தி.மு.க – அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்

தமிழகத்தின் தலையெழுத்து. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் கையில் ஆட்சிப் பொறுப்பு என்பதை தீர்மானிக்கும் வகையில், இரு பெரும் திராவிடக் கட்சிகளின் சாதக, பாதகங்கள் குறித்த ஓர் அலசல்:

தி.மு.க., அணி: இந்த அணியில் பிரதான கட்சியான தி.மு.க.,விற்கு கடந்த சட்டசபை தேர்தலில், 26.40 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. இந்த அணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், 8.38 சதவீத ஓட்டுகளையும், பா.ம.க., 5.55 சதவீத ஓட்டுகளையும், கடந்த தேர்தலில் அ.தி.மு.க., அணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள், 1.29 சதவீத ஓட்டுகளையும் பெற்றன. இந்த அடிப்படையில், தற்போதைய தி.மு.க., அணிக்கு மொத்தம் 41.62 சதவீத ஓட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முந்தைய ஓட்டுப்பதிவு சதவீதம், இந்த முறையும் அப்படியே எதிரொலிக்காது என்றாலும், கட்சிகளின் அடிப்படை ஓட்டு வங்கியை இதன் மூலம் கணிக்க முடிகிறது.

சாதகங்கள்: காங்கிரஸ் எந்த அணியோடு சேர்கிறதோ, அந்த அணி தமிழகத்தில் வெற்றி பெறும் என்ற பழைய வரலாறு. பா.ம.க., – விடுதலைச் சிறுத்தைகளுக்கு வட மாவட்டங்களில் உள்ள செல்வாக்கு. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கி, அவர்களை ஓட்டு வங்கியாக மாற்றி வைத்திருப்பது. முந்தைய தேர்தல்களை விட பெருமளவு செலவு செய்யத் தயாராய் தி.மு.க., தலைமை களமிறங்கியிருப்பது கூடுதல் பலம். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் வசதி, கலர் “டிவி’ போன்ற நலத்திட்டங்களில் ஏதாவது ஒன்று, ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள கிரைண்டர் அல்லது மிக்சி, முதியோருக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட அறிவிப்புகளுக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.

பாதகங்கள்: 1989ம் ஆண்டு முதல், மக்கள், ஆட்சி மாற்றத்துக்குத் தான் ஓட்டளித்திருக்கின்றனர். ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, இலங்கை விவகாரம், மீனவர் பிரச்னை, குடும்ப அரசியல், பால் கொள்முதல் விலை, கள் இறக்க அனுமதி போன்ற பல பிரச்னைகள் பாதகங்களின் பட்டியலில் இடம்பிடிக்கின்றன. 1996க்குப் பிறகு, பெரிய அளவில் எழுந்துள்ள ஆட்சி மீதான அதிருப்தி அலை. பிரதான கூட்டணி கட்சியான காங்கிரசுடன் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட மோதலால் உற்சாகம் குறைந்த தொண்டர்கள். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ., ரெய்டு, சாதிக் பாட்சா தற்கொலை உள்ளிட்ட விவகாரங்கள் எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த பிரசார தீனியாக மாறியுள்ளன.

அ.தி.மு.க., அணி: கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., 32.52 சதவீத ஓட்டுகளையும், கடந்த முறை தி.மு.க., அணியில் இருந்த மார்க்சிஸ்ட், 2.64 சதவீதமும், இந்திய கம்யூனிஸ்ட், 1.59 சதவீதமும் ஓட்டுகளைப் பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் தனித்து களமிறங்கி, 8.32 சதவீத ஓட்டுகளைப் பெற்ற தே.மு.தி.க., தற்போது அ.தி.மு.க., அணியில் இடம்பெற்றுள்ளது. இதன் அடிப்படையில், அ.தி.மு.க., அணிக்கு 45.07 சதவீத ஓட்டு இருப்பதாகக் கணக்கிடலாம். லோக்சபா தேர்தலின்போது தே.மு.தி.க.,வின் ஓட்டு வங்கி, 11 சதவீதமாக உயர்ந்தது என்றாலும், அதை குறியீட்டு அளவாக ஏற்க முடியாது. தி.மு.க., – அ.தி.மு.க.,விற்கு மாற்றாக நினைத்த நடுநிலையாளர்கள், தற்போது அ.தி.மு.க., அணியில் இடம் பெற்றுவிட்ட தே.மு.தி.க.,விற்கு ஓட்டளிக்காமல் போகலாம்.

சாதகங்கள்: நடுநிலையாளர்கள், இளைஞர்கள் ஆதரவு பெற்ற தே.மு.தி.க., உள்ளிட்ட வலுவான கூட்டணி. ஜெயலலிதா, விஜயகாந்த், இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் என வலுவான பிரசார பிரமுகர்கள் இருப்பது.

பாதகங்கள்: கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விஷயத்தில் நடந்த கடைசி நேர குளறுபடிகள். ம.தி.மு.க.,வை கூட்டணியில் சேர்க்காததும், பிரசாரப் பீரங்கியான வைகோவை இழந்ததும் ஓட்டிழப்பை ஏற்படுத்தும். ஆளுங்கட்சிக்கு எதிராக எத்தனையோ விவகாரங்கள் இருந்தாலும், அவற்றை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்ல அவகாசம் இல்லாமை. தி.மு.க.,விற்கு இணையாக செலவு செய்ய முடியாத நிலை. “கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள் எண்ணிக்கை, கூட்டணி உள்ளிட்ட பல விஷயங்கள், சமீபத்திய லோக்சபா தேர்தல் முடிவுகள், அதில் கட்சிகள் பெற்றுள்ள ஏற்ற இறக்கங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்தால், ஓட்டு வங்கி என்ற அடிப்படையில் அ.தி.மு.க., அணி 4 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளது.

முடிவு எப்படி: அதையும் தாண்டி, ம.தி.மு.க., – பா.ஜ., – ஐ.ஜே.கே., – நா.ம.க., உள்ளிட்ட கட்சிகளின் ஓட்டுகள், எந்தக் கூட்டணியின் ஓட்டுகளைச் சிதைக்கின்றன என்பதைப் பொருத்து, இரு அணிகளின் வெற்றி வாய்ப்பு அமையும்!

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s