மாணவர்களை மதித்த எம்.ஜி.ஆர்.!

மதுரை வைகையில் வெள்ளம் வந்த நேரம். பாதிக்கப்பட்ட மக்களுக்காக, பல தரப்பினர், வெள்ள நிவாரண நிதியை, மாவட்ட கலெக்டரிடம் வழங்கிக் கொண்டிருந்தனர். வெள்ளச் சேதத்தை பார்வையிட பக்கத்து மாவட்ட நிகழ்ச்சியை முடித்து கொண்டு, காரில் மதுரை வந்து கொண்டிருந்தார் அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.,
நானும், எம்.ஜி.ஆர்., நிகழ்ச்சியில் படம் எடுத்துவிட்டு, அந்த கான்வாயில் வந்து கொண்டிருந்தேன். இரவு 8 மணி அளவில், மதுரை சர்க்யூட் ஹவுசிற்கு வந்து சேர்ந்தார். வந்ததும் கலெக்டரை அழைத்து, வெள்ள நிலவரம் பற்றி கேட்க தன் அறைக்குச் சென்று விட்டார்.
அப்போது, கார் பார்க்கிங் அருகே, பள்ளி மாணவர்கள் சிலர், முதல்வரை சந்திக்க வேண்டும் என்று நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை, முதல்வரின் அறை பக்கம் போக விடாமல், மரத்தடியில் நிற்க வைத்து விட்டனர்.
விஷயம் வேறொன்றுமில்லை… சவுராஷ்ட்ரா பள்ளி மாணவத் தலைவன் ராம்பாபு, பள்ளி இன்ட்ராக்ட் கிளப் செயலர் சண்முகசுந்தரம் மற்றும் சில மாணவர்கள், ஆசிரியர் அனுமதியுடன், தாங்களாகவே திரட்டிய வெள்ள நிவாரண நிதியை, மதுரை வரும் முதல்வரிடம் நேரில் அளிக்க வேண்டும் என, சர்க்யூட் ஹவுஸ் வந்துள்ளனர். அப்பாயின்மென்ட் கிடையாது. விடுவரா போலீசார்… ஓரங்கட்டி விட்டனர். இது தான் நடந்துள்ளது.
பள்ளி மாணவர்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கும் எம்.ஜி.ஆரிடம் இதை யாராவது தெரிவித்தால், நிச்சயம் அழைப்பார் என நினைத்த நான், அங்கிருந்த உயர் அதிகாரியிடம் விவரத்தை சொன்னேன். ஆனால், அவரோ, அங்குமிங்கும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தாரே தவிர, இதற்கு உதவ தயாராயில்லை.
அந்த நேரம், முதல்வரோடு ஆலோசனை முடித்துவிட்டு, கலெக்டர் கே.ஏ.சுந்தரம் வெளியே வந்தார். வராந்தாவில் கேமராவுடன் நின்று கொண்டிருந்த நான், இது தான் சமயம் என, சடாரென எம்.ஜி.ஆர் அறைக்குள் நுழைந்தேன். மாலையில் தான், அவர் நிகழ்ச்சிகளில் படம் எடுத்து திரும்பியிருந்தேன். உள்ளே வந்த என்னைப் பார்த்தும் எம்.ஜி.ஆர்., “நிகழ்ச்சி முடிந்து இவ்வளவு நேரம் ஆகியும், இன்னும் போகவில்லையா?’ எனக் கேட்டார்.
அப்போது அவரிடம், “ஒரு சிறு தகவலைச் சொல்ல வந்தேன்; வெளியே உங்களை சந்திக்க மாணவர்கள் சிலர் வெகுநேரமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்; போலீசார் அனுமதிக்கவில்லை. ஆகவே, உங்களிடம் இதை தெரிவிக்க வந்தேன்…’ என சொன்னவுடன், “ஏதேனும் மாணவர்களின் பிரச்னையா?’ எனக் கேட்டார்.
“பிரச்னை ஏதும் இல்லை. மாணவர்கள் தாங்களாகவே திரட்டிய வெள்ள நிவாரண நிதியை, உங்களிடம் நேரில் கொடுக்க ஆசைப்பட்டு வந்துள்ளனர். ஆனால், போலீசார் விட மறுக்கின்றனர்…’ என்றேன்.
“இதை யாரும் என்னிடம் சொல்லவே இல்லையே… இரவு நேரம் ஆகி விட்டது. அவர்களை கூப்பிடுங்கள்…’ என சொன்னவுடன், அப்போது, அங்கே இருந்த பாதுகாப்பு அதிகாரி, வெளியே நின்று கொண்டிருந்த மாணவர்களை அழைத்து வந்தார்.
வந்ததும், மாணவர்களின் படிப்பு மற்றும் அவர்களுடைய பெற்றோர் தொழில் போன்ற விவரங்களை சில நிமிடங்கள் பேசிய பின், “எவ்வளவு நிதி வைத்துள்ளீர்கள்?’ எனக் கேட்க, அப்போது தான் எனக்கும், தொகை எவ்வளவு என கேட்காமல் விட்டுட்டோமே? என்ற நினைவு வந்தது. அவர்கள் வைத்திருந்த காசோலை, வெறும் 901 ரூபாய் மட்டும் தான்.
“இந்த தொகையை வைத்துக் கொண்டா முதல்வரை சந்திக்க வந்தீர்கள்?’ என அவர்களிடம் நான் மெதுவாக கேட்டதும், அதை கவனித்த எம்.ஜி.ஆர்., என் பக்கம் திரும்பி, “தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல; பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் முக்கியம். அந்த எண்ணத்துடன் செயல்பட்ட இந்த மாணவர்களை நான் மிகவும் பாராட்டுகிறேன். பெரியவர் ஆனபிறகும் இந்த எண்ணம் தொடர வேண்டும்…’ என்றவாறு, காசோலையை பெற்று, அவர்களை வாழ்த்தி, வழி அனுப்பினார். மாணவர்களும் மகிழ்ச்சியுடன் திரும்பினர். லட்சக்கணக்கில் நிதி வழங்குவோர் தான், முதல்வரை சந்திக்க முடியும் என இருந்த நிலையை மாற்றி, சாதாரண மாணவர்களையும் சந்தித்து, அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றிய குணம் இருக்கிறதே… அங்கே தான் எம்.ஜி.ஆர் நிற்கிறார்!
– மதுரை. எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

நன்றி
dinamalar

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s