்களே சட்டத்தை இயற்ற ஆசைப்படுவது போல, அரசு பொய் பிரசாரம் செய்கிறது.

எங்களது நோக்கம் சட்டத்தை இயற்ற வேண்டுமென்பது அல்ல; சட்ட வரைவு மசோதா தயாரிப்பில் பங்கேற்க வேண்டுமென்பது மட்டுமே. காரணம், ஊழல் ஒழிப்பு சட்டத்தை இயற்றும் போது, ஊழலில் ஈடுபடுகிறவர்களே உடனிருந்தால், அது அர்த்தமற்றதாகி விடும். அரசுக்கு ஜால்ரா போடுபவர்களால் உறுதியான சட்டதிட்டங்களை உருவாக்க இயலாது. இந்த லோக்பால் சட்டம் எப்படி இருக்க வேண்டுமென்றும், என்னென்ன ஷரத்துக்கள் இருக்க வேண்டுமென்றும் நாங்கள் எங்களது மாதிரி சட்ட மசோதாவை தயாரித்து அளித்தோம். எங்களது கோரிக்கைகள் என்னென்ன என, பட்டியலிட்டு அரசிடம் அளித்தோம். அவை எல்லாமே நிராகரிக்கப்பட்டு விட்டன.

எங்களது நியாயமான குரலை கேட்க அரசு மறுத்து வருகிறது. பேச்சுவார்த்தைக்கு தயார் என அரசு கூறி வருகிறது. ஆனால், எங்களது அறப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் காரியங்களில் அரசு ஈடுபட ஆரம்பித்துள்ளது. உண்ணாவிரத போராட்டத்தை விமர்சனம் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது. இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சப்போவது இல்லை. எங்கள் போராட்டம் உறுதியுடன் தொடரும். 73 வயதாகும் அன்னா ஹசாரேயை பொறுத்தவரை அவருக்கு உடல் நலம் நல்ல முறையில் இருந்து வருகிறது. எந்த பிரச்னையும் இல்லாமல், 15 நாட்கள் வரையாவது உண்ணாவிரதம் உறுதியுடன் இருக்க முடியும். உண்ணாவிரதத்தை தொடருவதில் அவர் உறுதியுடன் உள்ளார்.

டில்லியில் மட்டுமல்லாது, நாட்டின் பிற பகுதிகளில் எல்லாம் ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. நாடு முழுவதும், 400 இடங்களில் இதுபோன்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இது மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே, இதுபோன்ற போராட்டங்கள் வெற்றி பெற முடியும். இவ்வாறு சுவாமி அக்னிவேஷ் கூறினார். ஊழலை எதிர்த்து போராடும் ஹசாரே, தன் மேடையில் அரசியல்வாதிகள் எவரையும் ஏற்ற மறுத்து விட்டார்.

பா.ஜ.,வின் மேனகா காந்தி, பிரகாஷ் ஜாவேத்கர் மற்றும் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் ஆகியோர் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இவருக்கு ஆதரவாக சுவாமி அக்னிவேஷ், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி, சந்தீப் பாண்டே உள்ளிட்ட 150க்கும் அதிகமானவர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.

பவார் மீது ஹசாரே பாய்ச்சல்:

தன் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என, ஹசாரே அறிவித்துள்ளார். குறிப்பாக லோக்பால் மசோதா கொண்டு வருவதற்கு ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் ஏமாற்றம் அளிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஹசாரே குறிப்பிடுகையில், “நான் அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்திருப்பதாக காங்கிரசார் கூறுகின்றனர். கடந்த 42 ஆண்டுகளாக இந்த லோக்பால் மசோதாவை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகின்றனர். இந்த மசோதாவை நிறைவேற்ற அரசு ஏன் தயங்குகிறது?’ என கேட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:

இந்த மசோதா கொண்டுவர அமைக்கப்பட்ட குழுவில் மத்தியமைச்சர் சரத் பவார் இருக்கிறார். இக்குழுவில் ஊழல் அமைச்சர்களுக்கு இடம் எதற்கு? அப்படி இருந்தால் அக்குழு முடிவே எடுக்காது. பவார் இருக்கும் வரை அக்குழு செயல்படுவதில் அர்த்தமே இருக்காது. பவார் என்னை சந்திக்க விரும்பினாலும் சந்திக்க மாட்டேன். நான் உண்ணாவிரதம் இருந்து இறப்பேன். மக்கள் குழு ஆலோசனை இல்லாமல், இந்த மசோதா ஊழலை ஒழிக்கும் கருவியாக இருக்காது. என் மேடையில் அரசியல்வாதிகள் யாரையும் அமர அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு ஹசாரே கூறினார்.

பவார் பதில்:

ஹசாரே கருத்துக்கு மத்திய அமைச்சர் பவார் அளித்த பதிலில், “அமைச்சர்கள் குழுவில் இருந்து என்னை நீக்கினால் எனக்கு மகிழ்ச்சி. இந்த மசோதா விஷயத்தில் மட்டும் அல்ல, எல்லா விஷயத்திலும் அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் இருந்து நீக்கினாலும் சரி தான்’ என்று பதிலளித்தார்.

மற்றொரு அமைச்சரான கபில் சிபல் கூறுகையில், “இவ்விஷயத்தில் மக்கள் பிரதிநிதிகள் கருத்தை கேட்க அரசு தயார். இச்சர்ச்சையைத் தொடர்ந்து லஞ்ச ஊழல் குறித்து ஆராயும் அமைச்சர் குழுவில் இருந்து சரத்பவார் நேற்று இரவு ராஜினாமா செய்தார். இதனிடையே ஹசாரே கோபத்தை குறைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s