கோவை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் பிறந்த குழந்தைகளை காண்பிக்க, ஊழியர்கள் லஞ்சம் கேட்டு நிர்பந்திப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆண் குழந்தையாக இருப்பின் 500 ரூபாயும், பெண் குழந்தையாக இருப்பின் 250 ரூபாயும் பறிப்பதாக கூறி மருத்துவ அதிகாரியை முற்றுகையிட்ட உறவினர்கள், சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
கோவை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் 150 படுக்கைகள் உள்ளன. ஏழை, எளிய மக்களுக்கு இங்கு இலவசமாக பிரசவம் பார்க்கப்படுகிறது. தினமும் 25 -30 தாய்மார்களுக்கு பிரசவம் நடக்கிறது. குழந்தை பிறந்ததும் இவ்வார்டிலுள்ள தாய்மார்களுக்கும், உறவினர்களுக்கும் உடனடியாக காண்பிக்கப்படுவதில்லை என்றும், பிறந்தது ஆண் குழந்தையாக இருப்பின் 500 ரூபாயும், பெண் குழந்தையாக இருப்பின் 250 ரூபாயும் ஊழியர்களால் லஞ்சமாக வசூலிக்கப்படுவதாக பல ஆண்டுகளாகவே புகார் உள்ளது.
இது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் வகையில், அரசு மருத்துவமனை நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பிரசவம் நடந்ததும் என்ன குழந்தை என்பதை வெளிப்படையாக அறிவிக்கும் வகையில், ஒலிபெருக்கி வசதிகளும் பிரசவ வார்டில் ஏற்படுத்தப்பட்டன.
மேலும், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். உயரதிகாரிகளால் கண்காணிப்பு அதிகரிக்கப்படும் போது மட்டுமே, லஞ்ச முறைகேடுகள் குறைகின்றன. நாளடைவில் கண்காணிப்பு தளர்ந்ததும் மீண்டும் லஞ்சம் தலைதூக்குகிறது. பொதுமக்களின் புகாருக்கு இதுவரை நிரந் தர தீர்வு காண முடியாமல், அரசு மருத்துவமனை நிர்வாகம் திணறி வருகிறது.
இந்நிலையில், பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க தொண்டாமுத்தூரைச் சேர்ந்த செந்தில் என்பவர் சென்றார். அவரிடம், ஊழியர்கள் 500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த உறவினர்கள் திரண்டு, அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் டாக் டர் சிவப்பிரகாசத்தை முற் றுகையிட்டு பிரசவ வார்டு ஊழியர்கள் மீது சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
அவர்களிடம் பேசிய டாக்டர் சிவப்பிரகாசம், “”பிர சவமான குழந்தையை பார்க்க அரசு மருத்துவமனையில் யாருக்கும் லஞ்சம் தரவேண்டியதில்லை. “”யாராவது பணம் கேட்டால் எழுத்து மூலமான புகார் அளியுங்கள். சட் டப்படி நடவடிக்கை மேற் கொள்கிறோம்,” என்றார். விசாரணைக்குபின் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் உறுதியளித்ததை தொடர்ந்து சமாதானமடைந்த உறவினர்கள் கலைந்து சென்றனர்.
பிரசவ வார்டில் சிகிச்சை பெறும் பெண்கள் கூறியதாவது:தனியார் மருத்துவமனை யில் கட்டணம் செலுத்தி பிரசவம் பார்க்க வசதியில்லாததால்தான், அரசு மருத்துவமனையை நாடி வருகிறோம். இங்குள்ள ஊழியர்களோ தொட்டதற்கெல்லாம் பணம் கேட்கின்றனர். தராவிடில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராமல் இழுத்தடிக்கின்றனர்.
பிரசவ வார்டில் போதுமான வசதிகள் இல்லை. தாய்மார்களுக்கு கட்டில் படுக்கைகள், குழந்தைகளுக்கு தொட்டில்கள் இல்லை.பிரசவத்துக்கு பின் பலர் தரையில் படுத்து சிகிச்சை பெற வேண்டியுள்ளது. தாய்மார்களாவது அவஸ்தையை பொருத்துக்கொள் கிறார்கள். ஆனால், பச்சி ளங்குழந்தைகளையும் தரை யில் படுக்க வைக்க வேண் டியுள்ளது. கண்ட, கண்ட இடங்களில் எல்லாம் எச்சில் துப்பி வைத்துள்ளனர். பலரும் செருப்பு கால்களுடன் பிரசவ வார்டில் உலாவுகின்றனர். கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது.
சுகாதாரமில்லாமல் செயல்படும் பிரசவ வார்டில் சொல்ல முடியாத துன்பங்களையும் அனுபவித்து வருகிறோம். பிறந்த குழந்தைக்கு தொற்று நோய் பரவி விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, பெண்கள் தெரிவித்தனர்.
(dm)