தன்னை நிரூபித்த விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணிக்கு நம்பிக்கை தரும் நடுவரிசை ஆட்டக்காரராக வந்து தன்னை நிரூபித்துள்ளார் விராட் கோலி.

இந்திய அணியின் பேட்டிங் பலமே நடுவரிசைதான் என்ற காலமும் இருந்தது. ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் தொடக்க ஆட்டக்காரர்கள் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், காவஸ்கருக்குப் பின்னர் நடுவரிசை ஆட்டக்காரர்களாக மொஹிந்தர் அமர்நாத், திலீப் வெங்சர்க்கார்,ஆல்-ரவுண்டர் கபில்தேவ், ரவி சாஸ்திரி என்று பலமான பேட்டிங் வரிசை இருந்தது. 1983-ல் இந்தியா உலகக் கோப்பையை வென்றபோதும் இந்த வரிசைதான் இருந்தது.

அதன் பிறகு மிடில் ஆர்டரில் தொய்வு ஏற்பட்டது. இருந்தபோதும் சில காலம் சச்சின் 4-வது ஆட்டக்காரராக களமிறங்கினார். ராகுல் திராவிட், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் மிடில் ஆர்டரில் பக்கபலமாக இருந்தனர். இதனால் பல ஆட்டங்களில் இந்தியா வெற்றியைக் குவித்தது என்னவோ உண்மை.

சமீப காலங்களில் இந்திய அணியில் நம்பிக்கை தரும் நடுவரிசை ஆட்டக்காரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்கவர் விராட் கோலி. தில்லியைச் சேர்ந்த கோலி, 4-வது ஆட்டக்காரராக களமிறங்கி, மைதானத்தில் எதிரணியினரின் பந்துகளை சம்ஹாரம் செய்வதில் வல்லவர்.

தில்லி அணிக்காக 2006-07-ம் ஆண்டில் களமிறங்கினாலும் இவர் இந்திய அணிக்கு வந்தது 2008-ம் ஆண்டில்தான்.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால் இதே ஆண்டில்தான் 19 வயதுக்குள்பட்டோர் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றுச் செல்லும் வாய்ப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விராட் கோலிக்கு வழங்கியது. மலேசியாவில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்ல விராட் கோலி முக்கிய பங்காற்றினார்.

இதன் மூலம் தேர்வாளர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான விராட், தேசிய அணிக்கு வந்ததில் ஆச்சர்யம் இல்லைதான். இந்த வாய்ப்பு அவருக்கு சாதாரணமாக கிட்டிவிடவில்லை. அதற்குப் பின்னர் விராட் கோலியின் அயராத உழைப்பு இருந்தது. அபாரமான ஆட்டத்திறனால் எதிரணியை துவம்சம் செய்வதில் வல்லவராக வளர்ந்துள்ளார் கோலி.

இதனால்தான் 4-வது இடத்தில் இறங்கி அசத்தி வருகிறார். கோலி அணிக்கு வந்ததால் இப்போது சுரேஷ் ரெய்னாவை எந்த இடத்தில் இறக்குவது என்று தோனி குழம்பிப் போயிருக்கிறார். அதனால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் ரெய்னாவை களமிறக்காமல் விராட் கோலிக்கு அந்த வாய்ப்பை அளித்தார். தோனியின் நம்பிக்கைக்கு சிறிதும் பங்கம் வராமல் அபாரமாக ஆடினார் விராட் கோலி. வங்கதேசத்துக்கு எதிராக அவர்களது மைதானத்திலேயே விளையாடியபோதும் சிறிதும் பயப்படாமல் அவர் பந்துகளை எதிர்கொண்ட விதம், விமர்சகர்களையே வியக்கச் செய்தது.

இத்தனை நாளாக இந்த நடுவரிசை ஆட்டக்காரர் எங்கிருந்தார். அவரைத் தேடிக் கண்டுபிடித்து அணிக்கு கொண்டு வந்தவர்களுக்கு பாராட்டுகள் என்று விமர்சகர்கள் புளகாங்கிதமடைந்தனர். ஒரு நாள் போட்டிகள் மட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டியிலும் அபாரமாக ஆடி வருகிறார் விராட் கோலி. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக அவர் ஆடி வருகிறார்.

விராட் கோலிக்கு மிஸ்டர் கூல் என்ற பெயரும் உண்டு. வங்கதேசத்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் மிஸ்டர் கூல் அபாரமாக ஆடி 83 பந்துகளில் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் அதிரடி நாயகன் சேவாக்குடன் இணைந்து கூட்டாக 3 விக்கெட்டுக்கு 203 ரன்களை சேர்த்தார். தனி ஆவர்த்தனம் செய்வதாக இருந்தாலும் சரி, கூட்டு சேர்ந்து ஜுகல் பந்தி செய்வதாக இருந்தாலும் சரி, எதற்கும் தயார்தான் இந்த கோலி.

இதுவரை 48 ஒரு நாள் ஆட்டங்களில் பங்கேற்று 1,852 ரன்களைக் குவித்துள்ளார். இவரது ரன்குவிப்பு சராசரி 49.52. இவரது ரன் குவிப்பு சராசரியைப் பார்த்தாலே, கோலியின் ஆட்டத்திறன் தெரிந்துவிடும். இதில் 5 சதங்களும், 13 அரை சதங்களும் அடங்கும்.

அடுத்து வரும் உலகக் கோப்பை லீக் ஆட்டங்களிலும் விராட் கோலியின் விளாசல் தொடரும் என்றே எதிர்பார்க்கலாம்.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s