தமிழக சட்டமன்றத்தின் வரலாறு

தமிழக சட்டமன்றத்தின் வரலாறு 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்குகிறது. தற்போதைய தமிழ்நாடு மற்றும் ஒரிசா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், முந்தைய நிஜாம் மாநிலம் நீங்கலான தற்போதைய ஆந்திரப்பிரதேசம் ஆகியவை உள்ளடக்கியதாக இருந்தது ‘சென்னை மாகாணம்’.

சென்னையை போலவே பம்பாய், கல்கத்தா ஆகிய மாகாணங்களும் அப்போது
நடைமுறையில் இருந்தன. இந்த மாகாணங்களுக்கு பொறுப்பாக தனித்தனி ஆளுநர்கள் செயல்பட்டு வந்தனர். 1773-ம் ஆண்டின் முறைப்படுத்தும் சட்டத்தின்கீழ் வங்காள ஆளுநர் அனைத்து மாகாணங்களின் தலைமை ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) நியமிக்கப்பட்டார்.

1833 மற்றும் 1853 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்த சட்டங்களின்படி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கின. 1861 மற்றும் 1892 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ‘இந்திய கவுன்சில்கள் சட்டஒத்தின்கீழ் சட்டம் இயற்றும் மன்றங்கள் உருப்பெற்றன.

சென்னை மாகாணத்திற்கான நிர்வாகக் குழுவில் ஆறுக்கு குறைவில்லாத 12-க்கு மேற்படாத எண்ணிக்கையிலான அதிகாரிகள் அல்லாத கூடுதல் உறுப்பினர்களை நியமிக்க 1861-ம் ஆண்டு சட்டத்தின்கீழ் வகைசெய்யப்பட்டது. அமைதி மற்றும் நல்லாட்சியை வழங்கும் வகையில் சட்டம் இயற்ற இந்த சட்டமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. 1892-ம் ஆண்டின் இந்திய கவுன்சில்கள் சட்டத்தின்கீழ் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு நியமிக்கப்படும் கூடுதல் உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 20-ஆக அதிகரிக்கப்பட்டது. அதிகாரிகள் அல்லாத இந்த உறுப்பினர்களை மாவட்ட நிர்வாக குழுக்களும் (ஜில்லா போர்டுகள்), பல்கலைக் கழகங்களும், நகராட்சிகளும் பரிந்துரை செய்தன.

மிண்டடோ மார்லி சீர்திருத்தங்கள் என அழைக்கப்படும் 1861-ம் ஆண்டு சட்டத்தின்கீழ் முதல் முறையாக சட்டமன்றங்களுக்கு தேர்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும் நேரடித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இந்த சட்டத்தின்கீழ் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நியமிக்கப்படும் கூடுதல் உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 50-ஆக உயர்த்தப்பட்டது. 1919-ம் ஆண்டு மாண்டேகு -செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய அரசு சட்டத்தின்கீழ் மத்திய, மாகாண அரசுகளுக்கு இடையே சட்டம் இயற்றும் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இச்சட்டத்தின்கீழ் மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினர் அல்லாத ஆளுநர் அந்த சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றும் அதிகாரத்தை பெற்றார்.

1919-ம் ஆண்டின் இந்திய அரசு சட்டத்தின்கீழ் ‘சென்னை மாகாண சட்டமன்றம்’ 1921-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் ஆயுட்காலம் மூன்றாண்டுகளாகும். ஆளுநரால் நியமிக்கப்பட்ட 34 உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 132 உறுப்பினர்களை கொண்டதாக இது இருந்தது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 1921-ம் ஆண்டு ஜனவரி 9-ம் நாள் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆளுநராக இருந்த வெலிங்டன் பிரபுவின் வேண்டுகோளின் பேரில் கன்னாட் கோமகன் சென்னை மாகாண சட்டமன்றத்தை ஜனவரி 12-ம் நாள் துவக்கி வைத்தார். இதில் முதல்முறையாக மாகாண ஆளுநர் பிப்ரவரி 14-ம் நாள் உரையாற்றினார்.

1923 மற்றும் 1926 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களின் அடிப்படையில் சென்னை மாகாணத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது சட்டமன்றங்கள் அமைந்தன. 1930-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட நான்காவது சட்டமன்றத்தின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டு, 1935-ம் ஆண்டின் இந்திய அரசு சட்டத்தின்கீழ் மாகாண தன்னாட்சி 1937-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் வரை செயல்பட்டது.

சட்ட மேலவை:

1935-ம் ஆண்டின் சட்டத்தின்கீழ் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு ‘மேல் அவை’, ‘கீழ் அவை’ என இரு அவைகள் உருவாக்கப்பட்டன. இந்த இரு அவைகளும், ஆளுநரும் சேர்ந்து மாகாண சட்டமன்றம் என அழைக்கப்பட்டது. இந்த சட்டமன்றத்தில் கலைக்கப்பட இயலாத நிரந்தர அவையாக ‘சட்ட மேலவை’ செயல்பட்டது. ஒவ்வொரு மூன்றாண்டின் நிறைவிலும் அதன் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் ஓய்வுபெற வகை செய்யப்பட்டிருந்தது. இதன் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 54-ஆகவும் அதிகபட்சம் 56-ஆகவும் இருந்தது. சட்ட மேலவையில் 35 பொது உறுப்பினர்களும், ஏழு இஸ்லாமிய உறுப்பினர்களும், ஒரு ஐரோப்பிய உறுப்பினரும், மூன்று இந்திய கிறிஸ்துவ உறுப்பினர்களும் இருந்தனர். எட்டுக்கு குறையாமலும் பத்துக்கு மேற்படாமலும் நியமன உறுப்பினர்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

சட்டப்பேரவை:

சென்னை மாகாண சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 215-ஆக இருந்தது. இதில் 146 இடங்களுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றில் கீழ்கண்டவாறு இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது:

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் – 30
பிற்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்தோர் மற்றும் பழங்குடியினர் – 1
இஸ்லாமியர்கள்-28
ஆங்கிலோ இந்தியர்கள் – 2
ஐரோப்பியர்கள் – 3
இந்திய கிறிஸ்தவர்கள் -8
தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் – 6
நிலச்சுவான்தார்கள் – 6
பல்கலைக்கழகம் – 1
தொழிலாளர் பிரதிநிதிகள் – 6
பெண்கள் – 8

1935-ம் ஆண்டு இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் மாகாணங்களை பொறுத்தவரை 1937-ம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது. இதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டு சென்னை மாகாணத்தின் முதலாவது சட்டமன்றம் 1937-ம் ஆண்டு ஜுலை மாதம் அமைக்கப்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போரை ஒட்டி அவசரகால பிரகடனம் அறிவிக்கப்பட்டதால் 1939-ம் ஆண்டு அக்டடோ பர் மாதம் அமைச்சரவை பதவி விலகியது. இதனை தொடர்ந்து இந்த சட்டமன்றம் கலைக்கப்பட்டது.

போர் முடிந்ததும் 1946-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மே மாதம் இரண்டாவது சட்டமன்றம் அமைக்கப்பட்டது.

1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1952ல் குடியரசு ஆனது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது. வயது வந்தோருக்கான வாக்குரிமையின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தலை தொடர்ந்து சென்னை மாநிலத்தின் முதலாவது சட்டமன்றம் 1952-ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி அமைக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த சென்னை மாநில சட்டப்பேரவையில் 375 உறுப்பினர்கள் இடம்பெற்றனர். மொத்தம் 309 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இவற்றில் 243 ‘ஒரு உறுப்பினர் தொகுதி’களும் 66 ‘இரட்டை உறுப்பினர் தொகுதி’களும் இடம் பெற்றிருந்தன. இதில் 62 ‘இரட்டை உறுப்பினர் தொகுதி’களில் தலா ஒரு இடம் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் நான்கு ‘இரட்டை உறுப்பினர் தொகுதி’களில் தலா ஒரு இடம் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இவை தவிர ஆங்கிலோ இந்திய வகுப்பினரைச் சேர்ந்த ஒரு உறுப்பினரை ஆளுநர் நியமனம் செய்தார்.

ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தின் தெலுங்கு பேசப்பட்ட பகுதிகளை தனி ஆந்திர மாநிலமாக அறிவித்தும், பெல்லாரி மாவட்டத்தின் கன்னடம் பேசப்பட்ட பகுதிகளை அன்றைய மைசூர் மாநிலத்துடன் இணைத்தும் 1953-ம் ஆண்டு அக்டோ பர் 1ம் தேதி உத்தரவிடப்பட்டது. இதன் விளைவாக சென்னை மாநில சட்டப்பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கை 231-ஆக குறைந்தது. 1956-ம் ஆண்டு நவம்பர் முதல் நாளிலிருந்து ‘மாநிலங்கள் சீரமைப்புச் சட்டம்’ நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து மலபார் மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதிகள் கேரள மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக சென்னை மாநில சட்டப்பேரவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 190-ஆக குறைந்தது. அன்றைய கேரள மாநிலத்தில் இருந்த தமிழ் பேசும் பகுதிகளான தற்போதைய கன்னியாகுமரி மாவட்டமும், செங்கோட்டை வட்டமும் சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட்டன.

பின்னர் 1956-ஆம் ஆண்டின் ‘தொகுதி சீரமைப்பு’ நடவடிக்கைகளின் விளைவாக சென்னை மாநில சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 205-ஆக உயர்ந்தது. மொத்தம் 167 தொகுதிகளில் 38 ‘இரட்டை உறுப்பினர் தொகுதி’கள் இடம் பெற்றிருந்தன.

1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து இரண்டாவது சட்டப்பேரவை ஏப்ரல் 1ம் தேதி அமைக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட 205 உறுப்பினர்களுடன் ஒரு நியமன உறுப்பினரும் இதில் இடம் பெற்றிருந்தார்.

1959ம் ஆண்டு சென்னை மாநிலத்திற்கும் ஆந்திர மாநிலத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட எல்லை சீர்திருத்தத்தின் விளைவாக ஆந்திர மாநில சட்டப்பேரவையின் ஒரு உறுப்பினர் இடம் சென்னை சட்டப்பேரவைக்கு மாற்றப்பட்டது. இதன் விளைவாக மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 206-ஆக உயர்ந்தது.

1961-ஆம் ஆண்டில் ‘இரட்டை உறுப்பினர் தொகுதி’கள் முறை நீக்கப்பட்டன. இதற்கு பதிலாக 38 கூடுதல் ‘ஒரு உறுப்பினர்’ தொகுதிகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் 37 தொகுதிகள் தாழ்த்தப்பட்டோ ருக்கும் ஒரு தொகுதி பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டன. 1962ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தல்களை தொடர்ந்து மார்ச் 3-ம் தேதி மூன்றாவது சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. 1965ம் ஆண்டின் ‘தொகுதி சீரமைப்பு’ நடவடிக்கைகளின் விளைவாக சென்னை சட்டப்பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கை 234-ஆக உயர்த்தப்பட்டன. இவற்றில் 42 இடங்கள் தாழ்த்தப்பட்டோ ருக்கும் இரண்டு இடங்கள் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கூடுதலாக ஒரு இடத்திற்கு ஆங்கிலோ இந்திய உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டார்.

1967ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தல்களின் விளைவாக மார்ச் முதல் தேதி சென்னை மாநிலத்தின் நான்காவது சட்டப்பேரவை அமைந்தது. இந்த சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாள் ‘சென்னை மாநிலம்’ ‘தமிழ்நாடு’ மாநிலமாக பெயர் மாறியது. 1971ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி அமைக்கப்பட்ட ஐந்தாவது சட்டப்பேரவை 1976ம் ஆண்டு ஜனவரி 31-ம் நாள் கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

1977-ம் ஆண்டு ஜுன் 30-ம் தேதி ஆறாவது தமிழக சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. 1975ம் ஆண்டின் ‘தொகுதி சீரமைப்பு’ நடவடிக்கைகளின் விளைவாக மாற்றியமைக்கப்பட்ட 234 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த சட்டப்பேரவையும் 1980-ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது. இதற்கிடையே 1979-ம் ஆண்டு உப்பிலியாபுரம் பொது தொகுதி பழங்குடியினருக்கான தனித்தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டது. 1980ம் ஆண்டு ஜுன் 9-ம் தேதி ஏழாவது சட்டப்பேரவையும் 1985-ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி எட்டாவது சட்டப்பேரவையும் அமைக்கப்பட்டன. எட்டாவது சட்டப்பேரவை 1988-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது.

எட்டாவது சட்டப்பேரவையில் தமிழக ‘சட்ட மேலவை’யை நீக்குவதற்கான தீர்மானம் 1986ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து அதே ஆண்டின் நவம்பர் 1ம் தேதி தமிழக ‘சட்ட மேலவை’ கலைக்கப்பட்டது. 1937-ஆம் ஆண்டு இரு அவைகளாக உருவாக்கப்பட்ட தமிழக சட்டமன்றம் 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஒரே அவையைக் கொண்ட சட்டமன்றமாக உருவெடுத்தது.

1989-ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அமைந்த 9-வது சட்டப்பேரவை 1991-ம் ஆண்டு ஜனவரி 30-ம் நாள் கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஏற்கனவே கலைக்கப்பட்ட ‘சட்ட மேலவை’யை மீண்டும் உருவாக்க இந்த சட்டப்பேரவையில் 1989ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 10-வது சட்டப்பேரவை 1991ம் ஆண்டு ஜுன் 24-ம் தேதி அமைக்கப்பட்டது. இந்த சட்டப்பேரவையில் ‘சட்ட மேலவை’யை மீண்டும் உருவாக்கும் தீர்மானத்தை ரத்து செய்வதற்கான தீர்மானம் 1991ம் ஆண்டு அக்டோ பர் 4-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. 1996ம் ஆண்டு மே 13ம் தேதி 11-வது தமிழக சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது. இந்த சட்டப்பேரவையில் ஜுலை 26-ம் தேதி மீண்டும் தமிழக ‘சட்ட மேலவை’யை உருவாக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2001ம் ஆண்டு மே 10ம் தேதி நடைபெற்ற தேர்தலை தொடர்ந்து மே 14ம் தேதி 12-வது தமிழக சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. 13-வது தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் 2006 மே 8ம் தேதி நடைபெற்றது.

தொகுதி மறுசீறுமைப்பு:

இந்தியா குடியரசு ஆனதற்கு பின் தமிழக சட்டசபைக்கான முதல் பொதுத் தேர்தல்
நடவடிக்கைகள் 1951-ம் ஆண்டு இறுதியில் துவங்கி 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் ஒன்பது கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் 66 ‘இரட்டை உறுப்பினர் தொகுதி’கள் உட்பட மொத்தம் 309 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 1957-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது தேர்தலில் மாநிலங்கள் சீரமைப்பின் விளைவாக தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 205-ஆக குறைந்தது. 1965-ம் ஆண்டின் ‘தொகுதி சீரமைப்பு’ நடவடிக்கைகளின் விளைவாக சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை 234-ஆக உயர்ந்தது.

1975-ம் ஆண்டின் ‘தொகுதி சீரமைப்பு’ நடவடிக்கைகளின் அடிப்படையில்தான் 1977-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. 234 தொகுதிகளில் அப்போது தேர்தல் நடந்தன. 1977-ம் ஆண்டில் இருந்து 2006-ம் ஆண்டு வரையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல்கள் 1975-ம் ஆண்டு சீரமைக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் நடைபெற்று வந்தன. 2007ம் ஆண்டு நடைபெற்ற ‘தொகுதி சீரமைப்’பின்படி தொகுதிகள் சில மாற்றி அமைக்கப்பட்ட போதும் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

(nkn)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s