கவர்ச்சி உடைகளை அணிந்ததால் விவாகரத்து!

கணவனுக்கு பிடிக்காத கவர்ச்சி உடைகளை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  
டெல்லியைச் சேர்ந்தவர் மகேஷ். இவருக்கும் நேஹாவுக்கும் 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). திருமணம் முடிந்து உற்சாகமாக தேனிலவு புறப்பட்டனர். அப்போதே இருவருக்கும் தகராறு ஆரம்பமானது. திருமணத்தின்போது அடக்க ஒடுக்கமாக காட்சியளித்த நேஹா, குட்டைப்பாவாடை, டி ஷர்ட் என கவர்ச்சி உடையுடன் கிளம்பினார். இதை பார்த்து மகேஷ் அதிர்ச்சியடைந்தார். ‘இது மிகவும் ஆபாசமாக இருக்கிறது. வேற டிரெஸ் போட்டு வா’ என்று மகேஷ் கூறினார். அதற்கு நேஹா, ‘எனக்கு விருப்பப்பட்ட டிரெஸ் போட்டுக்கிறேன். என்னை 10 பேர் பார்த்து ரசிக்க வேண்டும்’ என்று கூறினார்.

இதனால், தேனிலவே மகேஷுக்கு கசந்து போனது. அதன்பிறகு, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. வெறுத்து போன மகேஷ், விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின்போது, மகேஷ் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை சுமத்தினார் நேஹா. வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக மகேஷ் மற்றும் குடும்பத்தார் மீது போலீசிலும் புகார் அளித்தார். எனினும்,  நேஹாவின் உரையாடல் அடங்கிய டேப்பை நீதிமன்றத்தில் மகேஷின் தந்தை தாக்கல் செய்தார்.
அதை முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொண்ட நீதிபதி மன்மோகன் சர்மா அளித்த தீர்ப்பு வருமாறு:

உடலளவில் தீங்கிழைப்பது மட்டும் கொடுமை அல்ல. மனதை புண்படுத்துவதும் கொடுமைப்படுத்துவதற்கு சமம்தான். கணவனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தக்க பாடம் கற்பிப்பதற்காக பெற்றோருடன் சேர்ந்து சதித் திட்டம் அரங்கேற்றும் அளவுக்கு நேஹா சென்றுள்ளார். நேஹா கவர்ச்சி உடைகளை அணிவது மகேஷுக்கு பிடிக்கவில்லை. இதை நேஹா ஏற்கவில்லை. கவர்ச்சி உடைகளை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம். இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுகிறது.

Advertisements