கருணாநிதியால் ஓட்டுக்கு ரூ.1 லட்சம் தரமுடியும்

திருச்சியில் மூன்று நாள் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஜெயலலிதா மூன்றாம் நாளான நேற்று இலவச அஸ்திரத்தை கையிலெடுத்தார். “”ஓட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கருணாநிதியால் தரமுடியும்; அதை வாங்கிக் கொண்டு மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள்,” என்று ஜெயலலிதா பேசினார்.

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்ட ஸ்ரீரங்கம் நில சீர்திருத்தம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 24ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் தன் முதல் நாள் பிரச்சாரத்தை துவக்கிய ஜெயலலிதா, இரண்டு நாட்களாக 70 கி.மீ., தூரம் பயணம் செய்தார். மூன்றாம் நாளான நேற்று திருச்சி புத்தூர் நால்ரோட்டில் பிரச்சாரத்தைத் துவக்கினார்.

தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள, 24 இலவசங்கள் பற்றி கடந்த இரண்டு நாள் பிரச்சாரத்தில் குறிப்பிடவில்லை. மூன்றாம் நாள் பிரச்சாரமான நேற்று ஜெயலலிதா, இலவச அஸ்திரத்தை கையிலெடுத்து பேசினார். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. நேற்று முன்தினத்தை விட நேற்று ஏராளமான தொண்டர்கள், மக்கள் ஜெயலலிதாவை காண கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நீண்ட நேரம் காத்திருந்தனர். மாலை 5 மணிக்கு சங்கம் ஹோட்டலிலிருந்து புறப்பட்ட ஜெயலலிதா புத்தூர் நால்ரோட்டில் தன் பிரச்சாரத்தை துவக்கினார்.

திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம்பிச்சைக்கு ஓட்டு கேட்டு, ஜெயலலிதா பேசியதாவது: கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை மூலம் கருணாநிதி குடும்பம் கோடிகளை குவித்துள்ளது. கருணாநிதி, மக்கள் பணத்தைச் சுரண்டி தன் மக்களை கோடீஸ்வரர்களாக்கியுள்ளார். திரைப்படத்துறையில் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தை ரவுடிக்கும்பல் தான் ஆட்சி செய்கிறது. இந்நிலை தொடர வேண்டுமா? திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., அமைச்சர் நேருவுக்கு தெரியாமல் மாவட்டத்தில் எந்த நிலமும் விற்கப்படுவதில்லை. “தில்லைநகர் நேருநகர்’ ஆகிவிட்டது.

நேரு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமா? மின்மிகு மாநிலமாக இருந்த தமிழகம் “மின்வெட்டு’ மாநிலமாக மாறிவிட்டது. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. காவல் துறை, கருணாநிதியின் ஏவல் துறையாக மாறிவிட்டது. இந்நிலை மாற வேண்டும். ஓட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் தரக்கூடிய அளவுக்கு கருணாநிதியிடம் பணம் உள்ளது. தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பர். அதை வாங்கிக் கொள்ளுங்கள்; மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளர் மனோகரனுக்கு ஓட்டுகேட்டு சத்திரம் பஸ் ஸ்டாண்டில், இலவச அஸ்திரத்தை கையிலெடுத்து ஜெயலலிதா பேசியதாவது:

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற நிலை மாற்றப்பட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரருக்கும், 20 கிலோ அரசி இலவசமாக வழங்கப்படும். மணப்பெண் தாலிக்கு, 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும். தாய்மார்களுக்கு இலவசமாக மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்படும். முதியோர், ஊனமுற்றோர், ஆதரவற்றோர் உதவித் தொகை, 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்படும். அரசு சார்பில் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் செய்து தரப்படும். கரும்பு கொள்முதல் விலை, 2,500 ரூபாயாக உயர்த்தப்படும்.

அரசு, தனியார் பள்ளியில் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப் கம்ப்யூட்டர் வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் கடனுதவியும், அதில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படும். 58 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். மூன்று லட்சம் ஏழைகளுக்கு 1.80 லட்சம் ரூபாய் மதிப்பில் 300 சதுரஅடியில் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். வீடில்லாதவர்களுக்கு 3 சென்ட் நிலம் தரப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு, 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். பால் உற்பத்தியை பெருக்கும் வகையில், 6,000 கிராமங்களில் 60 ஆயிரம் கவைமாடுகள் வழங்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

“ஸ்பெக்டரம்’ ஆம்னிவேன்’: முதல்வர் கருணாநிதி குடும்பத்தை மட்டுமல்ல உலகம் முழுவதும் உலுக்கியெடுத்த “ஸ்பெக்டரம்’ குறித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்து ஒவ்வொரு மேடைகளிலும் கடுமையாக விமர்சித்து வருகிறார். நேற்று அவர் பிரச்சாரம் செய்த திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் “ஸ்பெக்டரம்’ ஊழலை விளக்கும் வகையில் ஆம்னிவேன் நிறுத்தப்பட்டிருந்தது.

அதில், தொலைத்தொடர்பு சாதனங்கள் அலங்கரிக்கப்பட்டு, “ஸ்பெக்டரம்’ ஊழல் தொகையான ரூ.1,76,000 லட்சம் கோடி என எழுதப்பட்டிருந்தது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வேனுக்கு முன் நின்று அனைவரும் “ஃபோட்டோ’ எடுத்துக் கொண்டனர்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s