“2ஜி’ ராஜாவை குற்றவாளியாக சேர்க்க மனு: சிக்கலை ஏற்படுத்தினார் சாமி

“2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு எதிராக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி தாக்கல் செய்த புகார் மனு ஏற்கத்தக்கதே’ என, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் தெரிவித்துள்ளது. ரூ.1.76 லட்சம் கோடி மோசடி வழக்கில் ராஜாவை ஒரு குற்றவாளியாக சேர்க்கலாம் என்றும், அவருக்கு எதிராக டில்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் அளிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடியில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த விவகாரம் தொடர்பாக நான் கொடுக்கும் புகாரை வழக்காக ஏற்று, ராஜாவுக்கு சம்மன் அனுப்பி மோசடி தொடர்பாக விசாரிக்க வேண்டும்.மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்த வழக்கில் என்னை அரசு வக்கீலாகவும் கோர்ட் நியமிக்க வேண்டும். அத்துடன் இவ்வழக்கு விசாரணைக்கும், ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பான மேல் விசாரணைக்கும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப் பிரிவு போன்ற விசாரணை அமைப்புகள், எனது உதவியை பயன்படுத்திக் கொள்ளவும் உத்தரவிட வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தாலும், அதில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததன் மூலம் ராஜா மிகப் பெரிய மோசடி செய்துள்ளார்.பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 லைசென்சுகளில் 85 லைசென்சுகள் சட்ட விரோதமானவை.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த மோசடியால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த சதிகாரர்கள் மற்றும் இதர குற்றவாளிகளையும் கண்டறிய வேண்டும்.இவ்வாறு சாமி தன் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நேற்று சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி பிரதீப் சத்தா முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி கூறியதாவது:

சாமியின் புகார் மனுவையும், அதற்கு ஆதாரமாக அவர் தாக்கல் செய்துள்ள ஆவணங்களையும் நான் பார்வையிட்டேன். அதிலிருந்தே, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு எதிரான சுப்ரமணியசாமியின் புகார் ஏற்கத்தக்கதே என, முடிவு செய்துள்ளேன். இதன் மீதான விசாரணை தொடரும். மேலோட்டமாக பார்த்த மாத்திரத்திலேயே சாமியின் புகார் தொடர்பாக போதுமான ஆதாரங்கள் இருப்பது தெரியவந்துள்ளதால், அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க நாம் தயங்கக் கூடாது.இந்த வழக்கில் புகார் தாரராகவும், வக்கீலாகவும் ஒரே நேரத்தில் இரட்டை வேடம் போட சாமி நினைக்கிறார். அதை அனுமதிக்க முடியாது.

முதல்கட்டமாக சாமி தன் சாட்சியங்களை அளிக்க வேண்டும். அதன்பின் வழக்கு தொடர்பான இதர சாட்சிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும். அரசு வக்கீலாக செயல்படுவது குறித்து பின்னர் முடிவெடுக்கலாம்.ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கில் ராஜாவை ஒரு முக்கிய குற்றவாளியாக சாமி சேர்க்கலாம். அவருக்கு எதிரான கிரிமினல் வழக்கையும் டில்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்யலாம்.இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டார்.

வழக்கு விசாரணை நடந்த போது கோர்ட்டில் ஆஜராகியிருந்த சுப்ரமணியசாமி கூறியதாவது:

நான் இரட்டை வேடம் போட விரும்பவில்லை. புகார்தாரர் என்ற முறையில் முதலில் நான் சாட்சியங்களைப் பதிவு செய்கிறேன். பின்னர் மோசடியில் தொடர்புடையவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையில் கோர்ட்டுக்கு உதவுவேன். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், ஆடிட்டர் ஜெனரல் அலுவலக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த தேவையான முறையான மனுவையும் தாக்கல் செய்வேன்.இவ்வாறு சாமி கூறினார்.

அத்துடன் தனது புகார் மனுவுக்கு ஆதாரமாக பல ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதனடிப்படையில், முன்னாள் அமைச்சர் ராஜாவுக்கு சம்மனோ அல்லது அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்டோ பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரினார்.பின்னர் ஒரு புகார்தாரராக தனது சாட்சியத்தை பதிவு செய்தார். அப்போது, “ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பாக ராஜாவுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்’ என்றார்.

கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி 122 தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கியது தொடர்பான நிகழ்வுகள் மற்றும் அதில் நடந்துள்ள கிரிமினல் குற்றங்கள் போன்றவை குறித்தும் விவரித்தார். கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள 375 பக்க புகார் மனுவில், ராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர பலமான ஆதாரங்கள் உள்ளன என்றும் தெரிவித்தார். சாமியின் சாட்சியத்தை தொடர்ந்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s