யார், யாருக்கு பங்கு: ராஜாவின் முக்கிய டைரி சிக்கியது!

மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில், யார், யாருக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது என்பது குறித்த விவரம் அம்பலமாகியுள்ளது. தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜாவின் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்ட டைரியில், இந்த பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் “2ஜி’ ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் அறிக்கை அளித்தது. எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டம் காரணமாகவும், சுப்ரீம் கோர்ட் எழுப்பிய கேள்விகள் காரணமாகவும், தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த ராஜா, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து, பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென, எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இதனால், கடந்த மூன்று வாரங்களாக பார்லிமென்ட் முடங்கியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ.,யின் செயல்பாடுகள் குறித்து சுப்ரீம் கோர்ட், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.

இதன் காரணமாக, ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணை வேகம் பிடித்துள்ளது. சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடியாக களத்தில் இறங்கினர். முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் டில்லி, பெரம்பலூரில் உள்ள வீடுகள், அவரது உறவினர்களின் வீடுகள், தொலைத்தொடர்பு துறை அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட 14 இடங்களில் ஒரே நேரத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, முன்னாள் அமைச்சர் ராஜாவின் பெர்சனல் டைரியையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும், அதில் வழக்குக்கு தேவையான முக்கிய விஷயங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் ராஜாவின் வீட்டில் நடந்த சோதனையின் போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

குறிப்பாக, ராஜாவால் தமிழில் எழுதப்பட்ட அவரது பெர்சனல் டைரிகளும் கைப்பற்றப்பட்டன. இவை, 2003லிருந்து 2010 வரையிலான காலங்களில் எழுதப்பட்டவை. அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலருக்கு கொடுக்கப்பட்ட பணப்பட்டுவாடா குறித்த விவரங்கள், இந்த டைரிகளில் இடம் பெற்று உள்ளன. இதில், அரசு வக்கீல்கள் இருவர் பற்றியும், டில்லி மற்றும் சென்னையில் உள்ள ஹவாலா டீலர்கள் பற்றிய விவரங்களும் இடம் பெற்றுள்ளன.

இவர்கள், முன்னாள் அமைச்சரின் சார்பில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் நேற்று முன்தினம் நடந்த சோதனையில், ராஜாவுக்கு நெருக்கமான சாதிக்பாட்சா, ஏழு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் தலைமையில் செயல்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம், குறுகிய காலத்தில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை கையாண்டதால், ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்தபின் தான் தகவல் தெரியவரும்.

இதுகுறித்து சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் கூறியதாவது: டில்லி, சென்னை, காஜியாபாத்தில் நடந்த சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இந்த ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். எந்த வகையான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்தும், ராஜாவிடம் விசாரணை நடத்தப்படுமா என்பது குறித்தும் தற்போது தெரிவிக்க முடியாது. சோதனையின் போது, சிலரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. இவ்வாறு அதிகாரி கூறினார்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s