site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

“கிரையோஜெனிக்’ தட்டுப்பாடு: ராக்கெட்கள் செலுத்துவதில் சிக்கல்!

Posted by sambala87(சூரியன்) on December 28, 2010

நடுவானில் வெடித்துச் சிதறிய ஜி.எஸ்.எல்.வி., – எப்06 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ஜிசாட் – 5பி செயற்கைக்கோள் காப்பீடு செய்யப்படவில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின்களில் ஒன்று மட்டுமே மீதமுள்ள நிலையில், 2011ம் ஆண்டில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் இஸ்ரோவின் திட்டங்களிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையம்(இஸ்ரோ) தகவல் தொடர்பு செயற்கைக்கோளான, “ஜிசாட் – 5பி’யை, ஜி.எஸ்.எல்.வி., – எப்06 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த முயற்சித்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்திலிருந்து கடந்த சனிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், சில வினாடிகளில் நடுவானில் வெடித்துச் சிதறியது. அந்த ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட செயற்கைக்கோளும் தீக்கிரையானது. இந்த செயற்கைக்கோளை ஏவ, இஸ்ரோ 350 கோடி ரூபாய் செலவிட்டது. ஆனால், ஜிசாட் – 5பி செயற்கைக்கோள் காப்பீடு செய்யப்படவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நியூ இந்தியா இன்சூரன்ஸ் தலைவர் ராமதாஸ் கூறியதாவது: இந்த ஆண்டு செலுத்தப்பட்ட இரண்டு ஜி.எஸ்.எல்.வி., திட்டங்களுக்கும் காப்பீடு செய்யவில்லை. விண்வெளித் திட்டங்களின் வெற்றி சதவீதம் அதிகமாக இருந்ததால், காப்பீடு செய்வதை அரசு தவிர்த்து வந்தது. தற்போது விண்வெளித் திட்டங்களை காப்பீடு செய்யுமாறு, அரசை மீண்டும் அணுகுவோம். இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் எவையும் காப்பீடு செய்யப்படவில்லை. பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் காப்பீடு செய்யப்பட்டன. செயற்கைக்கோளின் மதிப்பில் 18 முதல் 20 சதவீதமே காப்பீட்டிற்கான செலவு என்பதால், இது அரசாங்கத்திற்கு பெரிய செலவாக இருக்காது. மேலும் திட்டம் தோல்வியடையும்போது, காப்பீட்டில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு புதிய செயற்கைக்கோளை உருவாக்க முடியும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

ராக்கெட் தொழில்நுட்பத்தில், கிரையோஜெனிக் இன்ஜின் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தொழில்நுட்பம் உலகளவில் விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாகவே இருந்துள்ளது. ராக்கெட் விண்ணில் பறக்கும் போது, 3,600 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் ஏற்படும். அப்போது, திரவ ஹைட்ரஜன் டேங்கை மைனஸ் 253 டிகிரி செல்சியசில் வைத்திருப்பதே கிரையோஜெனிக் தொழில்நுட்பமாகும். இஸ்ரோ, ரஷ்யாவிடமிருந்து ஏழு கிரையோஜெனிக் இன்ஜின்களை விலைக்கு வாங்கியிருந்தது. அவற்றில் ஆறு இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டு விட்ட நிலையில், தற்போது ஒரு கிரையோஜெனிக் இன்ஜின் மட்டுமே மீதமுள்ளது. ஆனால், இரண்டு டன்னுக்கு மேல் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவும், சந்திரயான் – 2 மற்றும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கும் கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் அவசியமாகிறது. கடந்த ஏப்ரல் 15ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., – டி3 ராக்கெட்டில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் பயன்படுத்தப்பட்டது. ஆனால், எரிபொருள் குழாயில் ஏற்பட்ட கோளாறால் இந்த ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, உள்நாட்டு கிரையோஜெனிக் இன்ஜின் உற்பத்தி மீண்டும் சோதனைக் கூடத்திற்கு சென்றுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் கூறும்போது, “”நம்மிடம் ஒரே ஒரு கிரையோஜெனிக் இன்ஜின் மட்டுமே மீதமுள்ள நிலையில், 2011ம் ஆண்டு ஐந்து டன் எடை அதிகம் கொண்ட செயற்கைக்கோள்களை ஏவ வேண்டியுள்ளது. இதில் இரண்டு செயற்கைக்கோள்கள் ஏரியான் ஸ்பேஸ் ராக்கெட் மூலம் ஏவப்படும். உள்நாட்டு கிரையோஜெனிக் இன்ஜின் தயாராகாவிட்டால், வெளிநாட்டிலிருந்து அந்த இன்ஜின்களை வாங்க வேண்டும்,” என்றார். மூன்று டன்னுக்கும் மேல் எடை கொண்ட ஜிசாட் – 8 மற்றும் ஜிசாட் – 10 செயற்கைக்கோள்கள், ஐரோப்பிய ஏரியான் – 5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளன. இந்த அளவிற்கு எடை அதிகம் கொண்ட செயற்கைக்கோள்களை, ஜி.எஸ்.எல்.வி., – மாக் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த 1,000 கோடி ரூபாய் செலவாகும். அதே நேரத்தில், ஐரோப்பிய ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த செலவு இரு மடங்காகிறது.

இஸ்ரோ, 1,375 கிலோ எடை கொண்ட ஜிசாட் – 12 செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தவுள்ளது. இதுதவிர, ஜிசாட் – 6, ஜிசாட் – 7, ஜிசாட் – 9 ஆகிய மூன்று செயற்கைக்கோள்கள், 2011ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படவுள்ளன. இதில் ஒரு செயற்கைக்கோளுக்கு மீதமுள்ள ஒரு ரஷ்ய கிரையோஜெனிக் இன்ஜினை பயன்படுத்தினாலும், இரு செயற்கைக்கோள்களை ஏவுவதில் சிக்கல் உருவாகியுள்ளது. உள்நாட்டு கிரையோஜெனிக் இன்ஜினை மேம்படுத்த முடியும் என, இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கையில் உள்ளனர்.

இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “”உள்நாட்டு கிரையோஜெனிக் இன்ஜினை மாற்றியமைத்த பிறகு, தரைத்தள சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். ராக்கெட்டில் செலுத்தும் நிலையிலான சோதனைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த சோதனைகள் 2011 – 12ம் ஆண்டில் மேற்கொள்ளப்படும்,” என்றார்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: