Tag Archives: உள்ளாட்சித் தேர்தல் 2011

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை….

தமிழகத்தில் 2 கட்டங்களாக நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (வெள்ளிக்கிழமை) எண்ணப்படுகின்றன.

மாநிலத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் என 1,32,402 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருந்தது. இதில் 19,646 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மீதமுள்ள 1,12,697 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தப் பதவிகளுக்கு மொத்தம் 4.11 லட்சம் பேர் போட்டியிட்டனர். இதில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன.

உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு கட்டங்களையும் சேர்த்து பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 78.5 சதவீதமாகும்.

முதல் கட்டத் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 85 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை சென்னை குறைவான அளவாக 51.63 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாயின. வேலூர் மாநகராட்சியில் தான் அதிகபட்சமாக 71 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

இந்த வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. சென்னையைப் பொருத்தவரை 200 வார்டுகள் மற்றும் மேயர் பதவிக்கு பதிவான வாக்குகள் அனைத்தும் 18 மையங்களில் எண்ணப்பட உள்ளன.

மதுரை மாநகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட வார்டுகளுக்கு பதிவான வாக்குகள் 3 மையங்களிலும், பிற மாநகராட்சிகளில் பதிவான வாக்குகள் தலா ஒரு மையத்திலும் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு சுற்று முடிந்ததும் முன்னணி நிலவரம் அறிவிக்கப்படும்.

இந்த மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக போலீசார் தவிர வெளி மாநில போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை பணிகளைப் பார்வையிட 6 மாநிலங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள் தமிழகம் வந்துள்ளனர்.

சென்னையில் 18 இடங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படவுள்ளது.

இணையதளத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு: சோ. அய்யர்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகள் மற்றும் மேயர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 18 மையங்களில் நடைபெறுகிறது. பச்சையப்பன் கல்லூரி, லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு வாக்கு எண்ணும் மையங்களை மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாநகர காவல் துறை ஆணையர் திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் சோ. அய்யர் கூறியதாவது:

18 வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 35 அரங்குகளில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும். ஒவ்வொரு அரங்கிலும் 6 முதல் 10 மேஜைகள் வரை போடப்பட்டு மேயர் வேட்பாளர்களுக்கு தனியாகவும், வார்டு உறுப்பினர்களுக்கு தனியாகவும் மேஜைகள் அமைத்து ஒரு சுற்றுக்கு 6 முதல் 10 மேஜைகளுக்கான வாக்குகள் எண்ணப்படும்.

இந்த வாக்கு எண்ணும் போது வீடியோ, வெப் கேமரா மூலம் பதிவு செய்யப்படும். வாக்குகள் எண்ணும் பணிகளை பார்வையிடுவதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள 35 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் முடிவுகளை இணைய தளத்தின் மூலம் இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் உடனடியாக தெரிந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு வாக்கு எண்ணிக்கையானது வெளிப்படையாகவும், உண்மையாகவும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கைக்கு நான்காயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது போலவே வாக்கு எண்ணிக்கையும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடைபெறும் இவ்வாறு சோ. அய்யர் தெரிவித்தார்.

(tt)

யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல் காணாமல் போன தேமுதிக

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி இடங்களில் அதிமுக பெருவாரியாக வெற்றி பெற்றுவரும் நிலையில் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டசபைத் தேர்தலை சந்தித்து தற்போது தனிதத்துப் போட்டியிட்ட தேமுதிக மிகப் பெரிய அடியை வாங்கியுள்ளது.

மாநகராட்சிகளிலும் சரி, நகராட்சிகளிலும் சரி இந்தக் கட்சி அதிமுகவின் வெற்றியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. பேரூராட்சிகளில்தான் இக்கட்சிக்கு ஓரளவு வார்டுகள் கிடைத்து வருகின்றன.

10 மாநகராட்சி மேயர் தேர்தலிலும் தேமுதிக 3வது மற்றும் 4வது இடத்தில்தான் உள்ளது. இங்கு வார்டுகளிலும் கூட தேமுதிக வேட்பாளர்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர்.

பேரூராட்சித் தலைவர் பதவியைப் பொறுத்தவரை ஒரு இடத்திலும் தேமுதிக முன்னணியில் இல்லை. அதேசமயம் கவுன்சிலர் பதவியிடங்கள் ஓரளவு இக்கட்சிக்குக் கிடைத்துள்ளது.

தபால் ஓட்டுக்களிலும் கூட தேமுதிகவுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் கிடைக்கவில்லை. பல இடங்களில் ஓட்டே கிடைக்கவில்லை.

தேமுதிக வாக்குப் பிரிக்கும் கட்சியாகவே மீண்டும் மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை அதிமுகவின் வாக்குகளை தேமுதிக எதுவும் செய்யவில்லை. மாறாக திமுகவின் வெற்றியைத்தான் இந்த முறை தேமுதிக பல இடங்களில் பாதித்துள்ளது. கடந்த காலங்களில், அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரும் ஓட்டையைப் போட்ட தேமுதிக இந்த முறை அதிமுகவை விட்டு விட்டு திமுகவின் வெற்றிவாய்ப்பை பல இடங்களில் பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(tt)

10 மாநகராட்சியையும் இழந்து 2வது இடத்தைப் பிடித்து திமுக படு தோல்வி!

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் திமுக மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. 2006 தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற அக்கட்சி இந்த தேர்தலில் 10 மாநகராட்சிகளையும் இழந்து பெரும் அடியை வாங்கியுள்ளது. அது உருவாக்கிய புதிய மாநகராட்சிகளிலும் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது திமுக. பெரும்பாலான இடங்களில் திமுகவுக்கு 2வது இடமே கிடைத்துள்ளது.

கடந்த தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றதிமுகவால் இந்த முறை ஒரு மாநகராட்சி மேயர் பதவியைக் கூட கைப்பற்ற முடியவில்லை. மேலும் கடந்த முறை மிக படோடபமாக வெற்றி பெற்ற சென்னையை இந்த முறை மிகப் பரிதாபமாக அது இழந்துள்ளது. ஆரம்பத்தில் வேலூரில் மட்டும் முன்னணியில் இருந்தது. ஆனால் அதுவும் பின்னர் கை நழுவிப் போனது. அனைத்து இடங்களிலும் அக்கட்சி 2வது இடமே கிடைத்தது.

மதிமுகவிடம் படு தோல்வி

இதை விட கேவலமாக குளித்தலை நகராட்சித் தலைவர் தேர்தலில் மதிமுகவிடம் தோல்வியைத் தழுவியது திமுக.

சில இடங்களில் சுயேச்சைகள் திமுகவை விட முன்னணியில் இருந்தனர். கூட்டணியை இழந்ததால் ஓரளவு பாதிப்பை சந்தித்துள்ளது திமுக என்பது இந்தத் தேர்தலி்ல கண்கூடாகத் தெரிந்து விட்டது. அதேசமயம், கூட்டணியைப் பிரிந்ததால் அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை, மாறாக மிகப் பெரிய வெற்றியை அது பெற்றுள்ளது.

பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை சேர்த்துக் கொண்டு தேர்தலை சந்தித்திருந்தால் திமுகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்திருக்கலாம். ஆனால், பாமகவும், காங்கிரஸும் இந்தத்தேர்தலில் மகா மோசமான தோல்வியைத் தழுவி அவர்களின் வாக்கு வங்கி ஒரு மாயை என்பதை நிரூபித்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் ஒருகாலிப் பெருங்காய டப்பா என்பதை காட்டி விட்டது.

வார்டு உறுப்பினர் பதவியைப் பொறுத்தவரை கணிசமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது திமுக. அதிமுகவுக்கு இணையாக வார்டு உறுப்பினர் பதவியை போட்டி போட்டு திமுக வாங்கியுள்ளது.

அரசு ஊழியர்கள் ஆதரவு திமுகவுக்கே

திமுகவைப் பொறுத்தவரை அது முன்னணியில் இருந்த ஒரே ‘ஏரியா’ தபால் வாக்குகள் மட்டும்தான். தமிழகம் முழுவதும் தபால் ஓட்டுக்கள் பெரும்பாலானவை திமுகவுக்கே கிடைத்துள்ளது. இது பெரும் வியப்பைத் தருகிறது. ஆட்சி மாறியும் கூட அரசு ஊழியர்கள் தொடர்ந்து திமுகவுக்கே ஆதரவாக இருந்து வருவது இதன் மூலம் வெளிப்படையாகியுள்ளது.

(tt)

ஓட்டு சீட்டு மாறிய இடத்தில் விறுவிறு மறுவாக்குப்பதிவு

கோவில்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்குச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் அங்கு இன்று மறுவாக்குப் பதிவு நடந்தது.

கோவில்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சத்திரப்பட்டி ஊராட்சி 136வது வாக்குச்சாவடியில் 1வது வார்டு மற்றும் 3வது வார்டுகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. 3வது வார்டு உறுப்பினர் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இந்த வார்டில் உள்ளவர்களுக்கு 3 வாக்குச்சீட்டுகள் மட்டுமே கொடுக்க வேண்டும்.

ஆனால் அங்குள்ள தேர்தல் அலுவலரின் கவனக்குறைவால் 1வது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சீட்டுகளும் சேர்த்து 3வது வார்டு வாக்காளர்களுக்கு மொத்தம் 4 வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டன. வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் 1வது வார்டுவாக்களர்களின் வாக்குச்சீட்டுகள் குறைந்ததால் குளறுபடி நடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சத்திரப்பட்டி 136வது வாக்குச்சாவடியில் 1வது வார்டுக்கு மட்டும் இன்று மறுவாக்குப் பதிவு நடந்தது.

…………..

வாக்குச் சீட்டு குளறுபடியால் பரமேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு இன்று மறுவாக்குப்பதிவு நடந்தது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பரமேஸ்வரபுரம் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் (17ம் தேதி) நடந்தது. தலைவர் பதவிக்கு கல்யாணி, சந்தோஷ் ஆகிய 2 பேர் போட்டியிட்டனர். ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஓட்டு பதிவு தொடங்கியது முதல் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடந்தது.

இந்நிலையில் 69ஏ டபி்ள்யூ என்ற வாக்குச்சாவடியில் வழங்கப்பட்ட தலைவர் பதவிக்கான வாக்குச் சீட்டுகளில் இரண்டு சின்னங்களுக்கு பதிலாக 5 சின்னங்கள் இருந்தன. வாக்குச் சீட்டுகள் மாறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தேர்தல் அலுவலர் ராஜேந்திரன் அந்த வாக்குச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடத்த வேண்டும் என்று வேட்பாளர்கள் வலியுறுத்தினர். இது குறித்து நெல்லை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான செல்வராஜ் ஆலோசனை நடத்தி அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடந்த உத்தரவிட்டார். அதன்படி அங்கு இன்று மறுவாக்குப்பதிவு நடந்தது.

வாக்குப்பதிவு துவங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். ஓட்டு பதிவு தொடங்கிய 1 மணி நேரத்தில் 200 பேர் வாக்களித்தனர். காலை 10 மணிக்குள் மொத்தமுள்ள 372 வாக்காளர்களில் 256 பேர் வாக்களித்துவிட்டனர்.

தேர்தல் தகராறு: வாலிபருக்கு கத்தி குத்து

ஆலங்குளம் அருகே உள்ள காடுவெட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 2 பேர் போட்டியிடுகிறார்கள். இதற்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது. அப்போது ஒரு தரப்பைச் சேர்ந்த ஜோசப் என்பவர் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறப்படுகிறது. இதை மற்றொரு தரப்பைச் சேர்ந்த நவராஜ் என்பவர் தடுத்தாராம். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு தரப்பினர் நவராஜை கத்தியால் குத்தினார்கள் என்று கூறப்படுகிறது.

இதி்ல் காயமடைந்த நவராஜ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து கோமதி ஆனந்தன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(tt)

வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன், மைபேனா, உணவு பொட்டடலம், தண்ணீர் பாட்டில்களுக்கு தடை

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்போன், மை பேனா எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடந்தது. தேர்தல் முடிந்ததும் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்போன், மை பேனா, உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட வேறு எந்த பொருட்களையும் எடுத்துச் கொண்டு செல்ல முகவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கொண்டு சென்றால் அவற்றை பறிமுதல் செய்யுமாறு போலீசாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை குறித்துக் கொள்ள பால் பாயிண்ட் பேனா, பென்சில் மற்றும் வெள்ளை தாள் எடுத்துச் செல்லலாம். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் முறையை கேரள தேர்தல் அதிகாரிகள் ஆய்வு

தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகளை கேரள மாநில தேர்தல் அதிகாரிகள் குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது.

நேற்று தமிழகத்தில் 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. குமரி மாவட்டத்தில் நடந்த வாக்குப்பதிவை கேரள மாநில தேர்தல் ஆணைய கூடுதல் செயலாளர்கள் உன்னிகிருஷ்ண நாயர் மற்றும் தேர்தல் ஆணைய பிரிவு அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர்.

இந்த குழுவினர் நாகர்கோவில் நகராட்சிக்கு வாக்குப்பதிவு நடந்த வெட்டூர்ணிமடம் ரட்சனைய சேனை மேல்நிலைப்பள்ளியில் உள்ள 3 வாக்குச்சாவடிகளையும், வேட்டூர்ணிமடம் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 6 வாக்குச்சாவடிகளையும் பார்வையிட்டனர். அங்கு பூத் சிலிப் வழங்குதல், வாக்குச்சாவடி அலுவலர்களின் பணிகள், வாக்காளர்களை ஒழுங்குபடுத்த நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஊர்காவல் படையினரின் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தை பார்வையிட்டு புகார்கள் பதிவு செய்யும் முறை, நடவடிக்கை எடுக்கும் முறை குறித்து கேட்டறிந்தனர். புகார்கள் பெற வைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி வசதி மற்றும் தொலைபேசி வசதிகளை பார்வையிட்டனர். வாக்காளர்கள் விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், கேரளாவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலை அங்கு நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்துவதற்கான வழிமுறைகளை மேம்படுத்திக் கொள்ள இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் நடத்தப்படும் தேர்தல் முறைகளில் பின்பற்றப்படும் குறிப்பிட்ட சில அம்சங்களை கேரள தேர்தலிலும் பயன்படுத்தும் வகையில் இந்த ஆய்வு இருக்கும் என்றார்.

(tt)