இஸ்ரோ ஊழல் ரூ.2 லட்சம் கோடி எப்படி?

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், அதையும் தூக்கிச்சாப்பிட்டுவிடக்கூடிய மற்றொரு அலைக்கற்றை முறைகேட்டை துருவி ஆராயத் தொடங்கிவிட்டது தலைமை கணக்குத் தணிக்கைத் துறை.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தனது வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியா என்ற நிறுவனத்துடன் 2005-ம் ஆண்டு செய்துகொண்டுள்ள அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தம்தான் இப்போது புதிதாக ஆராயப்படும் முறைகேடு. இதன் மூலம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைவிட அதிகம். அதாவது, ரூ. 2 லட்சம் கோடி (ரூ.2,00,000,00,00,000).

இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரோ தனது தொழில் பங்குதாரர் நிறுவனமாகிய தேவாஸ் மல்டிமீடியா பயன்பெறுவதற்கென்றே இரண்டு செயற்கைக்கோள்களை – ஜிசாட் 6, ஜிசாட் 6ஏ – விண்ணில் ஏவும். இதற்காக இஸ்ரோ ரூ.2,000 கோடி செலவிடும். இந்தக் கோள்களில் தேவாஸ் தனக்காக 70 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீட்டை எடுத்துக் கொள்ளும். 20 ஆண்டுகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் பயன்படுத்தும்.

இந்த ஒப்பந்தத்தால் இஸ்ரோவுக்கு என்ன லாபம்? செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக ரூ.174 கோடி தொகையை தேவாஸ் மல்டிமீடியா இஸ்ரோவுக்கு வழங்கும். செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பின்னர் அலைக்கற்றை வாடகையாக ரூ.1,150 கோடியை இந்நிறுவனம் இஸ்ரோவுக்கு வழங்கும்.

2,500 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைத் திறன்கொண்ட இந்த செயற்கைக்கோள்களில் 70 மெகாஹெர்ட்ஸ் அளவுக்குப் பயன்படுத்தும். (ஒரு வினாடிக்கு ஒரு தகவல் அல்லது டேட்டா அனுப்புவதை ஒரு ஹெர்ட்ஸ் என்று சொன்னால், ஒரு மெகாஹெர்ட்ஸ் மூலம் ஒரு வினாடிக்கு 70 லட்சம் டேட்டாக்கள் அனுப்பும் திறன் ஆகும்). செயற்கைக்கோள் செயல்படத் தொடங்கியவுடன் தனது தொழிலை தேவாஸ் மல்டிமீடியா தொடங்கிவிடும். இதற்காக அந்நிறுவனம் ரூ.2,300 கோடி முதலீடு செய்யத் தயாராக உள்ளது. சரி, இதனால் இஸ்ரோவுக்கு என்ன லாபம்? லாபத்தில் எத்தனை விழுக்காடு இஸ்ரோவுக்கு கிடைக்கும்? இது இந்த ஒப்பந்தத்தில் தெளிவாக இல்லை.

முன்னாள் அறிவியல் செயலரின் நிறுவனம்:

2004-ல் பெங்களூரில் தொடங்கப்பட்ட தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்தின் தலைவராக இருக்கும் எம்.ஜி. சந்திரசேகர், இஸ்ரோவின் முன்னாள் அறிவியல் செயலர். இந்த நிறுவனத்தின் 17 விழுக்காடு பங்கினை, டாயிஷ் டெலிகாம் என்ற அயல்நாட்டு நிறுவனம் 75 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது. கொலம்பியா கேபிடல், டெலிகாம் வென்சர்ஸ் ஆகிய நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் இந்திய ஜாம்பவான்கள் யார் இருக்கிறார்கள் என்பது மேலும் துருவி விசாரிக்கும்போது தெரியவரலாம்.

தேவாஸ் மல்டிமீடியாவுக்கு இப்போது இணையதள சேவை அளிப்பு உரிமம் மட்டுமே இருக்கிறது. அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் 74 விழுக்காடு அன்னிய நேரடி முதலீடு கொண்டுள்ள இந்நிறுவனம், செயற்கைக்கோள் மூலமாக புவிமிசை தனிநபர் கைப்பேசி தகவல் தொடர்புக்கு இனிமேல்தான் உரிமம் பெறவுள்ளது. இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டை வேறு எந்த செயல்பாட்டுக்கெல்லாம் தேவாஸ் மல்டிமீடியா பயன்படுத்தும் என்பது குறித்து ஒப்பந்தம் தெளிவாக இல்லை.

இதே அளவு ஒதுக்கீட்டில் முன்னர் தூர்தர்ஷன் தனது ஒளிபரப்பை இந்தியா முழுவதும் சென்றடைய பயன்படுத்தியது. இந்த அலைக்கற்றையில் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் இணைப்புக்கான பிராட்பேண்டு சேவை அளிக்க முடியும். இதனால் எஸ்-பாண்ட் அலைக்கற்றை, 4ஜி (நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பம்) எனச் சொல்லப்படுகிறது.

அண்மையில், பாரத் சஞ்சார் நிகாம் லிட், மகாநகர் டெலிபோன் லிட் நிறுவனத்துக்கு 20 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது அந்த அரசு நிறுவனங்கள் தலா ரூ.12,847 கோடி பணம் செலுத்தின. ஆனால் தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டி மீடியா வெறும் ரூ.1000 கோடியில் இந்த உரிமத்தைப் பெறுகிறது என்பது அதிர்ச்சித் தகவலாகும். இந்த 4ஜி தொழில்நுட்பத்துக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற உலக அளவில் பல நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.

“”இதெல்லாம் தொழில்போட்டியால் எங்களுக்கு எதிராகக் கிளப்பப்படும் விவகாரம். திட்டமிட்டபடி செயல்படுவோம்” என்று சொல்கிறார் தேவாஸ் மல்டிமீடியா தலைவர் சந்திரசேகர்.

நடுவண் அரசின் விண்வெளி பிரிவின் கட்டுப்பாட்டில் இஸ்ரோ உள்ளது. விண்வெளி பிரிவு பிரதமர் மன்மோகன் சிங்கின் நேரடிப் பொறுப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் எழுப்பியுள்ள கேள்விகள்

ஏலம் நடத்தாமலேயே எஸ்-பாண்டு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது ஏன்?

நிறுவனத்துக்குரிய (இஸ்ரோ) பாதுகாப்பு கட்டுப்பாடு முறைகள் கடைப்பிடிக்கப்படவில்லையே ஏன்?

பிரதமர் அலுவலகம், அமைச்சரவை, விண்வெளி குழுமம் ஆகிய யாருக்குமே இந்த ஒப்பந்தம் பற்றிய விரிவான விவரங்கள் முறைப்படி தெரிவிக்கப்படவில்லை. குறைத்து மதிப்பீடு செய்வதால் இஸ்ரோவுக்கு ஏற்படும் செலவுகள் உள்பட எதையும் தெரிவிக்கவில்லையே ஏன்?

ஒப்பந்தம் செய்துகொண்டவர் நலனுக்காக இரண்டு செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு மக்கள் பணம் செலவிடப்படுகிறதே ஏன்?

தேவாஸ் மல்டிமீடியாவின் நிபந்தனைகள், இதற்கு முன்னர் இஸ்ரோ செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து விலகிச் சென்றுள்ளனவே, ஏன்?

விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை

இஸ்ரோ வழியாக நடந்திருப்பதாகக் கூறப்படும் புதிய ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தன.

விண்வெளித் துறை பதில் அளிக்கும் – இஸ்ரோ

பெங்களூர்: அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஒப்பந்தம் மூலம் ரூ.2 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விண்வெளித் துறை உரிய பதிலை அளிக்கும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியா என்ற நிறுவனத்துடன் 2005-ல் செய்து கொண்ட அலைக்கற்றை தொடர்பான ஒப்பந்தம் மூலம் நாட்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.

அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஒப்பந்தம் தொடர்பாக தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விண்வெளித் துறை பதில் அளிக்கும் என்று கூறியுள்ளது.

ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், தேவாஸ் மல்டிமீடியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை விண்வெளித் துறை ஏற்கெனவே மறு ஆய்வு செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் மக்களின் நலனைக் காக்கத் தேவைப்படும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s