அரசு அலுவலகங்களில் எந்தப் பணிக்கு எவ்வளவு தொகை லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு அறிவிப்புப் பலகை வைத்தால், அந்தத் தொகையைக் கொடுத்து அலைச்சல் இன்றி பணியை முடித்துக் கொள்ளலாம் – இது அண்மையில் சுங்கத் துறை தொடர்புடைய ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்து. இதன் மூலம் நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்சத்தைப் பற்றி சாமானியனும் புரிந்துகொள்ள முடியும்.
அண்மையில் தன்னார்வ அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் லஞ்சம் அதிகம் புழங்கும் நாடுகளில் இந்தியா 85-வது இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்கள் முன்னேறி வந்துள்ளதற்காக மனதைத் தேற்றிக் கொள்ளலாம். அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பும், மக்களிடையே லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இந்தப் பட்டியலில் முன்னேற்றம் காண முடியாது. லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டோர் தொடர்பான செய்திகள் இல்லாமல் இப்போது தினசரிகளைப் பார்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பிறக்கும்போது கொடுக்கப்படும் பிறப்புச் சான்றிதழில் தொடங்கி, இறந்த பின்னர் வாங்கப்படும் இறப்புச் சான்றிதழ், சில பிரிவினருக்கு இறந்த பின்னர் வழங்கப்படும் ஈமச் சடங்குத் தொகை, விதவையர், முதியோர் ஓய்வூதியத்தொகை என எந்தச் சான்றிதழைப் பெறவும் லஞ்சம் கொடுக்க வேண்டும். லஞ்சம் கொடுக்காமல் எந்த அலுவலகத்திலும் பணிகளை முடிக்க முடியாது என்ற நிலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸôரின் அதிரடி நடவடிக்கைகளால் இப்போது மாறி வருகிறது. லஞ்சம் வாங்குவதில் மட்டும் பாரபட்சம் இல்லை. மேல் அதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரும் அவரவர் நிலைக்கேற்ப லஞ்சம் வாங்குகின்றனர். இதில் நாங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன என்று பெண்களும் களத்தில் உள்ளனர்.
மாவட்ட வருவாய் அதிகாரி, அறநிலையத் துறை இணை ஆணையர், உதவிக் கல்வி அலுவலர், பிரசவ வார்டு பெண் ஊழியர்கள் என லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டோர் பட்டியல் நீள்கிறது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, தமிழக அரசின் உத்தமர் காந்தி விருது பெற்ற நாமக்கல் டிஎஸ்பி சீனிவாசன், நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் ஆகியோர் லஞ்சம் வாங்கி, கைதாகி விருதுகளுக்கே தலைக்குனிவை ஏற்படுத்தினர். “லஞ்சம் வாங்கினேன் கைது செய்தார்கள்; லஞ்சம் கொடுத்தேன் விடுதலை செய்தார்கள்’ என ஓர் சொலவடை உண்டு.
இதை மெய்ப்பிப்பதுபோல, மதுரையில் ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் பெருமாள்சாமி, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கிலிருந்து அரசு சித்தமருத்துவரை விடுவிக்க, அவரிடமிருந்து லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார். இது அந்தத் துறை ஊழியர்களுக்கே தலைக்குனிவை ஏற்படுத்தியது. பல நாள்களாக, மாதங்களாக, ஆண்டுகளாக லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்த இவர்கள் மாட்டிக் கொண்டதற்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸôர் எடுத்த நடவடிக்கைகளும், பொதுமக்கள் கொடுத்த புகார்களுமே காரணம்.
லஞ்ச ஒழிப்பில் கடந்த சில ஆண்டுகளாக நாம் முன்னேறி வந்துள்ளபோதிலும், இது போதாது, லஞ்ச முதலைகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு மக்கள் அதிகம் புழங்கும் அலுவலகங்களில் உள்ள இடைத்தரகர்களைக் களையெடுப்பது அவசியம். பத்திரப் பதிவுத் துறை அலுவலகங்களில் வில்லங்கச் சான்று, நிலத்தின் மதிப்பீடு, பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு ஆவண எழுத்தர்கள் யாருடைய துணையும் இன்றி கணினி மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவங்களை நிறைவு செய்து, விண்ணப்பத்தாரரே சுயமாகக் கையொப்பமிட்டு, பணிகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என அண்மையில் பத்திரப் பதிவுத் துறை ஐ.ஜி.யாகப் பொறுப்பேற்ற சபீதா தெரிவித்துள்ளார். வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பழகுநர் உரிமம், நிரந்தர ஓட்டுநர் உரிமம், வாகனங்கள் பதிவு, பதிவு மாற்றம் செய்ய தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் வலைத்தளத்தில் உரிய படிவங்களைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பதாரரே நிறைவு செய்து கொடுத்தால் அதிகாரிகள் தேவையற்ற காரணங்களைக் கூறி, விண்ணப்பங்களை நிராகரிக்கும் நிலையே உள்ளது.
இந்த இரண்டு அலுவலகங்களிலும் இடைத்தரகர்களின்றி பணிகளைச் செய்ய வேலையில்லாத பட்டதாரிகளை நியமித்து, அவர்களின் பணிக்குத் தக்க கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸôரும் லஞ்சம் வாங்குவோரைக் கையும் களவுமாகப் பிடிக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். லஞ்சம் பெறுவோர் குறித்து ஆதாரப்பூர்வமாகப் புகார் அளித்தாலும்கூட அந்த வழக்கில் மெத்தனமாகவே நடந்து கொள்கின்றனர். இது களையப்பட வேண்டும். மேலும், புகார் கொடுத்தால் மட்டுமே ஆய்வுக்குச் செல்வது என்ற போக்கை மாற்றி, தங்களது எல்லைக்கு உள்பட்ட இடங்களில் உள்ள பல்வேறு அலுவலகங்களிலும் ஊழல் தடுப்பு போலீஸôர் திடீர் ஆய்வு நடத்த வேண்டும். இதுகுறித்த தகவல் பரவினாலாவது பல்வேறு அலுவலகங்களிலும் அன்றைய தின பணியாவது லஞ்சமின்றி நடைபெற வாய்ப்புள்ளது. லஞ்சத்தால் நாட்டில் ஏழ்மை நிலை மேலும் அதிகரித்தால், வெளிநாட்டு முதலீடுகள் பாதிக்கும் என்பதைப் பொதுமக்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.
லஞ்சம் தருவதையும், வாங்குவதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனப்போக்கை மாற்றி, ஒவ்வோர் இந்தியக் குடிமகனும் லஞ்சத்துக்கு எதிரான ஆயுதத்தைக் கையிலெடுப்பதன் மூலம் இந்தியாவின் உயர்வுக்கு வழிகோலுவோம் என சபதமேற்க வேண்டும்.
(di)