எதையெல்லாம் தாங்குவது….

சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்வி, “ராஜாத்தி அம்மாள் யார்?’ அதற்கு முதல்வர் கருணாநிதி அளித்த சாதுர்யமான பதில், “என் மகள் கனிமொழியின் தாய்’. தர்மசங்கடமான ஒரு கேள்வியை எளிமையாக, சொல்வன்மையால் கருணாநிதி எதிர்கொண்ட அழகை எதிர்க்கட்சியினரும்கூட ரசிக்கவே செய்தார்கள்.

இரு நாள்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்குத் தமிழக முதல்வர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், கலைஞர் தொலைக்காட்சி தொடர்பாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அளித்த பதில்: “கலைஞர் டி.வி. கருணாநிதிக்குச் சொந்தமானது அல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் அதில் பங்குதாரர்களாக இருக்கிறார்கள்’ அவ்வளவே!

இப்போதும் அதே சாதுர்யத்துடன் தமிழக முதல்வர் பதிலளித்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அப்போது ரசித்ததுபோல இப்போது அவரது பதிலை ரசிக்க இயலவில்லை. முந்தைய பதிலின் பின்புலத்தில் ஒரு தனிநபரின் அன்பின் விரிவும் ஆழமும் இருந்தது. இப்போதைய பதிலின் பின்புலத்தில் பொதுமக்களின் பணம், சட்ட விதிமீறல், முறைகேடு, அரசியல் ஆதாயம் எல்லாமும் வெட்டவெளிச்சமாக இருக்கிறது.

ஒரு தனிநபரின் மனைவியும் மகளும் தனிப்பட்ட முறையில் சொத்து வைத்திருப்பது புதிதல்ல. முடியாத செயலும் அல்ல. அது ஒருவகையில் பூர்வீகச் சொத்தாக இருக்கலாம். அல்லது கணவன், தந்தை வழியாகக் கிடைத்ததாக இருக்கலாம். அல்லது அவர்கள் வணிகம் நடத்தியோ, நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தோ சம்பாதித்ததாகக்கூட இருக்கலாம். அதேவேளையில், இத்தகைய நடவடிக்கைகளில் அந்த மகளோ அல்லது மனைவியோ சட்டவிதிகளை மீறியிருந்தால், பொருளாதாரக் குற்றம் செய்திருந்தால், அவர்களைத்தான் சட்டம் தண்டிக்குமே தவிர, கணவரையோ அல்லது தந்தையையோ அல்ல என்பதும் எல்லோரும் அறிந்ததுதான்.

மகள் 20 விழுக்காடு பங்குகள் வைத்திருக்கிறார், மனைவி 60 விழுக்காடு பங்குகள் வைத்திருக்கிறார் என்றால், அதற்கான பணம் ரூ.214 கோடியை கடனாகப் பெற்று வட்டியுடன் கடனைச் செலுத்திவிட்டார்கள் என்றால், நல்லது. அப்படியே ஆகட்டும்.

ஆனால், யாரோ ஒருவரால் எந்தவித அடமானமும் இல்லாமல் இவ்வளவு பெரிய தொகை கடனாகக் கொடுக்கப்பட்டது ஏன்? கருணாநிதி முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால், அவரது கட்சியினரான ஆ. ராசா மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால், அந்த நிறுவனம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் லாபம் அடைவதாக இல்லை என்றால், கலைஞர் தொலைக்காட்சிக்கு கடன் கொடுத்துக் கைதூக்கிவிட முன்வந்திருக்குமா என்கிற கேள்விக்கும் முதல்வர் கருணாநிதி பதிலளித்திருக்க வேண்டுமே, ஏன் செய்யவில்லை?
கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டபோது, கலைஞர் டி.வி. செயல்பட்டுக் கொண்டிருந்தது. அவர் அதில் பங்குதாரர் என்றால், அதனை உரிய படிவத்தில் தெரிவித்திருந்தாரா? அவை கடன்தான் என்பதைக் குறிப்பிட்டிருந்தாரா?

முதல்வர் கருணாநிதியின் சொத்து மதிப்பு ரூ. 4.92 கோடி என்றால், தயாளு, ராஜாத்தி இரு மனைவிமார்களின் மொத்தச் சொத்து மதிப்பு ரூ. 39.42 கோடி. இப்படியிருக்க, இந்தச் சொத்து மதிப்பைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாக ரூ. 214 கோடி கடன், எந்த அடமானமும் இல்லாமல், அநியாய வட்டி என்றாலும் பரவாயில்லை, யாராவது தருவார்களா?

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மனிதர், தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா புறப்படும்போது, அவரது சேவையை நினைவுகூர்ந்து ஒரு பாராட்டுவிழா நடத்தப்படுகிறது. விழாவை ஏற்பாடு செய்தவர்கள், காந்தியின் மனைவி கஸ்தூரிபா அம்மையாருக்கு சில நகைகளைப் பரிசாக அளிக்கின்றனர். அந்த நகைகளைப் பொதுக்கணக்குக்கு நன்கொடையாக அளித்து விடு என்று மனைவிக்குச் சொல்கிறார் காந்திஜி.

கஸ்தூரிபா மறுக்கிறார். “”இவை எனக்காக அளிக்கப்பட்ட நகைகள்; உங்களுக்கானது அல்ல. இதைத் தர மாட்டேன்”.
ஆனாலும் காந்திஜி சொல்கிறார். “”கஸ்தூரிபா என்பதற்காக அளிக்கப்பட்ட நகைகள் அல்ல அவை. அவர்களுக்கு உதவிகள் செய்த என்பொருட்டு உனக்கு அளிக்கப்பட்ட பரிசு. அவை உனக்கானவை அல்ல” என்று சொல்லி வலுக்கட்டாயமாகப் பறித்து பொதுக்கணக்கில் சேர்க்கிறார்.

தயாளு அம்மாள் தனது மனைவி என்று ஒத்துக் கொள்கிறார். கனிமொழி தனது மகள் என்பதையும் ஒத்துக் கொள்கிறார். தனது சொத்துக் கணக்கில் மனைவியின் சொத்துகளையும், துணைவியின் சொத்துகளையும் பட்டியலிட்டுச் சமர்ப்பிக்கிறார். அவர்கள் பங்குதாரர்களாக உள்ள கலைஞர் தொலைக்காட்சியின் அலுவலகத்தைக் கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இயங்க அனுமதிக்கிறார்.

அந்தத் தொலைக்காட்சிக்குத் தனது பெயரைச் சூட்டி மகிழ்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இன்னின்ன என்பதுவரை தனது ஆலோசனைப் பங்களிப்பையும் தந்து உதவுகிறார். ஆனால், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களாகத் தனது மனைவியும் மகளும் இருப்பதைத் தவிரத் தனக்கும் அதற்கும் தொடர்பே இல்லை என்று நாகூசாமல் கூறவும் செய்கிறார்.

எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்; இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்? “கடற்கரையில் காற்று வாங்கும் அண்ணாவிடம் இதையெல்லாம் கூறி வருந்துவதைத் தவிர, வேறென்ன செய்ய?’ அப்படி ஓர் அண்ணா, அவருக்கு இப்படி ஒரு தம்பி!

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s