உண்மையில் நாட்டை ஆள்வது யார்?

இந்தியர்களுக்கு ஊழல் அந்நியமல்ல. அது இந்திய வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய அன்றாட வாழ்வில் ஊழலை எதிர்கொள்கிறோம். நம் வீட்டுக்கு மிக அருகிலும் அல்லது வீட்டுக்குள்ளேயும்கூட ஊழலில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள். நாம் அவர்களை எதிர்ப்பதில்லை. தேவைப்படும் தருணங்களில் அவர்களுடன் கலப்பதிலும்கூட நமக்குச் சங்கடம் இருப்பதில்லை.

இந்தியா இப்போது ஊழலுக்கு எதிராக கொஞ்சம்போல முணுமுணுக்கிறது. எண்ணிக்கை காரணமாக இருக்கலாம்.

1763790000000. எண்ணிக்கைதான் நம்மை ஆள்கிறது. ஆ. ராசாவைப் பற்றி அதுதான் நம்மைப் பேசவைக்கிறது. நீரா ராடியாவைப் பற்றி அதுதான் பேசவைக்கிறது. ரத்தன் டாடாவைப் பற்றி, அம்பானி சகோதரர்களைப் பற்றி, சுனில் மிட்டலைப் பற்றி, தருண் தாûஸப் பற்றி, கருணாநிதியைப் பற்றி, ராசாத்தி அம்மாளைப் பற்றி, தயாநிதி மாறனைப் பற்றி, பிரபு சாவ்லாவைப் பற்றி, பர்கா தத்தைப் பற்றி…

எண்ணிக்கையானது எண்களுடன் முடிந்துவிடுவதில்லை; எப்போதுமே அது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான துருப்புச் சீட்டு. நாம் இப்போது எண்ணிக்கையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இது நல்லது. ஆனால், ஏன் எண்ணிக்கையைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம்; அதிகாரத்தைப் பற்றி ஏன் பேச மறுக்கிறோம்?

நீரா நிறையப் பேசியிருக்கிறார். அவருடைய உரையாடல்களில் “தேர்ந்தெடுக்கப்பட்ட’ 104 பதிவுகள் மட்டுமே இப்போது ஊடகங்கள் வாயிலாக வெளியாகி இருக்கின்றன. மொத்தம் 5,800 பதிவுகள் மத்திய புலனாய்வுத் துறையின் வசம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர் மேலும் பேசியிருக்கலாம்.

நமக்கு மூன்று பதிவுகள் போதும்: ராசா மீதான கவலையை வெளிப்படுத்தும் டாடா – நீரா உரையாடல் பதிவு, அம்பானி சகோதரர்கள் இடையேயான வழக்கின் தீர்ப்பு தொடர்பாகக் கவலையை வெளிப்படுத்தும் பிரபு சாவ்லா – நீரா உரையாடல் பதிவு, மிட்டல் மீதான கவலையை வெளிப்படுத்தும் தருண் தாஸ் – நீரா உரையாடல் பதிவு. இவை மூன்றும் போதும், இந்த நாட்டைப் புரிந்துகொள்ள; இந்த நாட்டில் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களையும் புரிந்துகொள்ள.

நீண்ட நெடுங்காலமாக நமக்கு ஓர் உண்மை கசிந்துவந்தது. ஆனால், நாம் அந்த ரகசியத்தை நம்ப மறுத்தோம்: “”பெருநிறுவனங்களின் முதலாளிகள்தான் இந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கிறார்கள். நாட்டின் நிதிநிலை அறிக்கையே அவர்களுடைய விருப்பப்படிதான் உருவாக்கப்படுகிறது.”

நீராவின் உரையாடல்களை முழுமையாகக் கேளுங்கள். அவை ஊழலை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. இந்த நாட்டின் உண்மையான அதிகாரம் யாரிடம் குவிந்திருக்கிறது என்பதையும் அம்பலப்படுத்துகிறது.

இந்திய அரசை மக்கள் இயக்கவில்லை; அதிகாரிகள் இயக்கவில்லை; அரசியல்வாதிகள் இயக்கவில்லை; முதலாளிகளே இயக்குகிறார்கள். இந்த நாட்டை யார் ஆள வேண்டும் என்பதையும் யார் ஆளக்கூடாது என்பதையும் அவர்களால் தீர்மானிக்க முடிகிறது. அரசின் கொள்கை முடிவுகளை அவர்களால் தீர்மானிக்க முடிகிறது. நீதிமன்றத் தீர்ப்புகளை அவர்களால் தீர்மானிக்க முடிகிறது. எவரையும் விலைக்கு வாங்க அவர்களால் முடிகிறது.

வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினரிடம் நீரா கூறுகிறார்: “”ஆமாம். இரண்டாம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் ஆ. ராசாவுடன் பேசினேன். என்னுடைய வாடிக்கையாளர்களுக்குச் சாதகமாக அரசின் முடிவை மாற்றினேன். அதற்காக 60 கோடி பெற்றேன். அது என் சேவைக்கான கட்டணம்.”

உச்ச நீதிமன்றத்தில் டாடா கூறுகிறார்: “”இந்த உரையாடல் பதிவுகள் வெளியானது, இந்திய அரசு அளிக்கும் வாழ்வதற்கான உரிமையையும் குடிமகனின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களைக் காக்கும் கடமையையும் மீறும் செயலாகும்.”

அமைச்சர் பதவி பேரம் பேசப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் விலை போகிறார்கள். வாக்குகள் விலைக்கு வாங்கப்படுகின்றன. அப்படியானால், மக்களாட்சித் தத்துவம் என்பதெல்லாம் வெறும் வெற்று வார்த்தைகள் தானா?

இத்தனை கோடி ரூபாய் ஊழலுக்குப் பிறகும், எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் அள்ளிவீசி வாய்ப்பூட்டுப்போடும் சக்தி தொழிலதிபர்களிடம் இருந்தும், வானளாவிய அதிகாரம் படைத்த அரசியல் தலைவர்களும், “சாம, தான பேத, தண்ட’ வழிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தயங்காத அவர்களது தொண்டர்படை இருந்தும், ஊடகங்களால் இவர்களது ஊழல் அம்பலப்படுத்தப்படத்தானே செய்யப்படுகிறது? உச்ச நீதிமன்றத்தில் துணிந்து பிரதமரையே கேள்வி கேட்கும் மனத்துணிவும், எண்ணத் தெளிவுமுள்ள நீதிபதிகள் இருக்கத்தானே செய்கிறார்கள்.

ஊழலை நம்மால் ஒட்டுமொத்தமாக ஒழித்துவிடவோ அகற்றிவிடவோ முடியவில்லைதான். ஆனால், “மெகா’ ஊழல்களில் ஈடுபட்டு அதை மறைக்க யாராலும் முடியவும் இல்லைதானே?

இந்த ஊழல் புதைகுழியிலிருந்தும், பணக்கார முதலைகளின் கோரப்பிடியிலிருந்தும், சுயநல அரசியல்வாதிகளிடமிருந்தும் இந்தத் தேசத்தைக் காப்பாற்றிவிட முடியும் என்கிற நம்பிக்கையை நாம் இன்னும் முழுவதுமாக இழந்துவிடவில்லை!

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s