வருகிறது ஊழல்களைத் தடுக்க சட்டம்!

அடுத்தடுத்து நடைபெறும் ஊழல்களைத் தடுக்க அவசரச் சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது; அரசு ஊழியர்கள் மட்டும் அல்லாது அரசியல் தலைவர்களும் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படும்வகையில் இந்த அவசரச் சட்டம் இருக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மன்மோகன், சோனியா ஆலோசனை: காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் தில்லியில்  நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு என்று அடுக்கடுக்காக ஆட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்துவதுடன் பொதுப்பணத்தையும் விரயம் செய்யும் இந்த ஊழல்களைத் தடுப்பதற்கும், தவறு செய்தவர்களை விரைவாக விசாரித்து தண்டிப்பதற்கும் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

லோக்பால் மசோதா: பிரதமர் உள்பட உயர் பதவியில் உள்ள அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரித்து தீர்ப்பு வழங்க லோக்பால் என்ற அமைப்பை ஏற்படுத்துவதற்கான மசோதா தயாராக இருக்கிறது. அதன் விசாரணை வரம்பில் பிரதமரையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அந்த மசோதாவிலேயே மேலும் சில பிரிவுகளைச் சேர்த்து ஊழல் வழக்குகளை தனி நீதிமன்றங்கள் மூலம் விரைந்து விசாரிக்க வழி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த அம்சங்களை உள்ளடக்கி அவசரச் சட்டம் இயற்றுவது என்றும் அதை உடனே அமலுக்குக் கொண்டுவருவது என்றும் அப்போது தீர்மானிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சி.வி.சி. போல அல்ல: இதற்கான நிர்வாக அமைப்பு மத்திய ஊழல் தடுப்பு, கண்காணிப்பு ஆணையத்தை (சி.வி.சி.) போல இருக்காது என்று தெரிகிறது.

மாநாட்டில் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி ஊழலை சகித்துக் கொள்ளாது, ஊழல்வாதிகளை விசாரிக்கவும் தண்டிக்கவும் அரசுக்கு யோசனைகள் தெரிவிக்கப்படும் என்று தில்லிக்கு அருகில் 2 வாரங்களுக்கு முன்னால் நடைபெற்ற மாநாட்டில் கட்சித் தலைவி சோனியா காந்தி அறிவித்திருந்தார். ஊழல் வழக்குகளை விசாரிக்க காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்ற கருத்து அப்போது வலியுறுத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், அமைச்சர்கள், மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் நில ஒதுக்கீடு தொடர்பாக தங்களுடைய விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்தும் உரிமையையே விட்டுத்தர வேண்டும் என்ற யோசனையைக்கூட சோனியா அப்போது தெரிவித்தார். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் உறவினர்கள், நண்பர்கள், கட்சிக்காரர்கள், பணம் கொடுப்பவர்களுக்குச் சலுகை தரப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

கொள்முதலில் வெளிப்படைத்தன்மை: அரசுக்காக செய்யப்படும் எந்தக் கொள்முதலும் வெளிப்படையாக நடக்க வேண்டும், அந்த விவரங்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அந்த மாநாட்டில் அறிவித்திருந்தார்.

ஊழலை எதிர்த்து பேசிக்கொண்டிருக்க மாட்டோம், செயலில் காட்டுவோம் என்று மாநாட்டில் அறிவித்திருந்தார் சோனியா. அந்தச் செயல்தான் இந்த அவசரச் சட்டம் என்று கருத இடம் உண்டு.

ராகுல் கருத்து: ஊழல் செய்கிறவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அந்த மாநாட்டில் ராகுல் காந்தியும் வலியுறுத்தியிருந்தார்.

பிரதமரின் புத்தாண்டுச் செய்தி: இந்த புத்தாண்டில் புதியதோர் தொடக்கத்தை மேற்கொள்வோம். விலைவாசி உயர்வால் எழுந்துள்ள சவால்களை உறுதியுடன் எதிர்கொள்வோம், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வோம், சாமானிய மக்களுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகளைச் செய்து தருவோம், ஊழலை வேரோடு களைவோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியிருந்தார். எனவே இனி ஒவ்வொன்றாக அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s