2ஜி விசாரணையில் நடந்த ஒத்துழையாமை இயக்கம்!

“”2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை, வேண்டிய சிலருக்கு மட்டும் சலுகை காட்டப்படுகிறது என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது; ஆனால் நாங்கள் கேட்ட தகவல்களை முழுமையாகத் தராமலும், அளித்த ஒரு சில தகவல்களை மிகுந்த காலதாமதப்படுத்தியும் தந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஒத்துழையாமை இயக்கத்தையே நடத்திவிட்டனர் டெலிகாம் உயர் அதிகாரிகள்” என்று ஊழல் தடுப்பு,கண்காணிப்பு தலைமை ஆணையராக (சி.வி.சி.) பணியாற்றிய பிரத்யூஷ் சின்ஹா தெரிவிக்கிறார்.

ஊழல் தடுப்பு, கண்காணிப்பு தலைமை ஆணையராக 4 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு 2010 ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்ற பிரத்யூஷ் சின்ஹா, பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார். அவர் பி.டி.ஐ.க்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த தனிப் பேட்டியில் கூறியதாவது:

எங்களை மதிக்கவில்லை:
“2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்குவது தொடர்பாக நாங்கள் கூறிய யோசனைகளை தொலைத்தகவல் தொடர்புத்துறை மதிக்கவில்லை. ஏலம் மூலம் விற்பதற்குப் பதிலாக “”முதலில் வந்தவருக்கே முன்னுரிமை” என்ற அடிப்படையில் விற்பனை செய்தது. அதையும்கூட லாபகரமாக, எல்லோருக்கும் வாய்ப்பளித்துச் செய்யவில்லை.

ஏதோ தவறாக நடக்கிறது என்பது புரிந்ததும் அந்த விற்பனை தொடர்பாக கேள்விகள் கேட்டபோது பதில் அளிக்கவோ விவரம் தரவோ அவர்கள் முன்வரவில்லை.

எப்படியோ நாங்கள் எங்களுக்குத் தேவைப்பட்ட தகவல்களைத் திரட்டி விசாரணையைத் தொடங்கினோம். அரசின் கொள்கையை முறையாக அமல் செய்யாமல் எதையோ செய்கிறார்கள் என்பது முதல் நோக்கிலேயே தெரிந்துவிட்டது.

நேரடி விசாரணை:
இதையடுத்து 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நேரடி விசாரணையைத் தொடங்கினோம். ஏலம்தான் சிறந்த வழி என்று நாங்கள் முதலிலேயே கருதினோம். ஒழுங்காக எதுவும் நடக்கவில்லை என்பது குறித்து எங்களுக்கு முதல் நாளிலிருந்தே எந்தவித ஐயமும் இல்லை.

தகுதி இல்லாத நிறுவனங்கள்:

2ஜி அலைக்கற்றை சேவையை அளிப்பதற்கான அனுபவமோ, தகுதியோ, உரிய வசதிகளோ ஏதும் இல்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் தரப்பட்டது எங்கள் விசாரணையில் தெரியவந்தது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கிரிமினல் சதி நடந்திருப்பதும் தெரியவந்தது.

இப்படிப்பட்ட நடைமுறையை விசாரிக்க அதற்கான வசதிகள் உள்ள விசாரணை அமைப்பால்தான் முடியும் என்பதால் மத்தியப் புலனாய்வுக் கழகத்திடம் (சி.பி.ஐ.) இந்தப் பொறுப்பை அளித்தோம்.

தொகையில் ஏன் மாறுபாடு?

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏல முறையில் விற்காமல், முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையிலும் முந்தைய ஆண்டுகளில் விற்ற அதே விலையிலும் விற்றதால் அரசுக்கு வர வேண்டிய வருவாய் இழப்பு 1.76 லட்சம் கோடி ரூபாய் என்று தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஐ.ஜி.) தனது அறிக்கையில் மதிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்ட சிலரைக் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்த சி.பி.ஐ. அமைப்போ அரசுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக மட்டுமே வழக்கு தொடுத்திருக்கிறது. இந்த வேறுபாடுக்குக் காரணம் இரு அமைப்புகளுக்கும் உள்ள நிபுணத்துவம்தான்.

சி.ஏ.ஜி. அமைப்பில் திறமை வாய்ந்த, அனுபவசாலிகளான நல்ல தகுதி படைத்த தணிக்கையாளர்கள் (ஆடிட்டர்கள்) இருக்கின்றனர். அவர்கள் சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படும் நவீன அளவுகோல்களுடன் இந்தப் பிரச்னையை அணுகி வெவ்வேறு வழிகளில் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பைத் துல்லியமாகக் கணக்கிட்டுள்ளனர். சி.பி.ஐ. அமைப்பில் அத்தகைய நிபுணர்கள் இல்லை. எனவே அவர்கள் குத்து மதிப்பாகவோ, அல்லது வெளி நிபுணர்களின் ஆலோசனைப்படியோ இந்தத் தொகையைக் குறிப்பிட்டிருக்கக்கூடும் என்றே கருதுகிறோம். ஆனால் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள தொகை மிகச் சாதாரணமானதல்ல என்பதே எல்லோருடைய கருத்தும்.

நாங்களுமே (சி.வி.சி.) இந்த விவகாரத்தில் நடைமுறைகள் மீறப்பட்டுள்ளனவா, எந்தெந்த முடிவுகள் வரம்புக்கு மீறி எடுக்கப்பட்டுள்ளன என்றெல்லாம்தான் பார்த்தோமே தவிர இழப்பு எவ்வளவு இருக்கும் என்று கணக்கிடும் வசதியோ அவசியமோ எங்களுக்கு ஏற்படவில்லை’ என்றார் முன்னாள் சி.வி.சி.யான பிரத்யூஷ் சின்ஹா.

சிவராஜ் பாட்டீல்:
ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய அரசு நியமித்த நீதிபதி சிவராஜ் வி. பாட்டீல் தலைமையிலான கமிட்டியும் 2003-08 காலத்தில் பதவியில் இருந்த அரசுகள் தவறான நடைமுறையைப் பின்பற்றின என்று சுட்டிக்காட்டியிருக்கிறது என்பது நினைவுகூரத்தக்கது.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s