இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போரில் இந்தியா சூப்பர் வெற்றி!

மொகாலி: உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த பரபரப்பான அரையிறுதியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 85 ரன்கள் விளாசிய சச்சின், இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். வரும் ஏப்., 2ம் தேதி நடக்கும் பைனலில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று மொகாலியில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

அஷ்வின் நீக்கம்:ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், இந்திய அணியில் அஷ்வின் நீக்கப்பட்டு, நெஹ்ரா இடம் பெற்றார். பாகிஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அக்தருக்கு இம்முறையும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. “டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, “பேட்டிங்’ தேர்வு செய்தார்.

சேவக் “சரவெடி’:இந்திய அணிக்கு வழக்கம் போல் சேவக் அதிரடி துவக்கம் தந்தார். குல் வீசிய முதல் ஓவரில் ஒரு பவுண்டரியு அடித்தார். இவரது அடுத்த ஓவரில் ஐந்து பவுண்டரிகள் விளாசினார். இந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள் எடுக்கப்பட, குல்லை பார்க்கவே பாவமாக இருந்தது. அப்துர் ரசாக் ஓவரில் சச்சின், சேவக் தலா ஒரு பவுண்டரி அடிக்க, ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். தொடர்ந்து குல் ஓவரில் 2 பவுண்டரி அடித்த சேவக்கின் சரவெடி ஆட்டம் நீண்ட நேரம் தொடர வேண்டும் என ரசிகர்கள் ஏங்கினர். ஆனால், வகாப் ரியாஸ் சிக்கலை ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் “ரிவியு’ முறையில் சேவக் 38 ரன்களுக்கு(9 பவுண்டரி) அவுட்டானார்.

வகாப் மிரட்டல்: அடுத்து வந்த காம்பிர் “கம்பெனி’ கொடுக்க, சச்சின் தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். இவர்கள் இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர். முகமது ஹபீஸ் பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட காம்பிர்(27), கம்ரான் அக்மலின் துல்லிய “ஸ்டம்பிங்கில்’ வீழ்ந்தார். போட்டியின் 26வது ஓவரை வீசிய வகாப் ரியாஸ் இரட்டை “அடி’ கொடுக்க, இந்திய ரசிகர்கள் அதிர்ந்து போயினர். 2வது பந்தில் விராத் கோஹ்லியை(9) வெளியேற்றினார். 3வது பந்தில் யுவராஜ் சிங்கை(0) போல்டாக்க, மொகாலி அரங்கமே அமைதியானது. அப்போது இந்திய அணி நான்கு விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து திணறியது. அடுத்து வந்த தோனி தடுத்து ஆட, ரியாசின் “ஹாட்ரிக்’ வாய்ப்பு பறிபோனது.

சச்சின் அபாரம்:இதற்கு பின் சச்சின், தோனி இணைந்து நிதானமாக ஆடினர். இவர்கள் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்தால், ஸ்கோர் விரைவாக உயரவில்லை. ஒரு நாள் போட்டிகளில் தனது 95வது அரைசதம் அடித்த சச்சின், சர்வதேச கிரிக்கெட்டில் 100வது சதம் அடிக்க தவறினார். இவர் 85 ரன்களுக்கு(11 பவுண்டரி) சயீத் அஜ்மல் சுழலில் வீழ்ந்தார். வகாப் ரியாஸ் “வேகத்தில்’ தோனியும்(25) நடையை கட்டினார்.

ரெய்னா அசத்தல்:கடைசி கட்டத்தில் “பேட்டிங் பவர்பிளேயை’ பயன்படுத்தி சுரேஷ் ரெய்னா அசத்தலாக ஆடினார். உமர் குல் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். ஹர்பஜன் 12 ரன்கள் எடுத்தார். ஜாகிர் கானை(9) வெளியேற்றிய வகாப் ரியாஸ், தனது 5வது விக்கெட்டை பெற்றார். நெஹ்ரா(1) ரன் அவுட்டாக, இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்தது.

திணறல் ஆட்டம்:சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. ஜாகிர் கான் பந்தில் கம்ரான் அக்மல்(19) காலியானார். ஓரளவுக்கு தாக்குப்படித்த ஹபீஸ் 43 ரன்களுக்கு முனாப் வேகத்தில் அவுட்டானார். மீண்டும் ஒரு முறை சுழலில் மிரட்டிய யுவராஜ் சிங், அசாத் ஷபிக்(30), அனுபவ யூனிஸ் கானை(13) வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார். இதையடுத்து பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து தத்தளித்தது.பின் யுவராஜ் சிங் பந்துவீச்சில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார் உமர் அக்மல். இவர், ஹர்பஜன் வலையில் 29 ரன்களுக்கு அவுட்டானார். முனாப் பந்தில் அப்துல் ரசாக்(3) வெளியேற, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

அப்ரிதி ஏமாற்றம்:கடைசி கட்டத்தில் கேப்டன் அப்ரிதி, மிஸ்பா -உல்-ஹக் இணைந்து போராடினர். இதில், மிஸ்பா “ஆமை வேகத்தில்’ ஆட, “ரன் ரேட்’ எகிறியது. இந்த பதட்டத்தில் ஹர்பஜன் பந்தை சிக்சருக்கு தூக்க முயன்ற அப்ரிதி(19), பரிதாபமாக அவுட்டாக, பைனல் கனவு முடிவை நெருங்கியது.

தாமதம் ஏன்?:”பேட்டிங் பவர்பிளேயை’ மிகவும் தாமதமாக 46வது ஓவரில் பாகிஸ்தான் எடுத்தது வியப்பை தந்தது. அப்ரிதி போன்ற அதிரடி வீரர்கள் களத்தில் இருக்கும் போன் ஏன் “பவர்பிளேயை’ பயன்படுத்தவில்லை என்ற கேள்வியை எழுப்பச் செய்தது. நெஹ்ரா வேகத்தில் ரியாஸ்(8), குல்(2) பெவிலியன் திரும்பினர். பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் 231 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இதன் மூலம் தொடரில் இருந்து வெளியேறியது. மிஸ்பா (56) ஆறுதல் அளித்தார்.அபார வெற்றி பெற்ற இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது. வரும் ஏப்., 2ம் தேதி மும்பையில் நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.

“கரண்ட் கட்’ இல்லை: பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியை காண வசதியாக, தமிழகத்தில் நேற்று மின்வெட்டு இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக அதிகமுறை “மின்வெட்டு’ மூலம் “ஷாக்’ தந்தனர். அதேநேரம் மகாராஷ்டிரா அரசு, வெளிமாநிலங்களில் இருந்து கூடுதலாக 1000 “மெகா வாட்’ மின்சாரத்தை பெற்று, மதியம் 2 முதல் இரவு 11 மணி வரை, மின்வெட்டு இல்லாமல், தடங்கலின்றி போட்டியை காண வசதி செய்தனர்.

பிரபலங்களின் படையெடுப்பு : மொகாலி போட்டியைக் காண இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களுடன், அகில இந்திய காங்., தலைவர் சோனியா காந்தி, ராபர்ட் வதேரா ஆகியோர் வந்திருந்தனர். தவிர, பஞ்சாப், அரியானா மாநில முதல்வர்கள் பிரகாஷ் சிங் பாதல், புபிந்தர் சிங் ஹோடா, கவர்னர் சிவராஜ் படேல், பாலிவுட் நட்சத்திரங்கள் அமிர் கான், ஷக்தி கபூர் உள்ளிட்ட பலரும் போட்டியை ரசித்தனர். 3 வாரத்துக்கு முன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட, காங்., பொதுச்செயலர் ராகுல் காந்தி, வி.ஐ.பி., பகுதியில் அமர்ந்து போட்டியை பார்த்தார். திடீரென பாதுகாப்பை மீறி ரசிகர்கள் இருந்த பகுதிக்கு சென்று, அவர்களுடன் அமர்ந்து பார்க்கத்துவங்கினார்.

ஐ.சி.சி., மன்னிப்பு : தேசிய கொடியை விற்கும் உரிமையை, ஐ.சி.சி.,யிடம் பெற்றிருந்த வியாபாரி ஒருவர், மூவர்ணத்தில் ஆன பலூனை காலில் போட்டு மிதித்துள்ளார். இதை நேரில் பார்த்தவர்கள், அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து ஐ.சி.சி., கூறுகையில்,”” நடந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்காக, ஒவ்வொரு இந்தியரிடமும் ஐ.சி.சி., மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது,” என தெரிவித்துள்ளது.

பாக்., பிரதமருக்கு விருந்து : இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய, உலக கோப்பை அரையிறுதி போட்டியை, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஆகியோர் மொகாலி மைதானத்தில் நேரில் பார்த்தனர். இவர்களுக்கு பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், நேற்று இரவு விருந்து கொடுக்கப்பட்டது. இதில் இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் உட்பட மொத்தம் 30 பேர் கலந்து கொண்டனர். இந்த நேரத்தில் பாகிஸ்தானின் ஆசாத் சபிக், யூனிஸ் கானை, யுவராஜ் சிங் வெளியேற்றினார்.

மூன்றாவது முறை : நேற்று பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் உலக கோப்பை அரங்கில் இந்திய அணி மூன்றாவது முறையாக (1983, 2003, 2011) பைனலுக்கு முன்னேறியது. கடந்த 1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 2003ல் கங்குலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தது. இம்முறை தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்லுமா என்பதை பைனலில் காண்போம்.

தொடரும் ஆதிக்கம் : உலக கோப்பை அரங்கில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை ஐந்து முறை (1992, 96, 99, 2003) மோதியுள்ளன. இதில் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சச்சின் அபாரம் : ஆறாவது முறையாக உலக கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய “மாஸ்ட் பேட்ஸ்மேன்’ சச்சின், இதுவரை 44 போட்டிகளில் 6 சதம், 15 அரைசதம் உட்பட 2260 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முன்னிலையில் உள்ளார். இவர், இம்முறை 8 போட்டிகளில் பங்கேற்று 2 சதம், 2 அரைசதம் உட்பட 464 ரன்கள் எடுத்து, 2வது இடத்தில் உள்ளார். இதன்மூலம் மூன்று (1996, 2003, 2011) உலக கோப்பை தொடர்களில் தலா 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s