ஐ.மு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க., விலகல் : மத்திய அரசு கவிழாது !

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக தி.மு.க., நேற்று அறிவித்தது. பிரச்னைகளின் அடிப்படையில், மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரப்படும் என்று முடிவு எடுத்தது. இதனால், தி.மு.க., – காங்கிரஸ் இடையேயான ஏழாண்டு உறவு முறிந்தது.

தீர்மான விவரம் வருமாறு:

எதிர் வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.,வும், காங்கிரசும் நடத்திய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில், உடன்பாடு காண முடியவில்லை. கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 48 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை, 60 இடங்கள் கேட்டு, அதற்கு தி.மு.க.,வும் ஒப்புக் கொண்ட பிறகு, தற்போது, 63 இடங்கள் வேண்டும் என்பதும், அந்த இடங்களையும் அவர்களே நிர்ணயிப்பர் என்பதும், இந்த அணியில் தொடர அவர்கள் விரும்பவில்லை அல்லது நம்மை அவர்கள் விரும்பவில்லை என்பதையே தெளிவாகக் காட்டுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், மத்திய ஆட்சியில் தி.மு.க., தொடர வேண்டுமா என்பதை எண்ணிப் பார்த்து, மத்திய அரசில் ஆட்சிப் பொறுப்பில் இடம் பெற விரும்பாமல், தி.மு.க., தன்னை விடுவித்துக் கொண்டு, பிரச்னைகளின் அடிப்படையில் மட்டும் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கலாம் என்ற முடிவை இந்த உயர்நிலை செயல்திட்டக் குழு எடுத்துள்ளது.

முதல்வர் கருணாநிதி தலைமையில், அறிவாலயத்தில் நடந்த உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில், துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மத்திய அமைச்சர் அழகிரி உட்பட, 28 பேர் கலந்து கொண்டனர்.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்தக் கூட்டத்தில், மத்தியில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி அரசிலிருந்து தி.மு.க., விலகுவது; பிரச்னைகளின் அடிப்படையில் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தி.மு.க.,வின் அறிவிப்பை அடுத்து, கடந்த ஏழாண்டு காலமாக அந்தக் கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே தொடர்ந்த உறவு முறிந்துள்ளது.

விலகல் ஏன்?தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியதாவது:

மத்திய அரசிலிருந்து எங்கள் மந்திரிகள் ராஜினாமா செய்வது, வெளியில் இருந்து ஆதரவு தருவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அதிக தொகுதிகள் கேட்டு நெருக்கடி தந்ததது. தொகுதிப் பங்கீடு குறித்து, காங்கிரஸ் மேலிடத்தைச் சேர்ந்த அகமது படேல் மற்றும் அமைச்சர் அந்தோணி ஆகியோருக்கு தெரிவித்திருக்கிறோம். காங்கிரசுடன் தொகுதிப் பங்கீட்டு பிரச்னையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இம்முடிவு எடுக்கப்பட்டது.இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.

தி.மு.க., தற்போது எடுத்த முடிவால் மத்திய அரசுக்கு பாதிப்பு ஏற்படாது. காரணம், பிரச்னைகளின் அடிப்படையில் ஆதரவு தரப்படும் என்று தெரிவித்திருப்பதாலும், மாநில சட்டசபைத் தேர்தல் நடக்கவிருப்பதாலும், மத்திய அரசுக்கு பாதிப்பு இருக்காது. தி.மு.க.,வுக்கு தற்போது, 18 எம்.பிக்கள் உள்ளனர். மத்திய கேபினட் அமைச்சர்களாக இருவர் மற்றும் இணை அமைச்சர்களாக நான்கு பேரும் உள்ளனர்.

543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பெரும்பான்மைக்கு 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 260 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், காங்கிரஸ் கட்சியின் 207 உறுப்பினர்களும், திரிணமூல் காங்கிரஸ் 19 உறுப்பினர்களும், திமுக 18 உறுப்பினர்களும் அடங்குவர். தேசியவாத காங்கிரஸ் (9), தேசிய மாநாட்டுக் கட்சி (3), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), விடுதலைச் சிறுத்தைகள் (1), ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (1) ஆகியவையும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

தற்போது திமுகவின் 18 உறுப்பினர்கள் விலகுவதால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பலம் 260-ல் இருந்து 242-ஆகக் குறையும். இருந்தாலும் சமாஜவாதி கட்சியின் 22 உறுப்பினர்களும், பகுஜன் சமாஜ் கட்சியின் 21 உறுப்பினர்களும் அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்கிறார்கள். இது தவிர, 4 உறுப்பினர்களைக் கொண்ட லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், 3 உறுப்பினர்களைக் கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளித்து வருகின்றன. இவற்றைக் கணக்கிட்டால், திமுகவைத் தவிர்த்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது.

மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை: 543

பெரும்பான்மை பலம்: 272

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி – 260

காங்கிரஸ் – 207

திரிணமூல் – 19

திமுக – 18

தேசியவாத காங்கிரஸ் – 09

தேசிய மாநாடு – 03

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 02

ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா – 01

விடுதலைச் சிறுத்தைகள் – 01

வெளியிலிருந்து ஆதரவு:

பகுஜன் சமாஜ் – 21

சமாஜவாதி – 22

ஆர்ஜேடி – 04

ம.ஜ.த. – 03

(dmdi)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s