இந்தியாவின் வளர்ச்சியும்; வேலைவாய்ப்பும்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலக அளவில் தேக்க நிலை ஏற்பட்டதற்கு முன்பு வரை, முந்தைய 5 ஆண்டுகள் தொடர்ந்து இந்தியப் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதத்துக்கு மேல் இருந்தது. அந்தச் சிறப்பான வளர்ச்சி காலத்தில்கூட, மேற்கூறிய வளர்ச்சி வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சியாக இருக்கவில்லை.

போதாக்குறைக்கு, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக, இந்தியாவின் ஏற்றுமதி குறைந்தது. இதனால், ஜவுளி, ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள், தங்க ஆபரணங்கள், ஆபரணக் கற்கள், மருந்து தயாரிப்பு, ரசாயன, கைவினைப் பொருள்கள் ஆகிய துறைகளில் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்தனர்.

கடந்த சில மாதங்களாக, இந்தியாவில் ஏற்றுமதி சற்று அதிகரித்து வருகிறது. இதனால், எந்த அளவு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதைப் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் வெளிவந்துள்ள ஆய்வுகளின்படி, பொறியியல், மருந்து தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு ஆகிய துறைகளில் புத்தாண்டில் புதிய அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.

வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், நிதிச்சேவை நிறுவனங்கள் அடுத்த 6 மாதங்களில் சென்னையில் 15 சதவீதம் கூடுதலாக புதிய அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதேபோல் மும்பையில் 13 சதவீதம், பெங்களூரில் 12 சதவீதம், புனேயில் 15 சதவீதம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளன.

சில தினங்களுக்கு முன் வெளியான, வீட்டுக்கடன் வழங்கியதில் நிகழ்ந்த முறைகேடுகள், மேற்கூறிய திட்டங்களில் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டுமே என்ற அச்சமும் மனதில் எழுகிறது.

வங்கித் துறையில் மட்டும், அடுத்த சில ஆண்டுகளில் 4 லட்சம் அலுவலர்கள், உயர் அதிகாரிகள் ஓய்வுபெற உள்ளனர். இது அந்தத் துறைக்கு ஒரு சவாலாக இருக்கும். தற்போது, இந்தியாவில் 40 சதவீதத்துக்கு மேலான மக்களுக்கு வங்கிச்சேவை கிடைக்கவில்லை. இந்தியா முழுவதும், அனைவருக்கும் வங்கிச் சேவை என்ற திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, வரும் 2012 மார்ச் மாதத்துக்குள் 2000-க்கும் அதிகமாக மக்கள் தொகையுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் வங்கிச் சேவையை கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம், 73,000 இடங்களில் வங்கிச் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது.

தென் இந்தியாவில் மட்டும் 38,000 இடங்களில் புதிய அடிப்படை வங்கிச்சேவை தொடங்கும். இதுவும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பது உறுதி. தகவல் தொழில்நுட்பத் துறையில் கடந்த ஓரிரு ஆண்டுகளில் மந்தநிலை நிலவியது. ஆனால், நிலைமை வேகமாக முன்னேறியுள்ளது. அடுத்த 12 மாதங்களில் ஒன்றரை லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று “நாஸ்காம்’ அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு தடைக்கற்களாக இருக்கும் சில அம்சங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளன. முன்னணி மாநிலங்கள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. உதாரணமாக, தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை.

தமிழ்நாட்டில் மின் தேவை குறைந்தது 11,200 மெகாவாட். ஆனால், இருப்பதோ 8,100 மெகாவாட். இதனால் ஏற்படும் மின்தடை போன்ற இடர்பாடுகள் புதிய தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக அமையும் அல்லவா?

மகாராஷ்டிர மாநிலத்தில், நடப்பாண்டில் தொழிற்சாலை உற்பத்தி மூன்று சதவீதம் சரிந்துள்ளது. மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறைகள் பெரும் முதலீட்டாளர்களை அச்சுறுத்துகின்றன.

உணவு தானியக் களஞ்சியமான பஞ்சாப் மாநிலத்தில் படித்த, ஆனால் வேலைக்குத் தகுதிபெறாத இளைஞர்கள் 40 லட்சம் பேர் உள்ளனர்.

புதிய வேலை வாய்ப்புக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டுமானால், இதுபோன்ற முட்டுக்கட்டைகள் அகற்றப்பட வேண்டும்.

படித்த வேலையில்லா இளைஞர்களை வேலைக்குத் தகுந்தவர்களாக மாற்றுவதற்குப் பயிற்சி தேவை. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அரசு சார்ந்த தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் புதிய திட்டம் வகுத்துச் செயல்படத் தொடங்கியுள்ளது என்பது ஒரு நல்ல செய்தி. அடுத்த 10 ஆண்டுகளில் இதன் மூலம் 15 கோடி இளைஞர்களுக்கு நாடு முழுவதும் பயிற்சி வழங்கப்படும் என்று அண்மையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளில், ஏற்றுமதியை முக்கிய பொருளாதார நடவடிக்கையாகக் கொண்டுள்ள வளரும் நாடுகளில், வேலைவாய்ப்பு உருவாக்கம் எப்படி உள்ளது என்று காரண, காரியங்களுடன் அலசப்பட்டுள்ளது.

ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனா போன்ற வெகு சில நாடுகளில் மட்டுமே ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சியின் மூலம் புதிய வேலைகள் அதிகரித்துள்ளன என்று ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் ஏற்றுமதியால் புதிய வேலைகள் கணிசமான அளவு அதிகரிக்காதது ஏன்?

இத்தனைக்கும், சில ஆண்டுகளுக்கு முன் ஏற்றுமதி அதிகரிப்புக்காக ஓர் இயக்கமே மேற்கொள்ளப்பட்டது. “”ஏற்றுமதி செய்; அல்லது செத்துமடி” என்ற முழக்கம் எழுந்தது. ஏற்றுமதிக்காக சலுகைகள், ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றன. “டூட்டி டிரா பேக்’ எனப்படும் சுங்க வரியை திருப்பிக் கொடுப்பது, ஏற்றுமதி வருமானத்துக்கு வரி குறைப்பு, குறைந்த வட்டியில் வங்கிக் கடன், இப்படிப் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு, இன்று வரை தொடர்கின்றன.

இவைதவிர, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டன. இதுகூட சீனாவைப் பார்த்து நாம் தொடங்கிய திட்டம்.

இவை அனைத்தும் வரவேற்கத்தக்கவைதான். அதேநேரம், முழுமையான பொருளாதார கட்டமைப்பை ஆய்வோமானால், ஏற்றுமதிக்கு இடையூறான சில விஷயங்கள் எங்கோ மறைந்துள்ளன என்பது வெளிப்படை. உதாரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டலாம்.

ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் வழங்கும் நாடுகள், தங்களது நாணய மதிப்பு உயர்ந்து விடாமல் பார்த்துக் கொள்கின்றன. இதன் மூலம் அந்த நாடுகளில் ஏற்றுமதிப் பொருள்களின் விலை, இந்தியப் பொருள்களின் விலையுடன் ஒப்பிடும்போது, குறைவாக உள்ளது. இந்த உத்தியைக் கையாண்டு, சீனா போன்ற சில நாடுகளில், ஏற்றுமதியாளர்கள் பெரும் பயன் அடைகிறார்கள்.

இன்னொரு விஷயத்தையும் ஐ.நா. வர்த்தகம் மற்றும் வளர்ச்சி சபையின் அறிக்கை குறிப்பிடுகிறது. அது தொழிலாளர்களின் ஊதியம் பற்றியது. கடந்த 30 ஆண்டுகளில், ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள நாடுகளில் “”தொழிலாளர்களின் ஊதியம் வேண்டும் என்றே குறைந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது” என்றால் நம்புவீர்களா? இதன் நோக்கம், ஏற்றுமதியில் பொருள்களின் விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதே!

இந்தியா இந்தக் கொள்கையை ஏற்கவில்லை. இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

ஆயத்த ஆடைகள், தோல் பொருள் உற்பத்தி போன்ற துறைகளில் ஆள்படை அதிகம் தேவை. ஊதியம் குறைவாக உள்ள நாடுகள், ஏற்றுமதியில் இந்தியாவை விஞ்சுவதில் என்ன வியப்பு?

வழக்கமான ஊதிய உயர்வுகள், தொழிலாளர் நலன் மற்றும் அவர்தம் திறன் மேம்பாட்டுக்கு இன்றியமையாதது. இந்த உயிர்நாடி நோக்கத்தை இந்தியா போன்ற மக்கள் நல அரசுகள் புறக்கணிக்க இயலாது.

எனவே, மக்கள் தொகை 100 கோடிக்கும் அதிகமாக உள்ள இந்தியாவில், ஏற்றுமதிக்கு இணையாக உள்நாட்டு விற்பனையும் முக்கியம் என்பது தெளிவு.

அதுமட்டும் அல்லாமல், வளர்ச்சியால் அதிக உற்பத்தியும், அதிக உற்பத்தியால் மூலதனத்தைப் போடும் முதலீட்டாளர்களும், உழைக்கும் தொழிலாளர்களும் சமமான, நியாயமான வகையில் பயன் அடையவேண்டும் என்பதே பரவலாக ஏற்கப்பட்டுள்ள சித்தாந்தம்.

இந்த முயற்சியில் கிழக்காசிய நாடுகள் வெற்றிபெற்றுள்ளன. இது அவர்களுக்குச் சாத்தியமானதற்குக் காரணம், தொழிற் சாலைகளின் உற்பத்திக்கு அந்த நாடுகள் அதிகபட்ச முக்கியத்துவம் வழங்கின.

அதேநேரம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையும் இதய சுத்தியுடன் செயல்படுத்துகின்றன. இதனால், வளர்ச்சி, புதிய வேலைகள் மற்றும் ஏழை – பணக்காரர் இடையே இடைவெளி குறைப்பு ஆகிய மூன்று இலக்குகளும் கிழக்காசிய நாடுகளில் நிறைவேறி வருகின்றன. இந்தியாவுக்கு இது ஒரு நல்ல முன்னுதாரணம்.

உலகமயமாக்கல், தனியார் மயம், தாராளமயம் ஆகிய கொள்கைகளின் விளைவால் பொதுத்துறை நிறுவனங்களின் வீச்சு குறைவது இயல்பு. அவை உருவாக்கிய வேலைகளும் குறையும். இதை ஈடு செய்யும் வகையில் மேற்கூறிய திட்டமிட்ட செயல்பாடுகள் தேவை. சந்தைப் பொருளாதாரத்தை மட்டும் நம்பியிருந்தால், வேலைவாய்ப்பு உருவாக்கம், வறுமை ஒழிப்பு தானாக நிகழ்ந்துவிடாது என்பதே உண்மை!

 

 

 

(di)

Advertisements

One thought on “இந்தியாவின் வளர்ச்சியும்; வேலைவாய்ப்பும்!”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s