50 ஆயிரம் வழக்குகள் : அசரவில்லை அரசியல்வாதிகள்

தேர்தல் கமிஷனின் அதிகாரம், தேர்தல் முடிந்தவுடன் போய்விடுவதால், தற்போது போடப்படும் வழக்குகளின் நிலை, கேள்விக்குறியாகி விடுகிறது. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டும், அரசியல்வாதிகள் அசருவதாக இல்லை.

தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை, அரசு நிர்வாகத் துறையினர் மற்றும் போலீசார், தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றனர். இதனால், தேர்தல் சமயத்தில், நன்னடத்தை விதிகளை அமல்படுத்த, கடும் கெடுபிடி நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொள்கிறது. தற்போது, தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டும் 45 ஆயிரத்துக்கும் மேல். இந்த வழக்குகளால், பெரியளவில் தண்டனை ஏதும் கிடைக்கப் போவதில்லை.

“சுவர் விளம்பரம் செய்திருந்தால், அதை அழிக்க சொல்லி நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அழிக்காவிட்டால், அதிகாரிகளே அதை அழிக்க வேண்டும். அழிப்பதற்கான அல்லது அகற்றுவதற்கான செலவை, சம்பந்தப்பட்ட கட்சி அல்லது வேட்பாளரிடம் வசூலிக்க வேண்டும். மேலும், வேட்பாளரின் செலவுக் கணக்கில் அதைச் சேர்க்க வேண்டும். அந்தந்த உள்ளாட்சி சட்டப்படி, தேவைப்பட்டால் வழக்கு தொடரலாம்’ என்று சட்டம் உள்ளது.

எனவே, இந்த 45 ஆயிரம் வழக்குகளிலும் யாருக்கும் எந்த தண்டனையும் கிடைக்கப் போவதில்லை. அடுத்ததாக, வேட்பாளருக்கான செலவு உச்சவரம்பாக 16 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை மீறி, செலவு செய்கிறாரா என்பதை கண்காணிக்க, வங்கி கணக்கு துவக்குதல், வீடியோ மூலம் படமெடுத்தல் போன்ற கெடுபிடிகளை தேர்தல் கமிஷன் செய்கிறது.

தேர்தல் முடிந்த பின், உச்சவரம்பை விட அதிகமாக செலவு செய்திருந்தால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அந்த வேட்பாளர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும். இதனால், வெற்றி பெற்றவரது எம்.எல்.ஏ., பதவி பறிக்கப்படாது. தேர்தல் கணக்கு காட்டாவிட்டாலும், மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிட தடை விதிக்கப்படும். அவ்வளவு தான். எம்.எல்.ஏ.,க்களின் பதவிக்காலமே ஐந்து ஆண்டுகள் என்பதால், மூன்றாண்டு தடையால், அவர்களது அரசியல் எதிர்காலத்துக்கு எந்தச் சிக்கலும் வராது.

எனவே, கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் வேண்டுமானால், இதுபோன்ற விதிகளுக்கு பயந்து செலவு கணக்கு காட்டலாம். மற்றவர்களுக்கு இதில் எந்த அச்சமும் இருக்காது. வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு வாகனத்தில் ஏற்றி வந்தால், அதிகபட்ச தண்டனை என்ன தெரியுமா? 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டால், அந்த வழக்கை, தேர்தலுக்கு பிறகு நிரூபிக்க வேண்டும்.

தமிழகத்தில் 2006 தேர்தலின் போது, பணம் வினியோகித்ததாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2009 லோக்சபா தேர்தலின் போது, பணம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், 16 நிலுவையில் உள்ளன. பணம் வாங்கியவர், தேர்தலுக்கு பிறகு கோர்ட்டுக்கு வந்து, தனக்கு பணம் அளிக்கப்பட்டதாக சாட்சியம் அளிக்க வேண்டும். கோர்ட்டில் இதுபோன்ற வழக்குகளை நிரூபிப்பது மிகவும் சிரமம். காரணம், தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டில் இரண்டு மாதம் மட்டுமே நிர்வாகம் இருக்கும். அப்போது எப்படி வேண்டுமானாலும் வழக்கு பதிவு செய்யலாம். யாரை வேண்டுமானாலும் இடமாற்றம் செய்யலாம்.

ஆனால், தேர்தல் முடிந்த பின், ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் நிர்வாகம் வந்துவிடும். அதே அதிகாரிகள் தான், இந்த வழக்குகளை கோர்ட்டில் நடத்த வேண்டியிருக்கும். அவர்கள் ஆளுங் கட்சி சொல்படி தான் கேட்பர். இதுபோன்ற காரணங்களால், எத்தனை ஆயிரம் வழக்குகள் பதிவு செய்தாலும், அரசியல் கட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி போட முடியவில்லை. எனினும், பணம் பட்டுவாடா போன்றவற்றை, தேர்தல் சமயத்தில், தேர்தல் கமிஷனால் தடுக்க முடியும். அது ஒன்று தான் பலன்.

உண்மையிலேயே, பதிவு செய்யப்படும் வழக்குகளின் மீது கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டுமானால், சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும். மேலும், தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு என்று தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் கமிஷனே தீர்ப்பளிக்கும் வகையில், விதிகள் வகுக்க வேண்டும். அதற்கான சட்டங்களை, அரசியல்வாதிகள் நிறைந்த பார்லிமென்ட் தான் நிறைவேற்ற வேண்டும்.

இதெல்லாம் நடக்கிற காரியமா?

(tt)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s