பூமியின் தென்துருவத்தில் தேசியக் கொடியை ஏற்றி இந்தியர்கள் சாதனை!

தென்துருவ பனிப்பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்ட இந்திய ஆய்வாளர்கள் குழு, அங்கு தேசியக் கொடியை ஏற்றி சாதனை படைத்தனர். தென்துருவ பகுதி முழுவதும் பனியால் போர்த்தப்பட்டுள்ளதால், அங்கு கடும் குளிர் நிலவுகிறது. இதனால், மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்புகள் இல்லை. வெப்பநிலை மைனஸ் டிகிரியில் இருப்பதால், அங்கு பயணம் மேற்கொள்வது கடும் சவால்கள் நிறைந்தது. இந்த நிலையில், இந்திய ஆய்வாளர்கள் குழு ஒன்று தென்துருவ பனிப்பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டு, அங்கு தேசியக் கொடியை ஏற்றி சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து பயணக்குழுவில் இடம்பெற்ற இந்திய ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது: தென்துருவ பகுதிக்கு முதன்முதலில் பயணம் மேற்கொண்ட நார்வே ஆய்வாளர் ரோல்டு அமுந்த்சென் பயணம் மேற்கொண்டு நூறாண்டுகள் நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் விதத்தில், இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பயணத்தின்போது கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு வெப்பநிலை மைனஸ் 70 டிகிரியாக இருந்தது. அந்த குளிரை தற்போது நினைத்தாலும், உடல் தானாக நடுங்குகிறது.

அந்த அளவிற்கு கடும் குளிர். மேலும், அந்த பகுதிக்கு செல்வதற்கு ஏராளமான பனிமலைகளையும் கடந்து செல்ல வேண்டும். தென் துருவத்தின் மையப்பகுதியை அடைந்ததும் உலகமே நமது காலடியில் இருப்பது போன்ற ஒரு உணர்வு. அங்கு நமது மூவர்ண தேசியக்கொடியை ஏற்றினோம். அப்போது எங்களுக்குள் இனம்புரியா சந்தோஷம் ஏற்பட்டது. தென்துருவத்தில் முதல் தேசியக்கொடி ஏற்றிய குழு என்ற பெருமை எங்களுக்கு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

(dm)

Leave a comment