இதுவல்லவா தலைமை!

ஆங் சான் சூகி.மியான்மாரில் இராணுவ சர்வாதிகாரிகளை எதிர்த்து கடந்த 20 ஆண்டுகளாகப் போராடிவரும் இந்தச் சுதந்திரப் போராளி, தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.நமது அண்டை நாடான மியன்மாரில்(பழைய பர்மா) நடந்துவரும் மிகப்பெரிய சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்து மனித இனத்தின் சுதந்திர,சமத்துவ,சமதர்மக் கோட்பாடுகளுக்காகக் குரலெழுப்ப வேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு.

யார் இந்த ஆங் சான் சூகி? போக்யோக் ஆங் சாங்,நமது நேதாஜி,சுபாஷ் சந்திரபோஸ்க்கு நிகரான தேசியவாதி. புரட்சியாளர்.அன்றைய பர்மாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போர் தொடுக்க,நேத்தாஜி இந்திய தேசிய இராணுவத்தை ஏற்படுத்தியதுபோல் பர்மா சுதந்திர இராணுவத்தை ஏற்படுத்திப் போரிட்டவர்.பர்மாவின் ஸ்தாபகர் என்று கொண்டாடப்படுபவர்.நமது இந்தியாவில் பண்டித ஜவஹர்லால் நேருபோல,பர்மாவில் ஆங் சான், பிரிட்டிஸ் பிரதமர் கிளெமெண்ட் அட்லியுடன் பர்மாவின் சுதந்திரத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர். லண்டனில் இருந்து பர்மா திரும்பும் வழியில், டில்லியில் ஆங் சான் ஒரு பேட்டி அளித்தார்.

அதில் அவர், இந்தியாவைப்போல டொமினியன் அந்தஸ்துக்கு பர்மா தயாராக இல்லை என்றும்,பூரண சுதந்திரம்தான் எங்கள் ஒரே கோரிக்கை என்றும் தெளிவுபடுத்தி,மகாத்மா காந்தியையே ஆச்சரியப்படுத்தியவர்.பர்மா சுதந்திரம் அடைவதற்கு சில நாட்கள் முன்பு ஆங் சான் படுகொலை செய்யப்பட்டதை இன்றுவரை,அந்த நாட்டு மக்கள் மறக்கவும் இல்லை. மன்னிக்கவும் இல்லை அவரது படுகொலையிலிருந்து 1990 இல் இப்போதைய இராணுவ ஆட்சியாளர்களும் தங்களது சர்வாதிகாரத்தை நிறுவியதுவரை, எல்லா பர்மிய ஆட்சியாளர்களும் நாங்கள் ஆங் சானின் வழியெற்றி நடப்பதாகக் கூறித்தான் ஆட்சி அமைத்தனர்.ஆங் சானின் நினைவை முற்றிலுமாக அழிக்க இன்றைய இராணுவ ஆட்சியாளர்கள் கடந்த 20 ஆண்டுகளாக முயன்றும்,இன்றும் மியன்மாரிலுள்ள பல வீடுகளில் ஆங் சானின் படம்தான் வரவேற்பறைகளை அலங்கரித்து வருகின்றன.

1988 இல் நடந்த மக்கள் புரட்சியின்போது பேராளிகள் கையில் ஆங் சானின் படத்தை ஏந்தியபடி பேரணிகளில் ஊர்வலம் வந்தனர்.அதைப் பார்த்துப் பயந்த இராணுவ அரசு, அப்போதுதான் அதுவரை பர்மிய நாணயத்தில் இருந்த அவரது படத்தை அகற்றியது.பர்மா என்கிற பெயரையே மியன்மார் என்று மாற்றியது.அந்த ஆங் சானின் கடைசி மகள்தான் சூகி. தனது இரண்டாவது வயதில் தந்தையை இழந்த சூகி,இந்தியாவிலும், இல்கிலாந்திலும் தனது படிப்பைத் தொடர்ந்தார்.லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, மைக்கேல் அரிஸ் என்கிற திபெத்திய ஆராய்ச்சியாளர் ஒருவரை மணந்துகொண்டார் இவர்.அலெக்சாண்டர் கிம் என்று இவருக்கு இரண்டு மகன்கள்.லண்டனில் நிம்மதியான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வந்த சூச்சி,உடல்நலமில்லாத தனது தாயைப் பார்க்க நாடு திரும்பியபோது,சுதந்திரத்துக்கான போராட்டம் அங்கே வெடித்தது.1988 இல் சுமார் 5,000 போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தனது தந்தையின் வழியில் கொடுமை கண்டு பொங்கி எழுந்தார் சூகி.அவர் முன்வரிசைப் போராளியாக வந்து நின்றபோது,இராணுவ ஆட்சியாளர்கள் அதிர்ந்தனர்.1990 இல் பொதுத்தேர்தல் நடத்த ஒப்புக்கொண்டபோது சூகி தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதித்தனர்.அப்படியும் 82 சதவீதம் வாக்குகளுடன் சூகியின் சுதந்திரத்துக்கான தேசியக் கட்சி வெற்றி பெற்றபோது அந்தத் தேர்தலை,இராணுவம் ஏற்றுக்கொள்ளவில்லை.சூகி அவரது வீட்டிலேயே தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். தனிமைச் சிறை என்றால் எப்படி தெரியுமா? ஓர் ஏரிக்கறையில் அமைந்திருக்கும் அந்த 90 ஆண்டுகள் பழமையான வீட்டில் அவரும் அவருடைய வயதான இரண்டு பணிவிடையாளர்களும் மட்டுமே. வீட்டைவிட்டு வெளியே தோட்டத்துக்குகூட அவர் போகக்கூடாது.வக்கீல், டாக்டர் ஆகிய இருவர் மட்டும்தான் அவரைச் சந்திக்க முடியும்.அடிக்கடி வேண்டுமென்றே மின்சாரம் துண்டிக்கப்படும். மெழுகுவர்த்திதான் வெளிச்சத்துக்கு!

1999 இல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத் தருவாயிலிருந்த அவரது கணவர் மைக்கேல் அரிஸ் தனது மனைவியைப் பார்க்க விரும்பினார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.மீண்டும் தாய்நாடு திரும்ப மாட்டேன் என்று உறுதிமொழி அளித்தால் சூகி லண்டனுக்குப் போக அனுமதி அளிப்பதாகக் கூறியது இராணுவம்.மறுத்துவிட்டார் சூகி.கணவரை மட்டுமல்ல,தனது இரண்டு மகன்களையும்,பேரக் குழந்தைகளையும் கடந்த 10 ஆண்டுகளாகச் சந்திக்கவில்லை அவர். சூகிக்குத் தனது குடும்பத்தைவிட தேசமும்,மக்களும்தான் பெரிது. இப்போதுகூடத் தனது தாயைச் சந்திப்பதாற்காக பெங்கொக்கில் காத்திருக்கிறார் சூகியின் இளையமகன் கிம் அரிஸ். அவருக்கு இன்னும் நுழைவு அனுமதி அளிக்கப்படவில்லை.

1989 இல் முதன் முறையாகக் கைது செய்யப்பட்டதுமுதல் மூன்று முறை விடுதலை செய்து உடனே மீண்டும் கைது செய்யப்பட்டுவிட்டார் சூகி. யங்கூனை (ரங்கூன்) விட்டு வெளியே போகக்கூடாது என்று இராணுவம் தடை விதித்தபோது,ஆறு நாட்கள் காரிலேயே இருந்து போராடிக் கைதானவர்.அடக்குமுறையும்,அதிகாரமும் இவரிடம் தோற்றதுதான் மிச்சம். தனிமைச் சிறையில் அடைத்ததால் மக்கள் மனச்சிறையிலிருந்து இந்த மியன்மார் சுதந்திரக் குயிலின் ஓசையை ஒடுக்கிவிட முடியவில்லை இராணுவத்தால். இப்போதுகூட இந்த விடுதலை எத்தனை நாட்கள் என்பதுதான் கேள்வி.

“சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்று ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்னாள் இந்தியாவில் எழுந்த குரல் இப்போது மியான்மாரில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. சுதந்திரம்,ஜனநாயகம் என்று மார்தட்டிக் கொள்ளும் உலக நாடுகள்,மியன்மாரில் நடக்கும் அடக்குமுறைகளை வேடிக்கை பார்க்கிறது. சூகிக்கு நோபல் பரிசு கொடுத்துவிட்டால் ஆயிற்றா? மனித உரிமை பற்றி வாய்கிழியப் பேசிவிட்டால் போதுமா? மியன்மாரில் நடக்கும் அடக்குமுறைக்கு எதிராக உலகம் ஏன் கொதித்தெழவில்லை?

இதைப்பற்றியெல்லாம் ஆங் சான் சூகி கவலைப்படுவதாக இல்லை. அவரது போராட்டம் தொடரும். அவருக்கு நமது ஆதரவையும் தெரிவிப்போம்.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s