உலக கோப்பை கிரிக்கெட் 2011: இந்திய மைதானங்கள் எப்படி?

இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் நடைபெற உள்ள இந்த உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 49 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில் இந்தியாவில் 8 மைதானங்களிலும், இலங்கையில் 3 மைதானங்களிலும், வங்கதேசத்தில் 2 மைதானங்களிலும் நடைபெற உள்ளன. இந்திய மைதானங்கள் பற்றிய விவரம்:

ஈடன் கார்டன்ஸ் (கொல்கத்தா)

இந்தியாவில் மிகப்பெரிய, பழமையான கிரிக்கெட் மைதானம் ஈடன் கார்டன்ஸ். அதிகபட்சமாக 90 ஆயிரம் பேர் இந்த மைதானத்தில் ஆட்டத்தை ரசிக்க முடியும். உலகக் கோப்பை தொடங்கும் முன்பு இந்த மைதானம் பிரச்னையிலும் சிக்கியுள்ளது. மைதானம் முழுமையாகத் தயாராகாததால் இந்த உலகக் கோப்பையில் இங்கு நடைபெற இருந்த இந்திய, இங்கிலாந்து ஆட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற ஐசிசி உத்தரவிட்டது. ÷

1987-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் 2 ஆட்டங்களும், 1996 உலகக் கோப்பை போட்டியில் ஓர் ஆட்டமும் இந்த மைதானத்தில் இதற்கு முன் நடைபெற்றுள்ளன. 1996 உலகக் கோப்பையில் இந்தியா- இலங்கை இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் ரசிகர்கள் ஏற்படுத்திய இடையூறுகளால் ஆட்டம் முடிக்கப்பட்டு, இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த அளவுக்கு ஆக்ரோஷமான ரசிகர்களைக் கொண்ட இடம்.

பெரோஸ் ஷா கோட்லா (தில்லி)

இந்தியாவில் உள்ள மற்றொரு புகழ்வாய்ந்த மைதானம் பெரோஸ் ஷா கோட்லா. 1883-ல் உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் 1948 முதல் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் 48 ஆயிரம் பேர் அமர்ந்து ஆட்டத்தைக் காண முடியும்.

÷1987 உலகக் கோப்பையில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி இந்த மைதானத்தில்தான் ஆஸ்திரேலியாவை 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

÷1996-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியா – இலங்கை லீக் ஆட்டம் இங்கு நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் சச்சின் அதிரடியாக விளையாடி 137 ரன்கள் குவித்தார். எனினும் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கு 4 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

வான்கடே (மும்பை)

இந்த உலகக் கோப்பைப் போட்டிகளுக்காக பல மாற்றங்களுடன் தயாராகியுள்ளது மும்பை வான்கடே மைதானம். 1974-ல் அமைக்கப்பட்ட இந்த மைதானத்தில் 45 ஆயிரம் பேர் ஆட்டத்தை ரசிக்க முடியும்.

÷1987 உலகக் கோப்பையில் அரையிறுதி உள்பட இரு ஆட்டங்கள் இங்கு நடைபெற்றுள்ளன. இதில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. எனினும் இங்கிலாந்து எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

÷1996 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டம் மும்பை வான்கடேயில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 16 ரன் வித்தியாசத்தில் வென்றது. மார்க் வாஹ் 126 ரன்கள் எடுத்தார். சச்சின் 90 ரன்களில் துரதிருஷ்டவசமாக அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தின் முடிவும் மாறிவிட்டது.

÷இந்த உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் உள்பட 3 ஆட்டங்கள் இங்கு நடைபெறவுள்ளன.

எம்.ஏ. சிதம்பரம் (சென்னை)

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் என்ற பெயரில் அனைவராலும் அறியப்பட்டது எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம். 50 ஆயிரம் பேர் கண்டுகளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானம், இந்த உலகக் கோப்பைப் போட்டிக்காக புதிதாகத் தயாராகியுள்ளது.

1916-ல் அமைக்கப்பட்ட இந்த மைதானத்தில் இதுவரை 3 உலகக் கோப்பை ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. 1987-ம் ஆண்டு உலகக் கோப்பையின் முதல் ஆட்டம் சென்னையில் நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதின. வெற்றியின் விளிம்புவரை சென்ற இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதே உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

1996 உலகக் கோப்பை காலிறுதி ஆட்டம் இங்குதான் நடைபெற்றது. இதில் நியூஸிலாந்து அணியை ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. உலகக் கோப்பை போட்டியில் இங்கு நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

பஞ்சாப் கிரிக்கெட் வாரிய மைதானம் (மொஹாலி)

இந்தியாவில் புதிதாக அமைக்கப்பட்ட மைதானங்களில் ஒன்று பஞ்சாப் கிரிக்கெட் மைதானம். 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் 30 ஆயிரம் பேர் ஆட்டத்தைக் காண முடியும்.

அனைத்து நிலையிலும் சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த மைதானத்தின் சிறப்பு அம்சம்.

இதுவரை ஒரே ஒரு உலகக் கோப்பை போட்டி மட்டும் இங்கு நடைபெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கு 3 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

விதர்பா (நாகபுரி)

35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தியாவின் மிகவும் புதிய மைதானம் விதர்பா கிரிக்கெட் வாரிய மைதானம். 2008-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த மைதானத்தில் 45 ஆயிரம் பேர் அமரலாம். ÷இதுவரை 3 டெஸ்ட், 2 ஒருநாள் ஆட்டம், ஒரு டுவென்டி20 ஆகிய சர்வதேச ஆட்டங்களே இங்கு நடைபெற்றுள்ளன. 2009-ம் ஆண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 354 ரன்கள் குவித்து, 99 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்த மைதானத்தில்தான்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கு 4 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

சர்தார் படேல் (ஆமதாபாத்)

÷குஜராத்தின் சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சர்தார் படேல் மைதானம். 50 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த மைதானத்தில் 54 ஆயிரம் ரசிகர்கள் ஆட்டத்தைக் காண முடியும்.

1987-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஜிம்பாப்வேயை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

1996 உலகக் கோப்பையின் முதல் ஆட்டம் இங்கு நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை நியூசிலாந்து 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இது தவிர வேறு உலகக் கோப்பை ஆட்டங்கள் இங்கு நடைபெறவில்லை.

இந்த உலகக் கோப்பையில் ஒரு காலிறுதி ஆட்டம் உள்பட மொத்தம் 3 ஆட்டங்கள் இங்கு நடைபெறவுள்ளன.

சின்னசாமி (பெங்களூர்)

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு வெற்றியை மட்டுமே தந்துள்ள மைதானம். 1987 உலகக் கோப்பையில் நியூஸிலாந்துக்கு எதிராக சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

÷1996 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பரபரப்பான காலிறுதி ஆட்டம் இங்கு நடைபெற்றது. இதில் இந்தியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் 50 ஆயிரம் பேர் வரை ஆட்டத்தைக் காணமுடியும். இந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கு 5 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s