எம்ஜிஆர் – ரஜினி படங்கள் இருட்டடிப்பு!

தி பெஸ்ட் ஆப் தமிழ் சினிமா … – மோசர் பேர் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளராக பணியாற்றி, இப்போது யுடிவி நிறுவனத்தில் சேர்ந்துள்ள ஜி தனஞ்செயன் எழுதிய ஆங்கிலப் புத்தகம் இது.

இரண்டு தொகுதிகளாக வெளியாகியுள்ள மிக மிக காஸ்ட்லி புத்தகம் இது (விலை ரூ 2999!).

இந்தப் புத்தகத்தில் 1931-ம் ஆண்டு தமிழ் சினிமா பேசத் தொடங்கிய காலகட்டத்திலிருந்து 2010-ம் ஆண்டு வரையிலான 80 ஆண்டு கால படங்களில், தனது விருப்பத்துக்கேற்ப மிகச் சிறந்த படங்கள் என சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளார் தனஞ்செயன்.

1931 முதல் 1976 வரையிலான காலகட்டத்தில் வெளியான படங்களில் சிறந்தவற்றின் தொகுப்பு முதல் தொகுதியாகவும், 1977 முதல் 2010 வரை வெளியான படங்களில் சிறந்தவை இரண்டாம் தொகுதியாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.

இரண்டு ஆண்டுகள் தயாரான இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று சென்னை கிரீன்பார்க் ஹோட்டலில் நடந்தது.

இயக்குநர்கள் பாலு மகேந்திரா, மகேந்திரன், பாக்யராஜ், சிங்கீதம் சீனிவாசராவ், பார்த்திபன், செல்வராகவன், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில், நடிகர் கமல்ஹாஸன் புத்தகத்தை வெளியிட்டார்.

முன்னதாக இந்தப் புத்தகத்தில் சிறந்த படங்கள் என பட்டியலிடப்பட்டுள்ளவற்றின் வீடியோ காட்சிகளை திரையிட்டுக் காட்டினார்கள்.

இவற்றில் 1950களுக்குப் பிந்தைய படங்களில் சிறந்தவை என காட்டப்பட்டவை பெரும்பாலும் சிவாஜி மற்றும் கமல் படங்களாகவே இருந்தன.

“1950 மற்றும் 60 களில் தமிழ் சினிமாவின் பெரும்பாலான புதிய முயற்சிகள் அமரர் எம்ஜிஆரின் படங்களிலிருந்தே துவங்கியிருந்தன. ஆனால்1960 முதல் 69 வரையிலான காலகட்டத்தில் சிறந்த படங்கள் என தனஞ்செயன் குறிப்பிட்டுள்ளவற்றில், எம்ஜிஆரின் சிறந்த படங்களாக 5 மட்டுமே இடம்பெற்றுள்ளது புத்தகத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியதாக்கியுள்ளது”, என்றார் விழாவுக்கு வந்திருந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.

ஆனால் சிவாஜி நடித்தவற்றில் இரும்புத்திரை போன்ற தோல்விப் படங்களும் கூட இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, தமிழ் சினிமாவின் வர்த்தக எல்லையை விரிவுபடுத்திய ரஜினியின் படங்களான பில்லா, சிறந்த கதை-நடிப்பு என பாராட்டப்பட்ட ஆறிலிருந்து 60 வரை, எங்கேயோ கேட்ட குரல், பொல்லாதவன், அண்ணாமலை போன்ற படங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய கமல்ஹாஸன், இந்த புத்தகம் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று பாராட்டினார். “இங்கு காண்பிக்கப்பட்ட ஆடியோ விஷுவலின் இரண்டாம் பகுதியை நான் வெகுவாக ரசித்தேன். காரணம் அதில் என் படங்கள் நிறைய இடம்பெற்றிருந்தன. இன்னும் கூட ஓடாதா என்று ஏக்கமாகவே இருந்தது. இதன் மூன்றாகம் பாகம் வெளியிடும்போதும் நான் வருவேன்,” என்றார்.

இயக்குநர் கே பாக்யராஜ்

சினிமா என்பது கடைசி வரை கற்றுக் கொள்ளும் விஷயம்தான். ஆனால், இப்போது சில இயக்குநர் கள் ஒரே படம் பண்ணிவிட்டு காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கிறார்கள். அதான் பயமாக உள்ளது, என்றார் இயக்குநர் கே பாக்யராஜ்.

தனஞ்செயனின் தி பெஸ்ட் ஆப் தமிழ் சினிமா புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே பாக்யராஜ் பேச்சுதான் மிகவும் சுவாரஸ்யமாகவும் ஹைலைட்டாகவும் அமைந்தது.

அவர் பேச்சின் ஒரு பகுதி:

சினிமாவில் சாதித்துவிட்டோம் என்று சொல்ல ஒன்றுமே இல்லை. தினமும் கற்றுக் கொள்கிற விஷயம் அது.

அதேபோல, நான்தான் இதை முதலில் செய்தேன் என்று யாரும் கர்வத்தோடு சொல்ல முடியாது. காரணம் நமக்கு முன்பே சிலர் அதைச் செய்திருக்கக் கூடும். அந்த விஷயம் நமக்கு இப்போது உதித்திருக்கும் அவ்வளவுதான்.

உதாரணத்துக்கு, புதிய வார்ப்புகள் படத்தின் க்ளைமாக்ஸில், நாயகி ஜோதி தன் பெயருக்கேற்ப நெருப்பில் எரிவது போல வைத்திருந்தோம். பெயரை புதிய வார்ப்புகள் என்று வைத்துவிட்டு, இப்படி பழைய க்ளைமாக்ஸா வச்சா நல்லாருக்காதே என எங்கள் இயக்குநர் பாரதிராஜா கருதினார். உடனே கவுண்டமணி கட்டிய தாலியை கழற்றி எறிந்துவிட்டு ஹீரோவோடு போவதுபோல காட்சியை மாற்றினோம். ஆனால் இது சரியாக இருக்குமா… மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என பெரிய விவாதம் எங்களுக்குள் நடந்தது.

இறுதியில் அதே காட்சியை வைத்தோம். தமிழ் சினிமாவில் இதற்கு முன் யாரும் வைக்காத காட்சி இது என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது தவறு என்பது இப்போது புரிகிறது. காரணம் 1930களிலேயே குமுதினி என்ற படத்தில், மனைவி தாலியைக் கழற்றி வீசிவிட்டு காதலனுடன் செல்வது போன்ற காட்சியை துணிச்சலாக வைத்திருக்கிறார்கள்.

சினிமாவில் கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும்.ய.. காதுகளைத் தீட்டி வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் பல விஷயங்களை தினமும் தெரிந்து கொண்டே இருக்க முடியும்.

இன்றைக்கு ஒரு வெற்றிப் படம் கொடுத்த சிலர் செய்யும் அலட்டல் தாங்க முடியவில்லை. காலரைத் தூக்கி விட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் தலை பூமியைப் பார்ப்பதே இல்லை. இவங்களையெல்லாம் பாத்தா என்னைப் போன்றவர்களுக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.

ஆக்ரி ராஸ்தாவில்….

எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தைச் சொல்கிறேன். ஒரு கைதியின் டைரி படத்தை நான்தான் எழுதினேன். இந்தப் படத்தை இந்தியில் அமிதாப்பை வைத்து ஆக்ரி ராஸ்தா என எடுத்தேன். இந்தக் கதையில் ஹீரோவுக்கு இரட்டை வேடம். எனக்கோ இரட்டை வேடக் காட்சிகள் எடுத்துப் பழக்கமில்லை. எங்கள் இயக்குநரும் இரட்டை வேடப் படம் எதுவும் எடுக்கவில்லை. கைதியின் டைரி படத்தில் கூட இரண்டு கமல்களும் சந்திப்பது போன்ற காட்சியை அவர் எடுக்கவில்லை. ஆனால் ஆக்ரி ராஸ்தாவில் அப்பா – மகன் சந்திப்பது போன்ற காட்சி வைத்திருந்தேன்.

இந்தக் காட்சி படமாகும்போது எனக்கு பதைப்பாக இருந்தது. காரணம், இரட்டை வேட காட்சியை எடுக்கத் தெரியவில்லை என அமிதாப் நினைத்துவிட்டால் என்ன ஆவது என்ற எண்ணம்தான்.

அப்போது கேமிராமேனும் அமிதாப்பும் அந்தக் காட்சியை எப்படி எடுக்கலாம் என விவாதித்துக் கொண்டிருந்தனர். அதில் அமிதாப் ஒரு டெக்னிக்கில் எடுக்கலாம் என்றார் (டப்பிங்). கேமிராமேன் மாஸ்க் முறையில் எடுக்கலாம் என்றார். எனக்கோ இரண்டுமே தெரியாது!

உடனே சாமர்த்தியமாக, முதல் வேடத்துக்கு அமிதாப் சொல்வது போலவும், இரண்டாவது வேடத்துக்கு கேமராமேன் சொல்வது போலவும் எடுங்கள் என்று கூறினேன். அன்றைக்கு இரட்டை வேடக் காட்சி எடுப்பது எப்படி என்பதில் தெளிவு ஏற்பட்டுவிட்டது. நான் கற்றுக் கொண்டேன்… இதுதான் சினிமா..”, என்று பேசி முடிக்க அரங்கம் கைத்தட்டலில் அதிர்ந்தது!

(tt)

Advertisements

One thought on “எம்ஜிஆர் – ரஜினி படங்கள் இருட்டடிப்பு!”

  1. எம்.ஜி.ஆர்,ரஜினி புகழ் பெற்ற நடிகராக இருக்கலாம்.ஆனால் இருவருமே மசாலா படங்கள் மூலம் பெயர் பெற்றவர்கள். அவர்கள் நடித்ததில் சிறந்த என்ருவரும் போது தேருவது ஒன்று,இரண்டாகத்தான் இருக்கும்.இதில் அவர்களை அதிகமாக சேர்க்கவேண்டும் என்பது அவர்களின் ரசிகர்கள் விருப்பமாக மட்டுமே இருக்கலாம்.ரஜினி வசனங்களில் வியாபார வெர்றி பற்றி புத்தகம் வந்தது அதில் ஏன் கமலை,சிவாஜி-எம்.ஜீ.ஆரை சேர்க்கவில்லை என்று எவரும் கேட்கவில்லை.அந்த வசனங்களை அவரா சொந்தமாகக் கூறினார்.வசனகர்த்தா எழுதிக் கொடுத்ததைத்தானே பேசினார்.ஆனால் புகழ் அவருக்கு மட்டுமே. ஏன் இப்படி மசாலா பட நாயகர்கள் கிறுக்கு என்றுதான் புரியவில்லை. அந்த மூத்த பத்திரிக்கையாளர் என்று ஏன் எழுதுகிறார்கள்.தங்கள் கருத்து என்று எழுதி தங்கள் ரசிகத்தன்மையை வெளிக்காட்ட வேண்டியதுதானே?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s