சுதந்திர, குடியரசு தினங்கள் படும் பாடு!

குடியரசு தினவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் சார்பில் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. ஆனால் குலசேகரம் அருகே அரசு பள்ளியில் தேசிய கொடி ஏற்றப்பட்ட வேகத்தில் இறக்கப்பட்ட சம்பவம் நடந்தது.

குலசேகரம் அருகே மங்கலம் அரசு துவக்கப்பள்ளியில் நேற்று காலை 9.35 மணிக்கு தலைமை ஆசிரியை ரீத்தாமேரி ஒரு ஆசிரியையுடன் வந்தார். வந்தவுடன் அவர் கொண்டுவந்த தேசிய கொடியை பள்ளியின் முன் நின்ற சிறிய கம்பத்தில் ஏற்றினார். அப்போது மூன்று மாணவர்கள் மட்டும் நின்றுள்ளனர். 9.40க்கு கொடியை இறக்கிவிட்டு தலைமையாசிரியையும், உடன் வந்த ஆசிரியையும் கிளம்பியுள்ளனர்.

ஆனால் அருகில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போட்டிகளுடன் விழா கொண்டாடப்பட்டது. மங்கலம் அரசு துவக்க பள்ளியில் ஏற்றிய வேகத்தில் தேசிய கொடி இறக்கப்பட்ட தகவல் அப்பகுதி மக்கள் மூலம் வெளியில் கசிய துவங்கியது. பத்திரிகையாளர்களுக்கு பகல் 12 மணியளவில் தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போது, சற்று நேரத்திற்கு முன் யாரோ மூன்று பேர் திடீரென காரில் வந்து கம்பத்தில் இருந்த கயிற்றில் தேசிய கொடியை கட்டிவிட்டு சென்றதாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் கூறினர். அவரசமாக செயல்பட்டதால் உயரம் குறைந்த கொடிகம்பத்திலும் முழுமையாக ஏற்றப்படவில்லை.

இது குறித்து அம்மாணவர்கள் மேலும் கூறும்போது, டீச்சர் காலையில் வந்தார். பள்ளியை கூட திறக்காமல் கொடியை ஏற்றினார். உடனடியாக இறக்கிவிட்டு, எங்களுக்கு மிட்டாய் கூட கொடுக்காமல் சென்றார். கொஞ்சம் நேரத்திற்கு முன் மூன்று பேர் காரில் வந்து, மீண்டும் கொடியை கட்டினர். எங்களுக்கு மிட்டாய் கிடைக்கும் என்று நாங்கள் ஓடிச் சென்றோம். எங்களை திட்டிவிட்டு அவர்கள் காரில் ஏறி சென்றனர். இவ்வாறு அந்த மாணவர்கள் தெரிவித்தனர்.

இதேப்போன்று குலசேகரம் கான்வென்ட் ஜங்ஷனில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பெண்கள் பள்ளியில் நேற்று(26ம் தேதி) கொண்டாட வேண்டிய குடியரசு தின போட்டிகள் நேற்று முன்தினம்(25ம் தேதி) நடத்தி மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. நேற்று தலைமை ஆசிரியை மட்டும் வந்து கொடியேற்றியுள்ளார்.

இதுகுறித்து தக்கலை டி.இ.ஓ., வை ஆபிஸ் போனில் தொடர்பு கொண்ட போது, அலுவலகத்தில் அவர் இல்லாததால் அங்கிருந்த ஒருவர் செல்போன் நம்பர் தந்தார். அந்த எண்ணில் தொடர்பு கொண்டு கேட்ட போது, இது குறித்து ஏ.இ.ஓ., விடம் தான் கேட்க வேண்டும் என்று கூறிய டி.இ.ஓ., இன்று விடுமுறை என்பதால் கொடி ஏற்றி விட்டு டீச்சர்கள் செல்வது வழக்கமான ஒன்றுதான் என்றார்.திருவட்டாரில் உள்ள ஏ.இ.ஓ., அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது போன் ரிங் போய் ஓய்ந்தது தான் மிச்சம். யாரும் எடுக்கவில்லை. பக்கத்தில் ஒரு ரிட்டெயர்டு ஆசிரியரிடம் கேட்ட போது ஏ.இ.ஓ., செல் நம்பர் தெரியாது என கூறினார்.

இவ்வாறு சில பள்ளிகளில் குடியரசு தினம், சுதந்திர தினத்திற்கு ஒரு ஆசிரியர் வருவார். கொடியை ஏற்றுவார். பின் இறக்குவார். மாணவர்களுக்கு கையில் கொண்டு வந்த மிட்டாயை கொடுப்பார். சென்று விடுவார். இன்னும் சில பள்ளிகளில் ஒரு நாளைக்கு முன்னரே கொண்டாடும் பழக்கம் இருந்து வருகிறது. மறுநாள் யாரும் பள்ளிக்கு வருவதில்லை.

இதை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதும் இல்லை. இது தான் நமது ஆசிரியர்கள் நமது மாணவர்களுக்கு கற்றுத்தரும் சுதந்திர தின, குடியரசு தின பெருமைகள். வரும் காலங்களில் இவ்வாறு தேசிய கொடி ஏற்றிய உடன் இறக்குவது போன்ற சம்பவங்கள் நடக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டியது அவசியம்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s