கூட்டணிக்குள் கூட்டணி; கூட்டணியில் எதிரி… தி.மு.க.,வில் நடக்கும் உள்ளடி வேலை

வேட்பு மனு தாக்கல் முடிந்து, பிரதான கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், “தி.மு.க., ஆட்சிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கப்படும்’ என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் முதல் ஆளாக குரல் கொடுத்திருப்பது, பல்வேறு விவாதங்களை தூண்டி விட்டுள்ளது.

இன்னும் தேர்தல் முடியவில்லை; யார் வெற்றி பெற்றுள்ளார்; யாருக்கு மெஜாரிட்டி உள்ளது; யார் ஆட்சி அமைப்பார் என்ற எந்த விவரமும் தெரியாத நிலையில், ராமதாஸ் முந்திக் கொண்டு, இத்தகைய அறிவிப்பை வெளியிட வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. “ஆட்சியில் பங்கு’ என்ற காங்கிரசாரின் முயற்சியை முறியடிப்பதற்கான திட்டத்தில் இதுவும் ஒன்று என, ஒரு தரப்பில் கருத்து தெரிவிக்கப்படுகிறது. தி.மு.க., – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, தி.மு.க., 60 தொகுதிகள் தர தயாராக இருந்தது.

காங்கிரஸ் 63 தொகுதிகளை கேட்டு நின்றது. இந்த மூன்று தொகுதிகளுக்காக கூட்டணியே முறியும் அளவுக்கு நிலைமை மோசமான போதும், காங்கிரஸ் தன் பிடிவாதத்தை தளர்த்தவில்லை. அதற்கு காரணம், 60 இடங்களுக்கு மேல் வாங்கும் ஒவ்வொரு இடமும் தி.மு.க.,வை கூட்டணி ஆட்சிக்கு இழுத்துச் செல்லும் ஆயுதம் என்று அக்கட்சி கருதியது. அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றது. ஆனால், தி.மு.க.,வின் வியூகம் வேறு விதமாக உள்ளது.

அண்ணாதுரையால் தமிழகத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட, காங்கிரஸ் அதிகாரத்துக்கு கருணாநிதி மீண்டும் மறுவாழ்வு கொடுத்தார் என்று வரலாற்றில் இடம் பெற்று விடக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். அதற்கு, தி.மு.க.,வுக்கு பா.ம.க.,வின் உதவி தேவைப்படுகிறது. கடந்த 2006 தேர்தலின் போது, தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்ற போது, எந்தக் கட்சிகளும் ஆட்சிக்கு ஆதரவுக் கடிதம் கொடுக்காத போது, முதல் ஆளாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவாலயம் சென்று, ஐந்து ஆண்டுகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என கடிதம் கொடுத்தார். அதன் பின், அனைத்து கட்சிகளும் அதே பாணியை பின்பற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

அதற்கு கைமாறாக, பா.ம.க.,வுக்கு கேட்ட இடங்களை தி.மு.க., முந்திக் கொண்டு வழங்கியுள்ளது. கடந்த முறை ஏழு தொகுதிகளிலும் தோற்ற கட்சிக்கு எந்த பேரமும் இல்லாமல், 30 தொகுதிகளை வாரி வழங்கியது. கூட்டணிக்குள்ளேயே ஒரு கூட்டணியாக தி.மு.க.,வும், பா.ம.க.,வும் இருந்து வருவதாகவே காங்கிரசார் கருதுகின்றனர்.

எனவே, தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று மெஜாரிட்டி பெற காங்கிரஸ் தயவு தேவைப்பட்டாலும், காங்கிரஸ் தயவின்றி பா.ம.க., முட்டுக் கொடுக்க தயாராக உள்ளது என்பதை காண்பிக்கவே, இந்த அறிவிப்பை ராமதாஸ் வெளியிட்டுள்ளார் என்று கருதப்படுகிறது. கடந்த முறை கூட்டணி ஆட்சி அமையவிடாமல் தடுத்த ராமதாஸ், இந்த முறையும் அதே முயற்சியில் ஈடுபடுகிறார் என காங்கிரசார் கருதுகின்றனர்.

இதனால், காங்கிரசின் கோபம் பா.ம.க., பக்கம் திரும்பியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் ராமதாசின் பாதையிலேயே பயணத்தை துவக்கியுள்ளார். தற்போது தி.மு.க., 119 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த உள் ஒப்பந்தத்தின் மூலம், பா.ம.க., – வி.சி.,க்களையும் சேர்த்தால், 159 இடங்களில் போட்டியிடுவதற்கு சமம். இதிலிருந்து மெஜாரிட்டி பிடித்துவிடலாம்; காங்கிரசின் தயவு தேவைப்படாது என்பதே தி.மு.க.,வின் கணக்கு. அதற்கு கைமாறாக, ராஜ்யசபா சீட் தர தி.மு.க., தயாராக உள்ளது. இந்த உள் கூட்டணி விவகாரம் தற்போது காங்கிரசார் மத்தியில் பெரும் விவாதத்தை உருவாக்கி உள்ளது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s