அரண்டு கிடக்குது அரசு அலுவலகங்கள்!

வீட்டை விட்டு இறங்கி, தெருவில் கால் வைத்தால் குண்டும், குழியுமாக இருக்கும் சாலையில் துவங்கி… நிற்காமல் செல்கிற பஸ்கள் வரை நமக்கு எதிரே ஆயிரம் சமூகப் பிரச்னைகள். கண் முன் நடக்கிற அவலங்களை கண்டும் காணாமலும், புறந்தள்ளிப் போவது இயல்பாகிப் போன காலத்தில், எங்காவது ஓரிரு வர்… தமக்காக அல்லாமல், சமுதாயத்துக்காக குரல் எழுப்புவார்கள். அப்படிப்பட்ட அரிதிலும் அரிய மனிதர்களில் ஒருவர் தவமணி.
முப்பது வயதிலேயே முடங்கிப்போகிற கணினி காலத்தில், 90 வயதாகியும் துளியும் தளர்வின்றி, தனது கிராமப் பிரச்னைகளுக்கு தீர்வு கோரி கிராம நிர்வாக அதிகாரி முதல் பிரதமர் அலுவலகம் வரை, அடைத்திருக்கும் அனைத்துக் கதவுகளையும் இடைவிடாது தட்டிக் கொண்டிருக்கிறார்… தளர்ந்து விடாத நம்பிக்கையுடன்!

மதுரை மாவட்டம்,உசிலம்பட்டி (எழுமலை) அருகேயுள்ள எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் தவமணி (90) சுதந்திரப் போராட்ட தியாகி. தேச விடுதலைக்காக பலமுறை சிறை சென்றவர். 1947 வரை தேச விடுதலைக்காக போராடியவர், அதற்குப் பின் சமுதாய சீர்த்திருத்தப் பணிகளுக்காக களமிறங்கினார். போராட்ட காலங்களில் பக்கபலமாக இருந்த மனைவி குருவம்மாள் 10 ஆண்டுகள் முன் காலமாகி விட்டார். ஒரே மகன் ரங்காண்டான் திருமணமாகி, தனியே வசிக்கிறார்.
தனியாக வசித்தாலும், தளராமல், எம்.கல்லுப்பட்டி பகுதி சார்ந்த பிரச்னைகளுக்காக தனிநபராக போராடி வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக இவர் வலியுறுத்துவது நான்கே நான்கு கோரிக்கைகள் மட்டுமே.

* எம்.கல்லுப்பட்டியில் இருந்து மயிலாடும்பாறைக்கு மல்லப்புரம் வழியாக 22 கி.மீ., தூரத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன் மலைச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை பஸ்கள் இயக்கப்படவில்லை. தனியார் வேன்கள் 22 கி.மீ., தூரத்துக்கு ரூ.30 கட்டணம் வசூலித்து, ஆட் களை ஏற்றிச் செல்கின்றன. அடித்தட்டு மக்கள் வசிக்கும் இந்தப்பகுதியில் 30 ரூபாய் கொடுத்துச் செல்வது கட்டுபடியாகும் விஷயமல்ல. இந்தச்சாலையில் அரசு பஸ்கள் இயக்கினால், ரூ.7 கட்டணத் தில் மக்கள் செல்ல முடியும்.

* எம்.கல்லுப்பட்டி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவேண்டும். புதர்கள் மண்டிய இந்தப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவசரத்துக்கு சிகிச்சை பெற வேண்டுமானாலும் பஸ் பிடித்து எழுமலை ஆரம்ப சுகாதார நிலையம் செல்லவேண்டியிருக்கிறது.

* பல ஆயிரம் மக்கள்தொகை கொண்ட எம்.கல்லுப்பட்டி பகுதியில் விஏஓ அலுவலகம் அமைக்கவேண்டும். இங்குள்ள மக்கள் சாதிச்சான்றிதழ் உள்ளிட்ட ஒவ்வொரு தேவைக்கும் எழுமலைக்கு அலைகிறார்கள்.

* சுமார் ஆயிரம் மாணவர்கள் படிக்கும் எம்.கல்லுப்பட்டி மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் பாதையை, சிமென்ட் சாலையாக மாற்றவேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசாங்கத்தின் பல மட்டங்களுக்கும் நடையாய் நடந்து மனுக் கொடுத்து வருகிறார்.

இந்தப்பகுதி மக்களிடம் கேட்டபோது, “சுதந்திரப் போராட்ட தியாகியான அவர், இதுவரை பென்ஷன் உள்ளிட்ட தனது சொந்தத் தேவைகளுக்காக எந்த அலுவலகமும் ஏறியதில்லை. மக்கள் பிரச்னைகளுக்காக எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல், யாருடைய ஒத்துழைப்பையும் கேட்காமல் தனிநபராக அரசு அலுவலகங்களில் ஏறி, இறங்கிக் கொண்டிருக்கிறார்.

கலெக்டர், வட்டாட்சியர், கோட்டாட்சியர் என அனைத்து அதிகாரிகளையும் நேரில் சந்தித்து பலமுறை மனு கொடுத்திருக்கிறார். மல்லப்புரம் & மயிலாடும்பாறை சாலையில் பஸ் விடக்கோரி பிரதமர், மத்திய வனத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறார். ஊர் பிரச்னைகளில் தலையிடுகிறார் என்பதால் உறவினர்கள், குடும்பத்தினர் கூட இவரிடம் அதிகம் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை,” என்கின்றனர்.

தியாகி தவமணியிடம் பேசியபோது, “எனக்கு 90 வயதாகிறது. இந்த வயதில், எனக்கென்று தனிப்பட்ட தேவைகள் எதுவுமில்லை. கூலிவேலைக்குச் செல்லும் கிராம மக்கள் நலன் கருதி, மல்லப்புரம் & மயிலாடும்பாறை மலைச்சாலையில் பஸ் விடவேண்டும் என்பதுதான் எனது நீண்டநாள் கோரிக்கை. எனது காலத்திற்குள், இந்தக் கோரிக்கை நிறைவேறவேண்டும்,” என்கிறார் சுருக்கமாக!

(dkn)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s