2010 ஊழல் ஆண்டு: 2011 தண்டனை ஆண்டு!

முடிந்துபோன 2010-ம் ஆண்டுக்கு இந்திய ஊடகங்கள் வைத்த பொதுப்பெயர் “ஊழல்’ ஆண்டு.

இந்தியாவில் எந்த ஆண்டில்தான் ஊழல் இல்லாமல் இருந்தது? விடுதலைபெற்ற பின்னர் பெரும்பாலான ஆண்டுகளை ஊழல் ஆண்டு என்று அறிவித்துவிடலாம் என்றாலும், 2010 போன்று உலக வரலாற்றில் மிகப்பெரிய ஊழலாக, ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு இந்திய அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல் நடைபெற்றுள்ளதால், இதை வேறுவகையில் பெயரிட்டு அழைக்க முடியாது என்பதால் ஊழல் ஆண்டு என்பது பொருத்தமானதே!

ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டுமல்ல; இன்னும் பல ஊழல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அம்பலப்பட்ட ஆண்டு 2010 என்றால் மிகையல்ல. ஐ.பி.எல். கொச்சி அணியில் முன்னாள் அமைச்சர் சசிதரூர் மீதான குற்றச்சாட்டு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பல கோடி ரூபாய் முறைகேடு, மகாராஷ்டிரத்தில் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு, கர்நாடகத்தில் முதலமைச்சரின் தனியாணை மூலம் குறைந்த விலைக்கு அரசு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல நூறு மடங்கு விலையில் வேறுநபர்களுக்கு விற்கப்பட்ட ஊழல் எல்லாமும் ஒன்றன்பின் ஒன்றாக அம்பலப்பட்டுக்கொண்டே இருந்தன.

2010-ம் ஆண்டில் யாருக்காவது நாம் நன்றி சொல்ல வேண்டுமானால், அது நீதித் துறைக்கும், தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறைக்கும் மட்டுமே! லஞ்சஒழிப்புத் துறைக்குத் தலைவராக, குற்றச்சாட்டில் உள்ள தாமஸ் நீடிக்கலாமா என்று நீதிமன்றம் கேட்டாலும், பதவிவிலக மாட்டேன் என்று சொல்லும் மோசமான நிலைமைக்கு இடையிலும்கூட, தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை அதிகாரிகள் எதையும் பொருள்படுத்தாமல் தங்கள் கருத்தைத் தெளிவாகப் பதிவுசெய்து, தங்கள் கடமையைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

இந்தத் தணிக்கைத் துறை அதிகாரிகள் மட்டும், இவ்வளவு துணிச்சலாக, நேர்மையாக, இந்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பையும், முன்னுரிமை அளிக்கப்பட்ட விதத்தில் பாரபட்சம் இருப்பதையும் வெளிப்படையாகச் சொல்லியிருக்காவிட்டால், இவ்வளவு பெரிய முறைகேடு அதிகாரப்பூர்வமாக வெளியே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதிர்க்கட்சிகளும் பிரச்னையின் கௌரவத்தைப் புரிந்துகொண்டு வீறுகொண்டு எழுந்திருக்கவோ அதனால் நாடாளுமன்றம் ஸ்தம்பிக்கவோ வாய்ப்பில்லை. நீதிமன்றம் கேள்வி கேட்டிருக்க வாய்ப்பில்லை, முன்னாள் அமைச்சர் ஆ. ராசா பதவி விலகியிருக்க வாய்ப்பில்லை. நீரா ராடியா டேப் விவகாரம் வெளியே வந்திருக்காது. எல்லாமும் புதையுண்டு மறைந்து போயிருக்கும். எல்லா ஆண்டிலும் நடைபெற்றுவரும் பல ஊழல்களைப்போல இதுவும் வாடிக்கையான ஓர் ஊழலாக முடிந்து போயிருக்கும்.

தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை அதிகாரிகளின் அறிக்கை காட்டிய நேர்மையின் வெளிச்சத்தை நீதி கையில் எடுத்துக்கொண்டு, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவுகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது.

இந்த ஊழலில் சம்பந்தபட்டவர்களின் பெயர்கள் சரித்திரத்தில் நிச்சயமாக இருக்கும். ஆனால் இந்த நேர்மையான பதிவுகளை அறிக்கையில் எழுதிவைத்த தலைமைக் கணக்குத் தணிக்கைத்துறை அதிகாரிகளின் பெயர், நாளைய இந்தியர்களுக்கு, ஏன் இன்றைய இந்தியர்களுக்கேயும்கூடத் தெரியுமா என்பது கேள்விக்குறிதான். அந்த நேர்மையான அதிகாரிகளுக்கு நாம் தலைவணங்கி, நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் சுட்டிக்காட்டியதைச் சட்டப்படியாக நிலைநாட்ட முயன்ற நீதிமன்றத்துக்கும் நாம் பாராட்டுத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

அமைச்சர், பதவி விலகி, அதிகாரத்தின் பற்கள் பிடுங்கப்பட்ட பின்னர் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்று நிபந்தனைகளை நிறைவேற்றாத நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய தைரியமான அதிகாரிகளும் இருக்கும் இந்த நாட்டில்தான் இத்தகைய அரசு ஊழியர்களும் இருக்கிறார்கள் என்பதைக் காணும்போது “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’ என்பதன் உட்பொருள் தெளிவாகிறது.

போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் அதன் தலைவர் ஆண்டர்சன் தண்டிக்கப்படாமல், அதிகாரிகள் குறைந்தபட்சமாகத் தண்டனை பெறும் விதத்தில் அரசு வழக்குத் தொடுத்திருந்த மத்திய அரசை கடும் விமர்சனத்துக்கு ஆளாக்கிய பின்னர், இப்போது சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவும் நீதித்துறையால் ஏற்பட்ட நன்மை!

நீதியும் நேர்மையும் செத்துவிட்டதோ என்று கலங்கிக் கிடந்த இந்தியர்கள் நெஞ்சில், “உப்புத் தின்றவன் தண்ணி குடிப்பான், தப்பு செய்தவன் தண்டனை கொள்வான்’ என்னும் நம்பிக்கையை விதைத்துள்ள ஆண்டும் 2010-தான்.

“எல்லாமே மோசம். இதிலிருந்து விமோசனமே கிடையாது. திருத்தவே முடியாது’ என்று எதிர்மறைச் சிந்தனையுடன் இருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இது நமது நாடு. அரசும், ஆட்சியும், அதிகாரமும் நமக்காக ஏற்படுத்தப்பட்டிருப்பவை. அதில் தவறுகள் ஏற்படுவது இயற்கை. அதைத் திருத்தி, தவறுகளைத் தடுத்து, தேசத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உண்டு. எனென்றால். நமது நல்வாழ்வும் அதனுடன் இரண்டறப் பிணைந்து கிடக்கிறது. தன்னம்பிக்கையுடன் எதிர்மறைச் சிந்தனையைத் தூக்கி எறிந்துவிட்டு தவறுகளுக்கு எதிராகக் குரலெழுப்பத் தயாராகுங்கள்.

நம்பிக்கை ஸ்திரப்படும் ஆண்டாக, 2011-ல் இந்த ஊழல்களில் தொடர்புடையவர்கள் தண்டனைபெற வேண்டும். அமைச்சர் என்றாலும், பெருந்தொழிலதிபர் என்றாலும் தண்டனை தரப்பட வேண்டும். இதில் பாரபட்சம் இருக்காது என்பதைப் புரியவைக்கும் ஆண்டாக 2011 அமைய வேண்டும். இந்தியாவில் மக்களாட்சித் தத்துவம் வெற்றிபெற்றதற்கான அடையாளம் அதுவாகத்தான் இருக்கும்.

2010 ஊழல் ஆண்டு என்றால்…

2011 தண்டனை ஆண்டு என்று பெயர் பெறட்டும்! நம்பிக்கையூட்டும் ஆண்டாக மலரட்டும்.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s