உலகக் கோப்பை கிரிக்கெட் 2011: இந்தியா சாதனை படைக்குமா?

1844-ல் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான முதலாவது சர்வதேசக் கிரிக்கெட் போட்டி நடந்த இடம் நியூயார்க் நகரம். அப்போது, அமெரிக்கா, கனடா ஆகிய இரண்டு நாடுகளுமே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு உள்பட்ட நாடுகள். அந்த மூன்று நாள் போட்டியில் 22 ரன்கள் அதிகம் பெற்று கனடா அமெரிக்காவை வென்றது.

வேடிக்கை என்னவென்றால் அமெரிக்காவிலும் கனடாவிலும் கிரிக்கெட் ஒரு ஜனரஞ்சக விளையாட்டாக நிலைபெற முடியவில்லை என்பதுதான்.

14 நாடுகள் பங்கேற்க இருக்கும் ஆறுவார பத்தாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெறும் விளையாட்டுப் போட்டியாக மட்டுமே கருத முடியாது. சுமார் நூறு கோடிப் பார்வையாளர்கள், நேரிலும் தொலைக்காட்சிகள் மூலமாகவும் தங்களது அன்றாட அலுவல்களைக்கூட மறந்து ஒன்றிப்போகும் ஒரு நிகழ்வை வெறும் விளையாட்டு என்று எப்படி விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியும்?

கிரிக்கெட் ஒரு மிகப்பெரிய வியாபாரமாகவும், கோடிக்கணக்கான பணம் புரளும் நிகழ்வாகவும் மாறியிருக்கிறது. இந்தியாவில் விளையாட்டுக்காகச் செலவிடப்படும் விளம்பர ஒதுக்கீட்டில் 85% பணம் கிரிக்கெட்டை முன்னிலைப்படுத்தித்தான் செய்யப்படுகிறது.

போட்டிகளில் விளம்பரம் செய்வதற்கும், தங்களது பொருள்களை விற்பனை செய்வதற்கு விளம்பர நாயகர்களாக கிரிக்கெட் வீரர்களை ஒப்பந்தம் செய்து கொள்வதற்கும் பல கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்களால் செலவிடப்படுகிறது. தொலைக்காட்சிச் சேனல்களின் மிகப்பெரிய வருமானமாகக் கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பு உயர்ந்திருக்கிறது. நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் மொத்த விளம்பர வருவாய் ரூ. 700 கோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நடைபெற இருக்கும் பத்தாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அநேகமாக, சச்சின் டெண்டுல்கரின் கடைசி உலகக் கோப்பைக்கான விளையாட்டாக இருக்கக்கூடும். பாகிஸ்தானின் ஜாவித் மியான்தத்தைப்போல சச்சினும் இந்தப் போட்டிகளில் விளையாடி ஆறு தடவை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட சாதனையை ஏற்படுத்த இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் கடந்த இரண்டு உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிபெற்ற அணியின் தலைவராக இருந்திருக்கிறார். இந்த முறையும் ஆஸ்திரேலியா கோப்பையை வெல்லுமானால், மூன்று முறை வென்று “ஹாட்ரிக்’ சாதனை படைத்த பெருமை பாண்டிங்குக்குக் கிடைக்கும்.

இந்திய கிரிக்கெட் அணி இதுவரை இல்லாத அளவுக்குத் தனது உற்சாகத்தின் உச்சகட்டத்தில் இருக்கிறது என்பதுதான் பலரின் கணிப்பு. 28 ஆண்டுகளுக்கு முன்னால் கபில்தேவின் தலைமையில் மூன்றாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றபோது இருந்த அதே துடிப்பும், புரிந்துணர்வும், வெற்றிபெற்றாக வேண்டும் என்கிற வெறியும் மகேந்திரசிங் தோனியின் தலைமையிலான இன்றைய அணிக்கும் இருக்கிறது என்பதுதான் விளையாட்டு விமர்சகர்களின் ஒட்டுமொத்தக் கருத்து.

தொடக்க ஆட்டமான மிர்பூர் போட்டியைத் தவிர, ஏனைய அத்தனை ஆட்டங்களையும் இந்தியா, தாய்நாட்டில்தான் ஆட இருக்கிறது என்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய பலம். பழக்கமான மைதானத்தில், பழக்கமான சூழ்நிலையில் விளையாடுவது இயற்கையான பலம். ரசிகர்கள் தரும் உற்சாகத்துக்கும் கேட்க வேண்டாம். அதேநேரத்தில், ரசிகர்களின் அதிகரித்த எதிர்பார்ப்பு சிலவேளைகளில் சுமையாக மாறிவிடக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தனது அணியினருக்கு மனஅழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு கேப்டன் தோனிக்கு உண்டு.

போட்டியில் கலந்துகொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 15 பேர் கொண்ட அணி ஒரு முழுமையான, எல்லாத் தேவைகளையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் அணி என்றுதான் சொல்ல வேண்டும். பியூஷ் சாவ்லா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், விக்கெட் கீப்பர் தோனிக்குத் தேவை ஏற்பட்டால் மாற்றாக இருக்க யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லையே என்பதும் வேண்டுமானால் குறைகள் என்று குறிப்பிடலாம்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ளாத லெக் ஸ்பின்னரான பியூஷ் சாவ்லாவைக் குழுவில் இணைத்திருப்பது ஒருவகையில் “ரிஸ்க்’தான். அதேநேரத்தில், சில வேளைகளில் ஆஃப் ஸ்பின்னர்களாலும், பௌலர்களாலும் வீழ்த்த முடியாத விக்கெட்டுகளை, திடீரென்று லெக் ஸ்பின்னர்களைப் பந்து வீசச்சொல்லி வீழ்த்துவது கிரிக்கெட் விளையாட்டில் கையாளப்படும் உத்தி என்கிற முறையில் தேர்வுக்குழு சாவ்லாவைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். மேலும், பேட்டிங்கிலும் தேர்ச்சியுடைய சாவ்லா ஏழாவது ஆட்டக்காரராக யூசுப் பதானுடன் இணைந்து தோல்வி முகத்தில் இருக்கும் ஆட்டத்தை வெற்றி முகமாக மாற்றவும் கூடும்.

கடந்த சில ஆண்டுகளாகவே மகேந்திரசிங் தோனியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பல வெற்றிவாகைகளைச் சூடியபடி இருக்கிறது. பத்தாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தோனியின் தலைமையிலான இந்திய அணி வெற்றிபெற்றால், 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்ற பெருமை மட்டுமல்ல, முதன்முதலாக சொந்த மண்ணில் ஒரு கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற பெருமையையும் தட்டிச் செல்லும்.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s