site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

உதவி செய்தும் அநீதி: பிரணாப் எரிச்சல்

Posted by sambala87(சூரியன்) on January 24, 2011

“”தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் நிகழாத வண்ணம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின் தெரிவித்தார். இலங்கைக்கு இந்திய அரசு உதவிகள் செய்தும், இதுபோன்ற அக்கிரமங்கள் நடப்பது அநீதியானது என்றும் அவர் எரிச்சலுடன் கூறினார்.

தமிழக மீனவர் பாண்டியன், இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், நேற்று முன்தினம் இரவு, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்ற மீனவர், இலங்கை கடற்படையால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். இந்த அக்கிரம சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.மீனவர் பாண்டியன் கொல்லப்பட்டபோது, முதல்வர் கருணாநிதி, பிரதமருக்கு அவரச தந்தி அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தார்.

அந்த சம்பவம் நடந்த சில நாட்கள் இடைவெளியில், மற்றொரு மீனவர் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். 25 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு உடன் இருந்தனர்.

முதல்வருடனான சந்திப்புக்குப் பின் பிரணாப் முகர்ஜி கூறியதாவது:முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இந்த சந்திப்பின்போது, “தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து முதல்வர் என்னிடம் கவலை தெரிவித்தார். கடந்த 10 நாட்களில் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டதாகவும், அதனால் மிகுந்த கவலை கொண்டுள்ளதாகவும், அதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ எனவும், கேட்டுக் கொண்டார்.

நாம், இலங்கை அரசோடு நல்ல நட்புறவு கொண்டுள்ளோம். அவர்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். இந்த வேளையில், இலங்கை கடற்படையினர் இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது. மீனவர்கள் தவறு செய்திருந்தால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, இம்மாதிரியான படுகொலை சம்பவங்களில் ஈடுபடக்கூடாது.எனவே, மத்திய வெளியுறவுத்துறையின் மூலம், இலங்கை அரசுடன் பேசி, இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வண்ணம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தப்படும் என்று முதல்வரிடம் உறுதி அளித்தேன்.இவ்வாறு பிரணாப் தெரிவித்தார்.

மீனவர் படுகொலை சம்பவத்தை கேட்டதும் வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவும், “இது மிகவும் சீரியசான விஷயம், அங்குள்ள தூதரகத்தை விசாரிக்க கூறியிருக்கிறோம்’ என்றார். இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீசுடன் இது குறித்து பேசப்போவதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில், கொழும்பில் உள்ள இந்தியத்தூதர், இலங்கை வெளியுறவுச் செயலர் ரொமேஷ் ஜெயசிங்கேயுடன் பேசியதாகக் கூறப்பட்டது. டில்லியில் உள்ள இலங்கை ஹை கமிஷனரிடமும் மீனவர் படுகொலை பற்றி அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

&கூட்டணி குறித்து பேச்சா?தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி.மு.க., – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் சூடுபிடித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், நேற்று முன்தினம் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினார். அதன் தொடர்ச்சியாக, நேற்று பிரணாப் முகர்ஜி, தங்கபாலு ஆகியோர் முதல்வரை சந்தித்து பேசியுள்ளனர்.இந்தச் சந்திப்பின் போது, மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பேச்சுக்கள் அமைந்தாலும், தொகுதி பங்கீடு குறித்து, இரு தரப்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தொகுதி பங்கீட்டில் காங்கிரசின் எதிர்பார்ப்பு குறித்து, சிதம்பரமும், பிரணாப் முகர்ஜியும் முதல்வரிடம் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய நிதியமைச்சர் பிரணாபிடம், ராஜ்பவனில் 30 நிமிடங்கள் பேசிய போது, தமிழகத் தேர்தல் குறித்து பேசியதாக கூறப்பட்டது. எனவே, தி.மு.க., – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுக்கு, முதல் கட்டம் நிறைவானது என, தெரிகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியாவின் சார்பில் பேச்சுக்கள் நடத்தி முடிவு செய்வதில் பிரணாப் முக்கியமாகச் செயலாற்றுவதால், இச் சந்திப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.வரும் 31ம் தேதி டில்லி செல்லும் முதல்வர், அங்கு சோனியாவைச் சந்தித்து பேசுகிறார். அந்த சந்திப்பின்போது, தொகுதிப் பங்கீட்டிற்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும்; அதற்கு முன்னோட்டமாக இந்த சந்திப்புகள் நடந்ததாக தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: